’வாரிசு’ திரைப்பட விமர்சனம்
Casting : Vijay, Rashmika Mandana, Sarathkumar, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth, Jayasudha, Yogi Babu, Jayasuda, Ganesh Venkatraman
Directed By : Vamshi Paidipally
Music By : Thaman S
Produced By : Dil Raju and Sirish
படத்தின் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், ‘சூரியவம்சம்’ படத்தின் ரீமேக் தான் வாரிசு.
மிகப்பெரிய தொழிலதிபரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள். முதல் இருவர் அப்பாவின் தொழிலில் ஈடுபடுவதோடு, அப்பாவின் பேச்சை தட்டாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால், கடைசி மகனான விஜய், அப்பாவின் அடையாளம் இல்லாமல் தனித்து நிற்க விரும்புகிறார். இதனால், அவருக்கும் சரத்குமாருக்கும் இடையே பிரிவு ஏற்பட, குடும்பத்தை விட்டே ஒதுங்கி இருக்கும் விஜய், தனியாக தொழில் தொடங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, சரத்குமாரின் மூத்த மகன்கள் மூலம் தொழிலுக்கும், குடும்பத்துக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தனது இளையமகனால் மட்டுமே முடியும் என்று நம்பும் அவர், விஜயை தனது அடுத்த வாரிசாக அறிவிக்கிறார். இதனால் கோபமடையும் அவருடைய அண்ணன்கள் விஜய்க்கு எதிராக செயல்படுவதோடு, வில்லன் பிரகாஷ் ராஜுடன் இணைந்துக்கொண்டு சரத்குமாருக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
அப்பாவின் தொழிலுக்கு எதிராக எழும் பிரச்சனைகளை தீர்த்து, பிரிந்த குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்காக களம் இறங்கும் விஜய், அதை எப்படி செய்கிறார் என்பதை ரொம்ப மெதுவாக சொல்வது தான் ‘வாரிசு’.
கதை விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தாலும், விஜய் ஏமாற்றவில்லை. முழு படத்தையும் தூக்கி சுமந்திருக்கும் விஜய், தனது நடிப்பு மூலம் பல இடங்களில் நம்மை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்புகிறார். எப்போதும் போல் நடனம், ஆக்ஷன் ஆகியவற்றில் அமர்க்களப்படுத்தியிருப்பவர், காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அசர வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, பாடல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நாயகியாக வலம் வருகிறார்.
விஜயின் அப்பாவாக நடித்திருக்கும் சரத்குமார், ஆரம்பத்தில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தாலும் பிறகு அமைதியாகி விடுகிறார்.
விஜயின் அண்ணன்களாக நடித்திருக்கும் ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம் என்ற ரீதியில் நடித்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், பலம் இல்லாத கதாபாத்திரத்தில் வழக்கமான தனது பாணியில் நடித்திருக்கிறார்.
யோகி பாபு வரும் காட்சிகளும் குறைவு, அதில் காமெடியும் குறைவு.
விஜயின் மூத்த அண்ணியாக நடித்திருக்கும் சங்கீதாவுக்கு வசனம் பேச வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
மற்றொரு அண்ணியாக நடித்திருக்கும் சம்யுக்தா, சதீஷ் போன்றவர்கள் செட் பிராப்பர்ட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே வந்த படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி சொல்வது புதிதல்ல என்றாலும், அதை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் சொல்லாமல், ஏகப்பட்ட திணிப்புகளோடு ஜவ்வாக இழுத்து சொல்லியிருப்பதால், தியேட்டரில் உட்கார முடியவில்லை.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். ஆனால், வியக்க வைக்க வேண்டிய வகையில் படமாக்கப்பட வேண்டிய முதல் பாடலை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது பெரும் ஏமாற்றம். விஜயை ரொம்ப கஷ்ட்டப்படுத்த கூடாது என்று அப்படி செய்திருப்பார்கள் போல.
தமனின் இசையில் “ரஞ்சிதமே...” பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் விஜய் பட பாடல்கள் போலவே இல்லை. பின்னணி இசை காட்சிகளைப் போல் உற்சாகம் இன்றி பயணிக்கிறது.
டைடில் கார்டில் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் என்று போட்டிருக்கிறது. ஆனால், காட்சிகள் நகர்வதை பார்த்தால் அவர் படத்தொகுப்பு செய்தது போல் இல்லை. நீக்க வேண்டிய காட்சிகள் ஏகப்பட்டது இருந்தாலும், அதை வெட்டாமல் விட்டது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரைலர் இது அரைத்த மாவு என்பதை நிரூபித்திருந்தது. ஆனால், படம் இது அரைத்த மாவு மட்டும் இல்லை, புளித்த மாவு என்று சொல்லிவிட்டது.
வம்சி படியப்பள்ளி, ஹரி, அசிஷோர் சாலோமன் என்று மூன்று பேர் சேர்ந்து கதை எழுதியிருக்கிறார்கள். ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு கதையை சுவாரஸ்யம் இல்லாத கதையாக எழுதியிருப்பவர்கள், திரைக்கதையையும் படு மோசமாக அமைத்திருக்கிறார்கள்.
சரி காட்சிகளிலாவது இயக்குநராக வம்சி படியப்பள்ளி தன்னை நிருபிப்பார் என்றால் அங்கேயும் அவர் சறுக்கியிருக்கிறார்.
முதல் பாதி முழுவதும் ரொம்ப மெதுவாக நகர்வதோடு, படமே முடிந்துவிடும் விதத்தில் காட்சிகள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் எதையாவது செய்திருக்க மாட்டார்களா, என்ற எதிர்பார்ப்போடு உட்கார்ந்தால், அங்கேயும் ஏமாற்றம் தான்.
அதிலும், கடத்தப்பட்ட அண்ணன் மகளை விஜய் மீட்பது உள்ளிட்ட பல காட்சிகள் திணித்தது போல் இருக்கிறது.
அழுத்தமான கதை என்றாலும் அதை சொல்லிய விதம், கதாபாத்திரங்களை பயன்படுத்திய விதம் ஆகியவை எடுபடவில்லை.
விஜய் தனது அம்மாவிடம் பேசும் வசனங்கள், தன்னை பற்றி செய்திகள் வெளியிடும் பத்திரிகைகளில், தன் தொழி எதிரி பற்றி செய்தி வந்ததை சுட்டுக்காட்டி சரத்குமார் கோபப்படும் போது, அதே பத்திரிகையில் தனது இளையமகன் பற்றிய செய்தி வெளியாகியிருப்பது, இப்படி ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், விஜய் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்க கூடிய விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை. அப்படி சில விசயங்கள் இருந்தாலும் அவை திணிக்கப்பட்டவையாக இருப்பதோடு, சலிப்படையும் வகையில் இருக்கிறது.
மொத்தத்தில், ‘வாரிசு’ பெருத்த ஏமாற்றம்
ரேட்டிங் 2.5/5