’வாத்தி’ திரைப்பட விமர்சனம்
Casting : Dhanush, Bharathiraja, Samyuktha, Samuthurakani, Sai Kumar, Tanikella Bharani, Thotapalli Madhu, Narra Srinivas, Pammi Sai, Hyper Aadhi, Aadukalam Naren, Hareesh Peradi, Ken Karunaas, Praveena Lalithabai
Directed By : Venky Atluri
Music By : GV Prakash Kumar
Produced By : Sithara Entertainments - Fortune Four Cinemas
கல்வியை வியாபரமாக்கிய கும்பல் தங்கள் கல்வி தொழிலை வளர்ப்பதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை தடுக்க திட்டம் போடுகிறார்கள். ஆனால், எதிர்பாரத விதமாக அதே தனியார் பள்ளியில் பணியாற்றும் உதவி ஆசிரியரான தனுஷ் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறது. இதனால் கோபம் அடையும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் தலைவர் சமுத்திரக்கனி. தொடர்ந்து தனுஷ் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை தடுக்கிறார். அவரது எதிர்ப்பையும் மீறி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து, தனியார் பள்ளிகளின் முகத்திரையை கிழிக்க போராடும் வாத்தியார் தனுஷ், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘வாத்தி’ படத்தின் கதை.
எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்திக்கொள்ளும் தனுஷ், வழக்கம் போல் இதிலும் இளம் வாத்தியாராக அசத்தியிருக்கிறார். ஏழை மாணவர்களின் கல்விக்காக போராடுவது, படிப்பு எவ்வளவு முக்கியம் என்று பெற்றோர்களுக்கு பாடம் எடுப்பது , சாதி பிரிவினை பார்க்கும் மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது, அவ்வபோது மாணவர்களுக்கு வரும் ஆபத்துகளை எதிர்த்து சண்டை போடுவது, சக ஆசிரியருடன் ஏற்பட்ட காதலை நாகரிகமாக சொல்வது, என அனைத்து ஏரியாவிலும் தன்னை நிரூபித்திருந்தாலும், தனுஷின் அசுரத்தனமான நடிப்பு பசிக்கு அளவு சாப்பாடாக இந்த வாத்தியார் வேடம் இருப்பதை மறுக்க முடியாது.
நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா அரசு பள்ளி ஆசிரியராகவும், தனுஷின் காதலியாகவும் சில காட்சிகள் வந்து போகிறார்.
நல்லவனாக நடித்தால் ஒரு டெம்ப்ளட், வில்லனாக நடித்தால் ஒரு டெம்ப்ளட் என்று வைத்திருக்கும் சமுத்திரக்கனி, இதில் வில்லன் டெம்ப்ளட்டை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
சாய் குமார், தணிகலபரணி, சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா, ஷாரா, நரேன், ஹரிஷ் பெராடி, மொட்டை ராஜேந்திரன் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், கதை நடக்கும் களங்கள் அனைத்தும் செயற்கையான அரங்ங்குகள் என்பதை வெட்டம் வெளிச்சமாக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது. அதிலும், ஆசிரியராக நடிக்கும் தனுஷை மாணவரைப்போன்று இளமையாக காட்டியது ஏன் என்றே தெரியவில்லை.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணித்திருக்கிறது.
கல்வி எப்படி தனியார் வசம் வந்தது?, அதை அவர்கள் மிகப்பெரிய வியாபரமாக மாற்றியது எப்படி? போன்ற விஷயங்களை மிக தெளிவாக விவரித்திருக்கும் இயக்குநர் வெங்கி அத்தூரி, ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை எப்படி கொடுக்க வேண்டும், என்பதற்கான வழியையும் காட்டியுள்ளார்.
கவ்லி பற்றிய கதை, சமூகத்திற்கு மிக தேவையான விசயம் என்ற ரீதியில் படத்தை பாராட்டினாலும், அதை சினிமா மொழியில் சொல்லிய விதத்தில் இயக்குநர் வெங்கி அத்தூரி சொதப்பியிருக்கிறார். குறிப்பாக தனுஷ் போன்ற ஒரு ஹீரோவை வைத்துக்கொண்டு படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பது சலிப்படைய செய்கிறது.
படத்தில் பல குறைகள் இருந்தாலும், பணம் இல்லாதவர்களுக்கு தரமான கல்வி இல்லை, என்ற கொள்கை கொண்டவர்களுடன் பயணித்துக்கொண்டே, ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை எப்படி கொடுக்க வேண்டும், என்ற விசயத்தை சொல்லிய விதம் பாராட்டும்படி உள்ளது.
மொத்தத்தில், ‘வாத்தி’ தனுஷ் ரசிகர்களுக்கான படமாக இல்லை என்றாலும், மாணவர்களும், பெற்றோர்களும் நிச்சயம் அறிந்துக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது.
ரேட்டிங் 3/5