‘வல்லான்’ திரைப்பட விமர்சனம்
Casting : Sundar.C. Tanya Hope, Hebah Patel, Arul D.Shankar, Kamal Kamaraj, Abirami Venkatachalam, Chandhini Tamilarasan, Thalaivasal Vijay, Jayakumar, TSK
Directed By : VR Mani Seiyon
Music By : Dr.VR Manikandaraman & V Gayathri
Produced By : VR Della Film Factory Pvt Ltd -
இளம் தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை துப்பு கிடைக்காமல் தினறுகிறது. இதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் உயர் அதிகாரி வழக்கை ஒப்படைக்கிறார். பணியில் இல்லை என்றாலும், தொழிலதிபர் கொலை வழக்கின் பின்னணியில், தனது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகள் அவித்தாலும், அடுத்தடுத்த கொலைகளால் மேலும் பல மர்மங்கள் அவரை சூழ்கிறது. இதற்கிடையே, கொலை செய்யப்பட்டவரிடம் இருக்கும் ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதியும், சில காவல்துறை அதிகாரிகளும் அவருக்கு எதிராக சதி செய்ய, அவைகளை முறியடித்து கொலையாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் ?, கொலைக்கான பின்னணி ? மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய அவரது பிரச்சனை என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்வதே ‘வல்லான்’.
புத்தாண்டு தொடக்கத்தில் இயக்குநராக மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் சுந்தர்.சி, இந்த படம் மூலம் கதாநாயகனாகவும் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்புடன் ஜெட் வேகத்தில் படம் பயணிக்கிறது.
பணியில் இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்திருந்தாலும், தனது வருங்கால மனைவியின் கொடூர நிலையை பார்த்து கதறும் காட்சியில் நடிப்பில் சற்று தடுமாறியிருக்கிறார். மற்றபடி தனது கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் அழகாக இருக்கிறார. வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்து பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.
ஹெபா பட்டேல், திரைக்கதை ஓட்டத்திற்கு மட்டும் இன்றி கவர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கிறார். இளம் தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் கேமரா ஊட்டி காட்சிகளை பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் கோணத்தில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது. கதாபாத்திரங்களை தனது கேமரா கண்கள் மூலம் அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் மணி பெருமாள், தனது பணியின் மூலம் படத்தின் மேக்கிங் மற்றும் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
கொலையை சுற்றி நடக்கும் சன்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக தெளிவாக புரியும்படி தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், எந்த ஒரு காட்சியையும் நீளமாக சொல்லாமல், அதே சமயம் கதைக்களத்தின் தன்மை மாறாமல் அனைத்து விசயங்களையும் அளவாக தொகுத்து படத்தை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் பயணிக்க வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன், ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் கதைக்கான திரைக்கதையை பல திருப்பங்களுடன், சிறு தொய்வில்லாமல் நகர்த்திச் சென்று ரசிகர்களுக்கு முழுமையான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் மணி சேயோன், அனைத்து கதாபாத்திரங்களையும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்க வைத்ததோடு, நாயகனின் திருமண ஏற்பாடு, அதை தொடர்ந்து வரும் காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தையும் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் வடிவமைத்திருப்பது படத்திற்கு பெரும் பலம்.
படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை பல திருப்பங்கள் இருந்தாலும், எதையும் பார்வையாளர்களின் யூகத்தின்படி சொல்லாமல், அவர்களை முழுமையாக படத்துடன் ஒன்றிவிட செய்யும் விதத்தில் திரைக்கதையை மிக கூர்மையாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘வல்லான்’ நிச்சயம் வெல்வான்.
ரேட்டிங் 3.5/5