‘வாழை’ திரைப்பட விமர்சனம்
Casting : Ponvel, Raghul, Janaki, Dhivya Duraisamy, Kalaiyarasan, Nikhila Vimal, Padhman, J.Sathish Kumar
Directed By : Mari Selvaraj
Music By : Santhosh Narayanan
Produced By : Disney+ Hotstar, Navvi Studios, Farmer's Master Plan Production - Divya Mari Selvaraj, Mari Selvaraj
சிறுவயதிலேயே அப்பாவை இழந்த சிறுவன் பொன்வேல், அம்மா மற்றும் அக்கா அரவணைப்பில் வளர்கிறான். அம்மாவும், அக்காவும் பக்கத்தில் உள்ள ஊர்களில் வாழைத்தார்களை அறுத்து அதை லாரியில் ஏற்றும் பணியை செய்து வருகிறார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் பொன்வேலும் இந்த பணிக்கு சென்றாலும், அதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறான். இந்த சமயத்தில், வாழைத்தார் அறுக்கும் பணிக்கு தனது அக்கா உள்ளிட்ட ஊர் மக்களுடன் லாரியில் பயணிக்கும் சிறுவன் பொன்வேல், தீடிரென்று பாதியில் லாரியில் இருந்து இறங்கி விடுகிறான். தொடர்ந்து பயணிக்கும் லாரி, அதில் பயணிக்கும் மக்களை மிகப்பெரிய துயரத்தில் தள்ளுகிறது. அதன் மூலம் சிறுவன் பொன்வேல் அனுபவித்த வலியை மக்களிடம் கடத்துவதற்கான இயக்குநர் மாரி செல்வராஜின் முயற்சி தான் ‘வாழை’.
தனது முந்தைய படங்களில் சாதி அரசியலை அதிரடியாக பேசிய மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைத்திருப்பதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் மாரி செல்வராஜ் இந்த படத்தில் எந்தவிதமான அரசியலையும் பேசாமல், தனது வாழ்வில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை வைத்துக்கொண்டு, நம் சமூகத்தில் உழைப்பாளிகளை அலட்சியமாக நடத்தும் முதலாளித்துவத்தை பற்றி மேலோட்டமாக பேசியிருக்கிறார்.
கதையின் நாயகன் சிவனைந்தனாக நடித்திருக்கும் சிறுவன் பொன்வேல், தனது கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார். பூங்கொடி டீச்சர் தனக்கு பிடித்தவர் என்று சொல்லிக்கொண்டு அவர் பயணப்படுவது, வாழைத்தார் வெட்டும் பணிக்கு செல்ல பயந்து நடிப்பது, கமலை வெறுப்பது என அனைத்து இடங்களிலும் எதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
சிவனைந்தனின் நண்பனாக சேகர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ராகுல், மண்ணின் மைந்தனாக கவனம் ஈர்க்கிறார். சிவனைந்தனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன், டீச்சராக நடித்திருக்கும் நிகிலா விமல் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திருநெல்வேலி வட்டார தமிழ் பேசி எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை சார்ந்து பயணித்திருக்கிறது. குறிப்பாக ஒப்பாரி பாடல் இதயத்தை கனக்கச் செய்கிறது.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு திருநெல்வேலியின் பசுமையையும், மக்களின் எளிமையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. விபத்து காட்சியை படமாக்கிய விதம் நேர்த்தி.
தனது படங்களில் பேசப்பட்டு வந்த அரசியலில் இருந்து விலகி இதில் கம்யூனிசம் பேசியிருந்தாலும், அதை அழுத்தமாக பேசாமல், கூலிவேலை செய்யும் விவசாய மக்களுக்கு நேர்ந்த வலிமிகுந்த சம்பவத்தை நம்மில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
வலி மிகுந்த தனது வாழ்க்கை பயணத்தில், ஒரு லாரி பயணம் கொடுத்த கசப்பான சம்பவத்தை வைத்துக்கொண்டு எதார்த்தமான சினிமாவை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் கமல் மீது தனக்கு இருக்கும் கோபத்தை காட்டமாக வெளிப்படுத்தினாலும், அந்த காட்சிகள் அனைத்தும் திரையரங்கே அதிரும் வகையில் பார்வையாளர்களை சிரிக்க வைப்பது படத்திற்கு பிளஸாகவே அமைந்திருக்கிறது.
எளிய மக்களின் வலி மிகுந்த வாழ்க்கை, மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் மக்களை அலட்சியமாக நடத்தும் போக்கு, உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டும் முதலாலித்துவம் ஆகியவற்றை மேலோட்டமாக பேசும் படம் ஜனரஞ்சக ரசிகர்களையும், எதார்த்த படைப்புகளை விரும்பும் ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. அதே சமயம், அதை முழுமையாக செய்யாமல் சில இடங்களில் சலிப்பைடைய வைப்பதையும் மறுக்க முடியாது.
இருந்தாலும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், அதற்கான நடிகர்கள் தேர்வு, கதைக்களம், இறுதிக் காட்சியின் வலி ஆகியவை குறைகளை மறக்கடிக்க செய்து இயக்குநர் மாரி செல்வராஜின் மற்றொரு முகத்தை கொண்டாட வைக்கிறது.
மொத்தத்தில், ‘வாழை’ வலி.
ரேட்டிங் 3.5/5