Feb 10, 2023 03:32 PM

’வசந்த முல்லை’ திரைப்பட விமர்சனம்

99eecab7f1c53288418445191221671b.jpg

Casting : Simha, Kashmira Pardesi, Sarath Babu, Arya, Kochu Preman, Rama Prabha

Directed By : Ramanan Purushothama

Music By : Rajesh Murugesan

Produced By : Rajani Thalluri, Reshmi Simha

 

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் பாபி சிம்ஹா, பணி சுமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதனால், மன மாற்றத்திற்காக அவரும் அவரது மனைவி காஷ்மீராவும் சுற்றுலா செல்கிறார்கள். வனப்பகுதியில் இருக்கும் தங்கும் விடுதி ஒன்றில் இரவு நேரத்தில் இருவரும் தங்குகிறரகள்.  அப்போது காஷ்மீராவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட, மருந்து வாங்குவதற்காக சிம்ஹா இரவு நேரத்தில் பயணிக்கிறார். திரும்ப விடுதிக்கு வரும்போது, அவருடைய மனைவி மாயமாகி விடுவதோடு, விடுதியில் இருக்கும் பெரியவர் பாபி சிம்ஹாவை யார்? என்று தெரியாதவாறு நடந்துக்கொள்வதோடு, அவர் அங்கு தங்கவில்லை என்றும் கூறுகிறார். இதனால் குழப்பமடையும் சிம்ஹா, நிஜத்தையும், தனது மனைவியையும் எப்படி கண்டுபிடிக்கிறார்?  என்பதை எதிர்பாராத திருப்பங்களுடனும், குழப்பங்களுடனும் சொல்வது தான் ‘வசந்த முல்லை’.

 

பாபி சிம்ஹா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கிறார். பணி சுமையால் பாதிக்கப்படும் காட்சிகளிலும் சரி, தங்கும் விடுதியில் நடக்கும் குழப்பமான சம்பவங்களிலும் சரி நடிப்பில் அசத்துகிறார். ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும் தனது மாறுபட்ட நடிப்பால் ஒட்டு மொத்த திரையரங்கையே சிம்ஹா கட்டிப்போட்டு விடுகிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் காஷ்மீரா பர்தேசி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

 

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஆர்யாவின் கதாபாத்திரம் எதிர்பார்க்காத திருப்பமாக இருக்கிறது.

 

தங்கும் விடுதியின் பணியாளராக நடித்திருக்கும் கொச்சு பிரேமன், ரமா பிரபா, தீபக் பரமேஸ், மோகன், கிரீஸ் நாயர், மோனா, சரத்பாபு என படத்தில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஒரு இரவில், ஒரு லொக்கேஷனில் நடக்கும் கதை என்றாலும், கேமரா கோணங்களில் வித்தியாசத்தை காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. அதிகம் இரைச்சல் இல்லாத இசை கவர்கிறது.

 

விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும், கலை இயக்குநர் ஆர்.கே.நாகராஜின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. தங்கும் விடுதி வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பு.

 

எளிமையான சஸ்பென்ஸ் திரில்லர் கதையை யூகிக்க முடியாத திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரமணன் புருஷோத்தமன்.

 

விடுதியில் நடக்கும் சம்பவங்கள், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு சீட் நுணியில் உட்கார வைத்தாலும், பல சம்பவங்கள் ரசிகர்களுக்கு பலவிதமான குழப்பங்களை ஏற்படுத்துகிறது. 

 

குழப்பங்கள் அனைத்திற்கும் இறுதியில் இயக்குநர் விளக்கம் அளித்திருந்தாலும், அவை சினிமாத்தனமாக இருக்கிறதே தவிர இயல்பாக இல்லை.

 

மொத்தத்தில், ‘வசந்த முல்லை’ புதிதாக எதுவும் இல்லை.

 

ரேட்டிங் 3/5