’வனம்’ விமர்சனம்
Casting : Vetri, Smruthi Venkat, Anu Sidhara, Vela Ramamoorthy, Azhagam Perumal
Directed By : Srikandan Anand
Music By : Ran Ethen Yohaan
Produced By : Grace Jayanthi Rani, JP Amalan, JP Alex
நுண்களைகள் கலை கல்லூரி ஒன்றில் படிக்கும் நாயகன் வெற்றி, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வர, அவரது அறையில் இருக்கும் சக மாணவர்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். இதற்கிடையே, அக்கல்லூரி குறித்து டாக்குமெண்டரி படம் எடுக்க வரும் நாயகி ஸ்ம்ருதி வெங்கட், வெற்றியின் அறையில் நிகழும் மரணங்களுக்கும், அந்த அறைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க, அது என்ன தொடர்பு என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் நாயகன் வெற்றி, அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே ‘வனம்’ படத்தின் மீதிக்கதை.
விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்து கட்டிடங்கள் கட்டி வருவதால் எப்படிப்பட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது என்பதை நாம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனுபவித்த நிலையில், அதையே கருவாக்கி, மறு பிறவி, மர்மமான மரணங்கள், திகிலான திருப்பங்கள் என்று ஒரு சுவாரஸ்யமான திகில் சஸ்பென்ஸ் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகண்டன் ஆனந்த்.
படத்தின் நாயகனாக நடித்துள்ள வெற்றி, இதற்கு முன்பு அவர் நடித்த படங்களில் எப்படி நடித்தாரோ அதேபோல் தான் நடித்திருக்கிறார். நடிப்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
ஜமீனாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தியின் நடிப்பில் கம்பீரம் இருந்தாலும், அவர் தோற்றத்தில் ஒரு ஜமீனுக்கான கம்பீரம் தெரியவில்லை. குறிப்பாக உடுத்தும் உடைகள் அவருக்கு சிறிது கூட பொருந்தவில்லை. இருந்தாலும், கொடூர தனத்தை குறையில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலைவாழ் பெண்ணாக நடித்திருக்கும் அனுசித்தாராவின் கதாப்பாத்திரம் அழுத்தமாக இருந்தாலும், ஒரு மலைவாழ் பெண்ணாக அல்லாமல், நகரத்தில் வாழும் ஒரு பெண் போல புடவை அணிந்துக்கொண்டிருப்பது அந்த கதாப்பாத்திரத்தின் அழுத்தத்தை குறைத்துவிடுகிறது.
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் அழகம்பெருமாள் தனக்கு கொடுத்த வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்.
வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளின் அழகை தனது கேமரா மூலம் துள்ளியமாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், ஏகப்பட்ட ஏரியல் கோணங்களை பயன்படுத்தியிருக்கிறார். அவை பிரமாண்டமாக இருந்தாலும், திரும்ப திரும்ப வரும்போது சற்று சலிப்பு ஏற்படுகிறது.
ரான் ஈத்தன் யோஹான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு, முதல் பாதி படத்தை செதுக்க தவறினாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை மிக சிறப்பாக தொகுத்து வியப்படைய செய்துள்ளார்.
படத்தின் ஹைலைட்டே க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்புமுனையும், அதை தொடர்ந்து வரும் சண்டைக்காட்சியும் தான். அந்த சண்டைக்காட்சியை மிக நேர்த்தியாக வடிவமைத்த சண்டைப்பயிற்சி இயக்குநர் சுதேஷுக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம்.
மறு பிறவி பற்றி பல படங்களில் சொல்லியிருந்தாலும், அதை இதுவரை சொல்லாத ஒரு கோணத்தில் இயக்குநர் ஸ்ரீகண்டன் ஆனந்த் சொல்லியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், அவர் சொல்லிய விதம் படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைக்கும் வகையில் இருக்கிறது.
சிறு சிறு காட்சிகளில் நம்மை திகிலடைய வைக்கும் இயக்குநர் ஸ்ரீகண்டன் ஆனந்த், முழு திரைக்கதை வடிவத்தை வடிமைப்பதில் பெரிய அளவில் கோட்டை விட்டிருக்கிறார். இருந்தாலும், கிளைமாக்ஸில் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு திருப்புமுனை மூலம் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், படம் பார்ப்பவர்களின் பணத்தை வீணடிக்காது இந்த ‘வனம்’
ரேட்டிங் 3/5