‘உறுதிகொள்' விமர்சனம்
Casting : Kishore, Megana, Kai Thennavan, Kali Venkat
Directed By : R.Ayyanaar
Music By : Jut Vinigar
Produced By : APK Films and Sneham Films
ஏபிகே பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், ‘கோலி சோடா’ கிஷோர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் ‘உறுதிகொள்’.
12 ம் வகுப்பு படிக்கும் கிஷோர் படிப்பில் மக்காக இருந்தாலும், வால்தனம் செய்வதில் கில்லாடியாக இருக்கிறார். இதனால், அப்பாவிடமும் ஆசிரியரிடமும் அடிவாங்கிக் கொண்டிருப்பவர், 10 வகுப்பு மாணவியான ஹீரோயின் மேகனாவை காதலிக்கிறார். காதலால் எப்படியாவது 12 ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுவிட வேண்டும், என்று நினைக்கும் கிஷோர், பொது தேர்வில் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறார். இதனால், அவரது அப்பா வீட்டை விட்டு துறத்த, பசங்களுடன் சேர்ந்து குடிப்பது, கோலி விளையாடுவது என்று இருப்பவர், அடிதடி வழக்கில் சிறைக்கும் சென்று வருகிறார்.
இதற்கிடையே, கிஷோரின் காதலி, சகோதரி உள்ளிட்ட மூன்று பெண்கள் திடீரென்று காணாமல் போகின்றார்கள். அவர்களை தேடிச் செல்லும் போது நடக்கும் சம்பவங்களால் கிஷோரின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அப்படி அங்கு என்ன நடந்தது, காணாமல் போன பெண்களின் நிலை என்ன, என்பது தான் ‘உறுதிகொள்’ படத்தின் மீதிக்கதை.
படிக்கும் வயதில் படிக்கவில்லை என்றால், வாழ்க்கை எப்படி மாறும் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர், சுற்றுலா தளங்களில் உள்ள மறைவான பகுதிகளில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிப்பதோடு, பெண்களை கற்பழிக்கும் சமூக விரோத கும்பல் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
பள்ளி மாணவராக நடித்துள்ள கிஷோர் தனது பணியை சிறப்பாக செய்திருப்பது போல, அவரது நண்பராக நடித்துள்ள குண்டு தம்பியும் நடிப்பில் அசத்தியிருப்பதோடு, காமெடியிலும் கலக்கியிருக்கிறார். ஹீரோயின் மேனகா, ஹீரோவின் சகோதரி என்று படத்தில் நடித்திருந்த பெண்கள் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் வந்தாலும், காளி வெங்கட் வரும் அனைத்து காட்சிகளும் சிரிப்பால் திரையரங்கமே அதிர்கிறது.
12 ம் வகுப்பு மாணவனும், 10 ம் வகுப்பு மாணவியும் காதலிப்பது என்பது சற்று உறுத்தலாக இருந்தாலும், பள்ளி எப்பிசோட்டை இயக்குநர் காமெடியாக கையாண்டுள்ளார். அதிலும், அரையாண்டு பரிட்சையின் போது மாணவர்கள் அடிக்கும் லூட்டி ரொம்பவே பியூட்டியாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் பாண்டி அருணாச்சலம் செஞ்சி கோட்டையையும், அதன் சுற்றுவட்டார பகுதிகளையும் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரொம்ப குறைவாக இடம்பெறும் செஞ்சி கோட்டை லொக்கேஷனிலேயே முழு படத்தையும் முடித்திருப்பவருக்கு சபாஷ் சொல்லலாம். ஜுட் வினிகரின் இசை கதைக்கு ஏற்ப உள்ளது. திருவிழா பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
பரபரப்பாக தொடங்கும் படம், பிளாஷ் பேக் தொடங்கியதும் சற்று கலகலப்பாக நகர்ந்தாலும், ஹீரோவின் காதல் விவகாரம் உள்ளிட்ட காட்சிகள் படத்தை சற்று பலவீனமாக்கிவிடுகிறது. பிறகு காணாமல் போகும் பெண்களை ஹீரோ தேடிச் செல்ல, அதன் பிறகு வரும் காட்சிகள் மனதில் ஒட்டாமல் போகிறது. திருப்புமுனைக்காக கூடுதலாக ஒரு வில்லனை இயக்குநர் இணைந்திருந்தாலும், அந்த கதாபாத்திரம் தேவையில்லாதது போல் தோன்றுவதால் படத்தின் இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.
பொது இடங்களில் அத்துமீறும் காதலர்கள் எப்படி சமூக விரோத கும்பலால் பாதிக்கப்படுகிறார்கள், என்பதை எச்சரிக்கையாக சொல்லியிருக்கும் இயக்குநர், படிக்கும் பருவத்தில் படிப்பதை தவிர மற்ற வேலைகளை பார்த்தால், வாழ்க்கை என்னவாகும் என்ற மெசஜை இயக்குநர் ஆர்.அய்யனார், கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், தான் சொல்ல வந்த விஷயத்தை சற்று தடுமாற்றத்துடன் இயக்குநர் அய்யனார் சொல்லியிருந்தாலும், படம் ஓகே, என்று ரசிகர்கள் சொல்லும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜெ.சுகுமார்