Feb 02, 2019 03:43 AM

’வந்தா ராஜாவாதான் வருவேன்’ விமர்சனம்

2c498c142838c7ab44aa4b5e03ae91b0.jpg

Casting : Silambarasan, Megha Akash, Catherine Tresa, Prabhu, Ramya Krishnan

Directed By : Sundar C.

Music By : Hiphop Tamizha

Produced By : Allirajah Subaskaran

 

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

பிரான்ஸ் நாட்டில் மிக்கப்பெரிய தொழிலதிபராக இருக்கும் தமிழரான நாசர், காதல் திருமணம் செய்துக் கொண்டதால் தனது மகள் ரம்யா கிருஷ்ணனை பிரிந்துவிட, பிறகு தனது மகளை பிரிந்த சோகத்தை மனதுக்குள்ளே வைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பல முறை மன்னிப்பு கேட்டும் தன்னை பார்க்க வராத மகளை சந்திக்க நினைப்பவர், தனது பேரன் சிம்புவிடம் இந்தியாவில் இருக்கும் அத்தையை பற்றி கூறுவதோடு, அவரை அழைத்து வர வேண்டும், என்றும் கூறுகிறார்.

 

தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்காகவும் பிரான்ஸில் இருந்து இந்தியா வரும் சிம்பு, தனது லட்சியத்தில் ஜெயித்தாரா இல்லையா, என்பது தான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் மீதிக்கதை.

 

தமிழ் சினிமாவில் ஆயிரம் முறை படமாக்கப்பட்ட கான்சப்ட்டின் ஆயிரத்து ஒன்றாவது படமாகவே இப்படமும் இருந்தாலும், இயக்குநர் சுந்தர்.சி, தனக்கே உரித்தான காமெடி ரூட்டில் திரைக்கதையை நகர்த்தி நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் செய்துவிடுகிறார்.

 

ரசிகர்களுக்கு இப்படம் எப்படியோ, சிம்புவுக்கு இப்படம் முக்கியமான படம் தான். காரணம், தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி, நடிகர் சங்க பிரச்சினை என்று அனைத்தையும் இப்படத்தில் பேசிவிடுபவர், தன்னை மாஸ் ஹீரோவாகவும் காட்டிக்கொண்டிருக்கிறார். சில காட்சிகளில் அடக்கி வாசித்திருக்கும் சிம்பு, பல காட்சிகளில் அடக்க முடியாமல் அளப்பறை செய்திருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் அத்தை ரம்யா கிருஷ்ணனிடம் கண்ணீர் விட்டு பேசும் காட்சியில், நடிப்பில் அசத்திவிடுகிறார்.

 

நேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா இருவரும் கமர்ஷியல் படத்திற்கான ஹீரோயின்களாக வலம் வந்தாலும், சுந்தர்.சி படங்களில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சில சிறப்பு வாய்ப்புகளை பெறவில்லை. 

 

ரோபோ சங்கர், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோரது கூட்டணி காமெடி குளுங்க குளுங்க சிரிக்க வைக்கிறது. இவர்களுடன் சேர்ந்து சிம்பு செய்யும் காமெடியும் சிரிப்பு வெடியாக வெடிக்கிறது.

 

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை என்ற முத்திரை சற்று மறைந்து, சிம்பு பட பாடல் என்ற முத்திரை தான் அழுத்தமாக இருக்கிறது. அதனால், பாடல்கள் அனைத்தும் வசனங்களாகவே இருக்கின்றன.

 

பாகுபலியில் சிவகாமியாக சீறிய ரம்யா கிருஷ்ணன், இதில் அன்புள்ள அத்தையாக அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர், தனது உடல் எடையையும் ரொம்பவே குறைத்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணனின் கணவராக நடித்திருக்கும் பிரபு, அப்பாவாக நடித்திருக்கும் நாசர், அண்ணனாக நடித்திருக்கும் சுமன் என அனைவரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

இயக்குநர் சுந்தர்.சி-யே பல முறை கையாண்ட கதை தான் இது, என்றாலும் திரைக்கதையில் காட்டிய வித்தியாசத்தை விட, காட்சிகளை கையாள்வதில் பல வித்தியாசங்களை காட்டியிருக்கிறார். அத்துடன், சைலண்டான சிம்புவை மீண்டும் வைலண்டாக பேச வைத்து, “சிம்பு கம் பேக்” என்பதையும் உரக்க சொல்லியிருக்கிறது இப்படம்.

 

ஹீரோவான சிம்புவையே கலாய்த்து படத்தில் வைக்கப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் சிரிப்பு சத்தத்தால் திரையரங்கையே அதிர செய்யும் அளவுக்கு இருப்பது போல, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சில காட்சிகள் வந்தாலும், சிரிக்க வைத்துவிடுகிறார்கள். இப்படி படம் முழுவதுமே ரசிகர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும், என்பதை மட்டுமே டார்க்கெட் செய்திருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, கதையில் பெரிய கவனம் செலுத்தவில்லை. 

 

மொத்தத்தில், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ சிரிப்பு கிங்.

 

ரேட்டிங் 3/5