‘உயிர் தமிழுக்கு’ திரைப்பட விமர்சனம்
Casting : Ameer, Chandini Sridharan, Anandaraj, Raj Kapoor, Imman Annachi, Saravana Sakthi, Kanja Karuppu
Directed By : Adham Bava
Music By : Vidyasagar
Produced By : Moon Pictures
கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார். அவருக்காக நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி வார்டு கவுன்சிலராக வெற்றி பெறுபவர், காதலிலும் வெற்றி பெறுகிறார். ஒரு பக்கம் சாந்தினி உடனான காதலை வளர்ப்பவர், மறுபக்கம் அரசியலிலும் வளர்ந்து வருகிறார். ஆனால், அமீரின் காதலுக்கு சாந்தினியின் தந்தையான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஆனந்தராஜ் முட்டுக்கடை போடுகிறார். இதனால், அமீருக்கும், ஆனந்தராஜுக்கும் இடையே பகை ஏற்படுகிறது.
இதற்கிடையே, ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது. சாந்தினியும் தனது தந்தையை கொலை செய்தது அமீர் தான் என்று நம்புகிறார். உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தன் மீது விழுந்த கொலை பழியை துடைப்பதற்காக, கட்சி மேலிடம் வழங்கிய இடைத்தேர்தல் வாய்ப்பை அமீர் நிராகரிக்கிறார். ஆனால், அமீர் தான் உண்மையான குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்காக, தனது தந்தை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக்காட்டுகிறேன், என்று சாந்தினி சபதம் எடுக்க, தன்னை நிரபராதி என்று நிரூபிக்க சாந்தினியை தோற்கடிப்பதற்காக அமீரும் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார். இறுதியில், காதலுக்காக அரசியல் களத்தில் இறங்கிய அமீரின் காதல் மற்றும் தேர்தல் இரண்டும் என்னவானது? என்பதை தமிழக அரசியல் சம்பவங்களைக் கொண்டு சிரிக்க சிரிக்க சொல்வது தான் ‘உயிர் தமிழுக்கு’.
புரட்சிகரமான வேடங்களில் நடித்திருக்கும் அமீர், முதல் முறையாக அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் அசால்டாக செய்து கமர்ஷியல் ஹீரோவாக முத்திரை பதித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் பாண்டியனாக அறிமுகமாகி பிறகு மாவட்ட செயலாளராக உருவெடுக்கும் அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் கதாநாயகி உடனான காதல் வாழ்க்கை என இரண்டு தளங்களிலும் தனது பங்களிப்பை முழுமையாக செய்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சாந்தினி ஸ்ரீதரன், அள்ள அள்ள குறையாத அழகு. ஆனால், முதல்பாதி படத்தில் மெல்லிய உடலோடு இருப்பவர், இரண்டாம் பாதி படத்தில் இரட்டிப்பு உடலமைப்போடு வந்து அதிர்ச்சியளிக்கிறார். (அந்த அளவுக்கு அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் போல) நடிப்பதை காட்டிலும் சிரிப்பதற்கு தான் அதிகமான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருபப்தால், சிரித்தே ரசிகர்கள் நெஞ்சத்தில் இடம் பிடித்து விடுகிறார்.
ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு என அரசியல்வாதி வேடங்களுக்காகவே கோலிவுட்டில் வலம் வரும் நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் முனுமுனுக்க வைக்கிறது. பின்னணி இசை கதையோட்டத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தேவராஜ், அமீரின் நடனத்தை எப்படி காட்சிப்படுத்தினால் ரசிக்கும்படி இருக்கும் என்பதை சரியான முறையில் கையாண்டிருக்கிறார். அதேபோல், கதாநாயகியையும் சில இடங்களில் காட்டியிருக்கலாம்.
தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் காதல் கதையை ஜாலியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆதம்பாவா, மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவிடத்தில் தியானம், அதே நினைவிடத்தில் ஒருவர் போட்ட சபதம், ஆன்மீ அரசியல் உள்ளிட்ட பல விசயங்களை திரைக்கதையுடன் சேர்த்து சிரிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் மையக்கருவில் ’தாய்மாமன்’ படத்தின் சாயல் தெரிந்தாலும், சத்யராஜ் - கவுண்டமணி போன்ற காமினேஷன் கெமிஸ்ட்ரி படத்தில் இல்லாமல் போனது படத்திற்கு சற்று குறையாகவே இருக்கிறது. ஆனால், தனி ஒரு ஆளாக குறைகளை எல்லாம் நிறைகளாக மாற்றியிருக்கிறார் படத்தின் நாயகன் அமீர்.
மொத்தத்தில், ’உயிர் தமிழுக்கு’ பழைய அரசியலாக இருந்தாலும் தற்போதைய டிஜிட்டல் இந்தியா அரசியலிலும் வெற்றி பெறும்.
ரேட்டிங் 35