’உழைப்பாளர் தினம்’ திரைப்பட விமர்சனம்
Casting : Santhosh Nambirajan, Kushi, Anburani, Karthik Sivan, Singapore Durairaj, Director Sampathkumar
Directed By : Santhosh Nambirajan
Music By : Masood Zamsa
Produced By : Singawood Productions, Nambirajan International Cinemas, Rock Entertainments - Rajendhiran Karthik Sivan, Singapore Durairaj, Premchand Nambirajan, Rajendhiran Neethipandi, Kaja, sarash
குடும்பத்திற்காக சொந்த ஊரை விட்டுவிட்டு பல வருடங்களாக சிங்கப்பூரில் பணியாற்றும் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன், தனது சொந்த ஊரில் கடை ஒன்றை கட்டும் முயற்சியில் இருக்கிறார். அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க, திருமணமான இரண்டு வாரங்களில் மீண்டும் சிங்கப்பூர் பயணிக்கும் அவர், அங்கு தனது சொந்த கடை கனவுக்காக கடுமையாக உழைக்கிறார். இதற்கிடையே அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தகவல் தெரிந்தாலும் தன்னால் உடனடியாக ஊருக்கு கிளம்ப முடியாத சூழலில் சிக்கி தவிக்கும் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன், என்ன செய்தார்?, அவரது சொந்த கடை கட்டும் கனவு நினைவானதா?, அவரது மனைவிக்கு என்ன ஆனது? என்பதை குடும்பங்களுக்காக கடல் கடந்து சென்று உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களின் பறிதவிப்பாக சொல்வதே ‘உழைப்பாளர் தினம்’.
‘டூலெட்’, ‘காதலிசம்’, ‘வட்டார வழக்கு’ என தனது ஒவ்வொரு படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கதையின் நாயகனாக நடித்து கவனம் ஈர்த்து வரும் சந்தோஷ் நம்பிராஜன், இதில் குடும்பத்திற்காக வெளிநாட்டில் பலவித ஏக்கங்களுடன் உழைத்துக் கொண்டிருப்பவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். சொந்த பந்தங்களை விட்டுவிட்டு கடல் கடந்து சென்று உழைப்பவர்கள், கடுமையான உழைப்பு மூலம் உடல் ரீதியாக மட்டும் இன்றி மனதளவிலும் எத்தகைய வலி மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், என்பதை தனது இயல்பான நடிப்பு மற்றும் உடல் மொழி மூலம் ரசிகர்களிடம் கடத்தியிருக்கும் சந்தோஷ் நம்பிராஜன், தனது வெள்ளந்தியான நடிப்பு மூலம் காதல் காட்சிகளையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி, ஆரம்பத்தில் வசனம் பேசுவதில் சற்று தடுமாறியிருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கதபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்துபவர், காஃபி மேட்டர் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அன்புராணி, மற்ற வேடங்களில் நடித்திருக்கும் கார்த்திக் சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குநர் சம்பத்குமார் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
மசூத் ஷம்ஷாவின் இசையில், சிங்கை சுந்தர் மற்றும் கனியன் செல்வராஜ் ஆகியோரது வரிகளில் பாடல்கள் படத்திற்கு எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. பின்னணி இசையும் காட்சிகளுடன் ஒட்டாமல் பயணிக்கிறது.
சதீஷ் துரைகண்னுவின் ஒளிப்பதிவும், கோட்டீஸ்வரனின் படத்தொகுப்பும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
குடும்பங்களை விட்டுவிட்டு வெளிநாடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், அவர்கள் மனதில் சுமந்துக் கொண்டிருக்கும் கனவுகளையும் மையமாக கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன், சிறிய பட்ஜெட்டில் இதுவரை சொல்லப்படாத வெளிநாடு வாழ் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
தங்களின் குடும்பத்திற்காக வெளிநாட்டில் உழைத்தாலும், அந்த குடும்பங்கள் அவர்களின் ஏக்கங்களையும், மனதையும் பார்க்காமல், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மட்டுமே பார்ப்பதும், அதனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் இறுதியில் தங்களது வாழ்க்கையையும், கனவுகளையும் தொலைத்துவிட்டு புலம்பும் உழைப்பாளர்களின் குரலை இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியாக படத்தில் பல குறைகள் இருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று உழைப்பவர்களின் ஏக்கத்தையும், குமுறல்களையும் ரசிகர்களிடம் கச்சிதமாக கடத்தியிருக்கும் இயக்குநர், அதை சோகமாக மட்டுமே சொல்லாமல், கலகலப்போடும், காதலோடும் சொல்லி ரசிக்க வைக்கிறார். குறிப்பாக அந்த காஃபி மேட்டர் நிச்சயம் தம்பதிகளிடம் டிரெண்டாகும் என்பது உறுதி.
மொத்தத்தில், இந்த ‘உழைப்பாளர் தினம்’ உழைப்பாளர்களின் மனதை திறந்து காட்டியிருக்கிறது.
ரேட்டிங் 3/5