'V1' விமர்சனம்
Casting : Ram Arun Castro, Vishnupriya Pillai, Lijesh, Gayathri, Linga
Directed By : Pavel Navageethan
Music By : Ronnie Raphel
Produced By : Arvind Dharmaraj, N A Ramu, SarvananPonraj
’மெட்ராஸ்’, ‘குற்றம் கடிதல்’, ‘வட சென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாராட்டு பெற்ற பவல் நவகீதன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘வி1' (V1) எப்படி என்பதை இருக்கிறது, என்று பார்ப்போம்.
'V1' என்பது ஒரு வீட்டின் எண். அந்த வீட்டில் காதலர்களான லிஜேஷும், காயத்ரியும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கும் இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட, ஒரு நாள் இரவு காயத்ரி வேலையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ, இருட்டை பார்த்தாலே பயப்படும் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருக்க, இதுவே அவர் வழக்கை விரைந்து முடிக்க தடையாக இருக்கிறது. மேலும், அவரது உயர் அதிகாரியும், டிப்பார்ட்மெண்டும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடிவு செய்வதோடு, தவறான ஒரு நபரை குற்றவாளியாக கருதுகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளி அவன் அல்ல, என்பதில் உறுதியாக இருக்கும் ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரே, தனது மன வலிமையால், உடல் பாதிப்பை வென்று, தனது புத்திசாலித்தனத்தால் எப்படி உண்மையான குற்றவாளியை கண்டிபிடிக்கிறர் என்பதே படத்தின் மீதிக்கதை.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் என்றாலும், சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இயக்குநர் பவல் நவகீதன் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
அறிமுக ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ, படம் முழுவதும் உற்சாகமாக நடிக்கிறார். காக்கி யூனிபார்ம் போடாததால் என்னவோ, ஒரு போலீஸாக எந்த இடத்திலும் தன்னை காட்டிக்கொள்ளாமல், ஏதோ ஒரு ஆசிரியரைப் போல, கொலை வழக்கை விசாரிப்பவர், பல படங்களில் நடித்த அனுபவத்தோடு காட்சிகளை கடந்து போகிறார்.
கதாநாயகி என்ற அங்கீகாரம் இல்லை என்றாலும், படம் முழுவதும் வரும் விஷ்னுபிரியா பிள்ளையை, படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மட்டும் அல்ல ரசிகர்களாலும் போலீஸாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், தன்னால் முடிந்தவரை அம்மணி போலீஸுக்கான கம்பீரத்தை காட்ட முயற்சித்திருக்கிறார்.
லிஜேஷ் சில காட்சிகள் வந்தாலும், தனக்கே உரித்தான நடிப்பால் கவர்கிறார். அவரது காதலியாக வரும் காயத்ரி, காயத்ரியை ஒன் சைடாக காதலிக்கும் லிங்கா, காயத்ரியின் அப்பாவாக நடித்திருப்பவர் உள்ளிட்ட படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக லிங்காவின் தோற்றமும், அவரது நடிப்பும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் தங்களது தனித்துவத்தை காட்ட முயற்சிக்காமல், காட்சிகளுடன் பயணித்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சி.எஸ்.பிரேம்குமாரின் கட்டிங் கச்சிதம்.
ஒரு கொலை, அதன் பின்னணி, என்ற சாதாரண ஒன்லைனாக இருந்தாலும், இயக்குநர் பவல் நவகீதன் அமைத்திருக்கும் திரைக்கதை, யூகிக்க முடியாத சஸ்பென்ஸாக இருக்கிறது. இவர் கொலையாளியாக இருப்பாரோ! என்று நாம் யோசிக்கும் போது, திரைக்கதையில் ஏற்படும் திடீர் ட்விஸ்ட் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.
இருப்பினும், படத்தில் காட்டப்படும் சைக்கோ கதாப்பாத்திரத்துடனான சேசிங் காட்சிகள் தேவையில்லாதவைகளாகவே இருக்கிறது. இருந்தாலும், அந்த கதாப்பாத்திரம் மூலம் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து இயக்குநர் பேசியிருப்பது பாராட்டுக்குரியது.
கொலையாளி யார்? என்ற கேள்வியோடு அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு முழு படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் பவல் நவகீதன், இறுதியில் கொலையாளியை ஹீரோ கண்டுபிடிப்பதில் பெரிய ட்விஸ்ட்டை வைத்ததோடு, அந்த கொலைக்கான பின்னணியில், தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் சமூக அவலங்கள் குறித்து பேசி கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில், இந்த 'V1' சினிமா ரசிகர்களுக்கான நல்ல படமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கான விழிப்புணர்வு பாடமாகவும் இருக்கிறது.
ரேட்டிங் 3.5/5