Feb 24, 2022 09:31 AM

’வலிமை’ விமர்சனம்

a877309900a1163dce505b5f17b02108.jpg

Casting : Ajithkumar, Huma Qureshi, Karthikeya, Sumithra, Selva, GM Kumar, Raj Ayappa, Achuth Kumar,

Directed By : H.Vinoth

Music By : Yuvan Shankar Raja

Produced By : Boney Kapoor

 

சென்னையில் தொடர் கொள்ளை, கொலை சம்பவங்கள் நடந்து வர, அதனை கட்டுப்படுத்துவதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் காவல்துறை அதிகாரி அஜித்குமார், சென்னையில் நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட ஒரு குழுவினர் தான் செய்கிறார்கள், என்பதை கண்டுபிடிக்கிறார்.  அவர்கள் பற்றி  விசாரிக்கும் அஜித்துக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைப்பதோடு, தகவல் தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் பல குற்றங்களை செய்து வரும் முக்கிய குற்றவாளி பற்றியும் தெரிய வருகிறது. முக்கிய குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கும் அஜித், எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதில் இருந்து அவர் மீண்டு எப்படி குற்றவாளியை பிடிக்கிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.

 

காக்கி சட்டை போடாத காவல்துறை அதிகாரியாக அஜித் கம்பீரமாக வலம் வருகிறார். எப்போதும் போல் தனது பிரகாசமான முகத்தோடு ரசிகர்களை ஈர்ப்பவர், சண்டைக்காட்சிகளிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகளிலும் நம்மை பரவசப்படுத்துகிறார். தண்டிப்பதால் குற்றவாளிகளும், குற்றங்களும் குறையாது, மன்னிப்பதன் மூலம் தான் அதை கட்டுப்படுத்த முடியும், என்ற கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் அஜித், தனது தாராக மந்திரமான “வாழு வாழவிடு” என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்.

 

அஜித்தின் காதலியாகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருக்கும் ஹூமா குரேஷி, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, சண்டைக்காட்சிகளிலும் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, வில்லத்தனத்தை கண்களிலேயே காட்டி மிரட்டுகிறார். சுமித்ரா, அச்யுத் குமார், ராஜ் ஐய்யப்பா, ஜி.எம்.குமார் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்து மனதில் நிற்கிறார்கள்.

 

படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளையும், மோட்டார் சைக்கிள் சண்டைக்காட்சிகளையும் பிரமிக்கும்படி படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளார்.

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது.

 

படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு இறுதி வரை குறையாதபடி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் எச்.வினோத், அஜித்துக்கான மாஸான காட்சிகளை வைத்து ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு, சாமானிய மக்களின் வலிகளையும் வசனங்கள் மூலம் சொல்லியிருக்கிறார்.

 

படம் விறுவிறுப்பாக செல்லும் போது திடீரென்று குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் வருவது படத்தின் வேகத்தை சற்று குறைப்பது போல் இருக்கிறது. அதை மட்டும் தவிர்த்துவிடுட் பார்த்தால், அஜித் ஓட்டும் பைக்கை விட படம் வேகமாகவே நகர்கிறது.

 

”நடுத்தர வர்க்க பெண்கள் அணியும் தங்க ஆபரணங்கள் அழகுக்காக அல்ல, அது அவர்களுடைய சேமிப்பு, எதிர்காலம்...”, “எளிய மக்களிடம் கொள்ளையடித்தால் அதை காவல்துறை சாதாரண குற்றமாக பார்க்கும், அதே சமயம் பணக்காரர்களிடம் கொள்ளையடித்தால் தான் அதை பெரிய குற்றமாக பார்ப்பார்கள்”, போன்ற வசனங்கள் மூலம்  சாட்டையை சுழற்றியிருக்கும் இயக்குநர் எச்.வினோத், இளைஞர்களுக்கான நல்ல மெசஜ் ஒன்றையும் படத்தில் சொல்லியிருக்கிறார்.

 

படத்தில் இடம்பெறும் பைக் சேசிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருப்பதோடு, பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் வரும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தில் திரையரங்கமே அதிர்கிறது. 

 

மொத்தத்தில், ‘வலிமை’ அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது, சினிமா ரசிகர்களை வியக்க வைக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5