’வன்முறைப்பகுதி’ விமர்சனம்
Casting : Manikandan, Rafia Jaffer, Manohara, Raja, jeymaari
Directed By : Nagaraj (a) Naga
Music By : -
Produced By : AARUTHRACINE PRODUCTION COMPANY & MADURAI SRI MEENAKSHI CREATION
தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் மட்டும் அல்ல ஒட்டு மொத்த படத்தில் நடித்த அத்தனை பேரும் புதுமுகங்களாக இருக்கும் இந்த ‘வன்முறைப்பகுதி’ தேனி மாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்வதோடு, எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும், என்ற மெசஜையும் சொல்கிறது.
நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் ஹீரோ மணிகண்டன் யாரையும் மதிக்காமல் எதிர்த்து பேசுவதோடு, அடித்தும் விடும் அளவுக்கு கோபக்காரராக இருக்கிறார். இவரது கோபத்தாலும், சண்டியர் தனத்தாலும் இரண்டு ஊர்களுக்கு பொதுவாக இருக்கும் கோவில் திருவிழாவே சில ஆண்டுகள் நடைபெறாமல் இருப்பதால், ஊர் மக்கள் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். திருமணம் செய்து வைத்தால் பையன் சரியாகிடுவான் என்று மணிகண்டனின் அம்மா பெண் தேட, மணிகண்டனின் குனம் அறிந்த ஊர் மக்கள் பெண் கொடுக்க மறுப்பதோடு, அவரது தாய்மாமவும் பெண் தர மறுத்துவிடுகிறார்.
இதற்கிடையே, மணிகண்டனின் தாயாரின் தோழி பக்கத்து ஊரில் இருக்கும் தனது அண்ணன் மகள் ஹீரோயின் ரபியா ஜாபரை மணிகண்டனுக்கு பேசி முடிக்கிறார். இருவருக்கும் சம்மதம் முடிந்தவுடன், மணிகண்டனும், ரபியாவும் காதலிக்க தொடங்குகிறார்கள். இந்த நிலையில், மணிகண்டனின் முன் கோபத்தால் அடிதடி சம்பம் ஒன்று நிகழ, அதனால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிடுகிறார்கள். இருந்தாலும், ரபியா தான் தனது மனைவி, அவரை திருமணம் செய்தே திரூவேன், என்று மணிகண்டன் பெண் வீட்டாரிடம் சவால் விட்டு செல்வதோடு, ரபியாவை அவரது சம்மத்தோடு திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அவரை கல்லூரி ஹாஸ்டலில் இருந்து அழைத்து வர செல்லும் போது ரபியா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அதை பார்த்ததும் மணிகண்டன் அங்கிருந்து ஓடிவிட, ரபியாவின் கொலை பழி மணிகண்டன் மீது விழுகிறது.
ஒரு பக்கம் போலீஸ் மணிகண்டனை துறத்த, மறுபக்கம் ரபியாவின் அண்ணன்கள் மணிகண்டனை கொலை செய்ய துரத்த, அதே சமயம், மணிகண்டன் தனது காதலியை கெளரவத்திற்காக அவரது அண்ணன்கள் தான் கொலை செய்துவிட்டார்கள், என்று நினைத்து அவர்களை கொலை செய்ய நினைக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளும், ரபியாவை கொலை செய்தது யார்? எதற்காக? என்பதும் தான் ‘வன்முறைப்பகுதி’ படத்தின் மீதி கதை.
கேமராவுக்கு முன்பு இருப்பவர்க, பின்னாடி இருப்பவர்கள் என்று அத்தனை பேரும் புதுமுகங்கள் என்பதால், தியேட்டருக்குள் செல்லும் போது படம் எந்தவித எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், படம் தொடங்கிய 5 வது நிமிடத்தில் நம்மை ”பரவாயில்லையே” என்று சொல்ல வைக்கும் படம் அடுத்தடுத்த காட்சிகள் நகர நகர, தேனி மாவட்டத்திற்குள் நாம் இருப்பது போன்ற ஒரு உணர்வை படம் நமக்கு ஏற்படுத்தி விடுவதோடு, கதைக்குள் நம்மை ஒன்றிவிடவும் செய்கிறது.
சினிமாவுக்கான எந்தவித பிரம்மாண்டமும் படத்தில் கையாளப்படவில்லை என்றாலும், தான் எடுத்துக்கொண்ட கதைக்கு திரைக்கதை அமைத்த விதம், நட்சத்திரங்களிடம் வேலை வாங்கிய விதம், காட்சிகளை நகர்த்திச் செல்வது என்று அனைத்தையும் இயல்பாக கையாண்டிருக்கும் இயக்குநர் நாகராஜ், இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்.
முனியசாமி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் புதுமுகம் மணிகண்டன், முன்கோபமும், வன்முறையும் கலந்த இளைஞராக கச்சிதமாக பொருந்துவதோடு, தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தாய்மாமனாக இருந்தாலும் சரி, தனது திருமணத்திற்கு பெண் தேடி கொடுத்தவர்களாக இருந்தாலும் சரி, அதையெல்லாம் பார்க்காமல் தனது முரட்டுத்தனத்தை காட்டும் முன்கோபக்கார மனிதராக அசத்தியிருக்கிறார்.
மேக்கப் இல்லாத எளிமையான அழகோடு மட்டும் இன்றி, தேனி மாவட்ட பெண்ணாகவே வலம் வரும் தவமணி என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் ரபியா ஜாபரின் வேடம் கவனிக்க வைக்கிறது.
ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் திண்டுக்கல் தனம், ஹீரோயினின் அம்மாவாக நடித்திருக்கும் உசிலை பாண்டியம்மாள், ஹீரோயினின் அண்ணன்களாக நடித்திருக்கும் மனோகரா, ராஜா, வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ஜெய்மாரி, முஜுபென், துருவன், ஹீரோவின் நண்பராக நடித்திருப்பவர்கள் என அனைவருடைய நடிப்பும் ரொம்பவே இயல்பாக இருக்கிறது. அந்த ஊரில் வாழும் மக்களைப் போலவே படத்திலும் வாழ்ந்திருக்கும் இவர்களது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பிளஷாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் டி.மகேஷ், காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டவில்லை என்றாலும், கதாபாத்திரங்களின் உணர்வை பக்காவாக பதிவு செய்திருப்பதோடு, நம்மை அந்த கிராமத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார்.
படத்தில் குறை சொல்ல வேண்டும் என்றால், பேச்சு தான். படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் எப்படி நல்லா நடிச்சிருக்காங்களோ எது போல, அத்தனை பேரும் அளவுக்கு அதிகமாகவும் பேசுகிறார்கள்
எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கொதித்தெழுதுவது என்று இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற மெசஜை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் நாகா, அதில் தேனி மக்களின் கோபம், பகை, காதல், வீரம் என்று அவர்களது ஒட்டு மொத்த வாழ்வியலையும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.
தலைப்பு என்னவோ ‘வன்முறைப்பகுதி’ என்று இருந்தாலும், படத்தில் வன்முறை காட்சிகள் குறைவாகவே உள்ளது. திரைக்கதையோடு பயணிக்கும் எதார்த்தமான காமெடி, உறவுகள் பற்றி சொல்லும் செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம் என்று அனைத்தையும் அளவாக சொல்லி, அமர்க்களமான க்ளைமாக்ஸோடு படத்தை முடித்திருக்கும் இயக்குநர் நாகா, நமக்கு பாராதிராஜாவின் படத்தை பார்த்த அனுபவத்தையும் கொடுக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘வன்முறைப்பகுதி’ எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், தியேட்டருக்குள் வருபவர்களை எந்த நிலையிலும் எழுந்திருக்க விடாமல் சீட்டோடு கட்டிப்போடும் நல்ல படமாக உள்ளது.
ரேட்டிங் 3.5/5