Jan 06, 2023 05:15 AM

’வி 3’ திரைப்பட விமர்சனம்

46ed3abcaa0cf4f9239d69fd2de7c7f3.jpg

Casting : Varalaxmi Sarathkumar, Paavana, Esther Anil, Adukaalam Naren, Chandra Kumar, Ponmudi, Jai Kumar, Sheeba

Directed By : Amudhavanan

Music By : Allen Sebastian

Produced By : Team A Ventures

 

மர்ம நபர்களால் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்த, குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறை, அந்த குற்றத்தை செய்ததாக ஐந்து இளைஞர்களை கைது செய்வதோடு, அவர்களை என்கவுண்டர் செய்துவிடுகிறது.

 

என்கவுண்டர் செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் உடல்களை கேட்கிறார்கள். ஆனால், காவல்துறை உடல்களை தர மறுக்க, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். போராடும் மக்களை அடி உதையால் காவல்துறை அடக்க, இந்த வழக்கு மனித உரிமை ஆணையத்திடம் கைமாறுகிறது. மனித உரிமை அதிகாரியான வரலட்சுமி சரத்குமார், கற்பழிப்பு மற்றும் என்கவுண்டர் சம்பவங்களை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது. அவை என்ன? என்பதை விறுவிருப்பாக சொல்வது தான் ‘வி 3’.

 

மனித உரிமை அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரத்தை நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறைவான வசனங்கள் பேசி அமைதியாக நடித்தாலும், அவருடைய கண்களும், உடல் மொழியும் பல விஷயங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கிறது.

 

விந்தியா என்ற வேடத்தில் நடித்திருக்கும் பிரவீனா, தனது நிலைக்கு காரணமான மிருகங்களை “அண்ணன்கள்” என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தும் இடம், பாலியால் பலாத்கார கொடுமைக்கு ஆளான அனைத்து பெண்களின் குரலாக ஒலிக்கிறது.

 

விந்தியாவின் தங்கை வேடத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில், பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற சமூகம் பற்றி கேட்கும் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது. 

 

விந்தியாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், நடுத்தர குடும்பத்து தந்தையாக அனுபவமான நடிப்பு மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.

 

மற்ற வேடங்களில் நடித்திருக்கும் சந்திரகுமார், பொன்முடி, ஜெய்குமார், ஷீபா என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

லைவ் லொக்கேஷன்களில், கிடைத்த வெளிச்சத்தில் மிக நேர்த்தியாக காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சிவா பிரபு, கதைக்கு ஏற்ப கச்சிதமாக காட்சிகளை கையாண்டுள்ளார்.

 

இசையமைப்பாளர் எலன் செபஸ்டியன் இசை கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. 

 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் குரலாக ஒலிக்கும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் அமுதவாணன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை விட, இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார்.

 

காவல்துறையின் என்கவுண்டர் சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல், அந்த அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகள், குற்ற செயல்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் என்று பல விஷயங்களை மிக தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் அமுதவாணன், பெண்கள் பாதுகாப்பு குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கிறது.

 

பாலியல் குற்றங்கள் நடந்த பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வலியுறுத்தி போராடும் பொதுமக்கள், குற்றங்கள் நடக்காமல் தடுக்க, அதற்கான தீர்வை செயல்படுத்துவதற்காக போராட வேண்டும், என்று சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.

 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், அதை இயல்பாகவும் அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தை தைரியமிக்க நபராக மட்டும் இன்றி மரியாதையோடு கையாண்ட விதம் இப்படத்தின் தனி சிறப்பு.

 

மொத்தத்தில், ‘வி 3’ படத்திற்கு வெற்றி நிச்சயம்.

 

ரேட்டிங் 3.5/5