’வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ திரைப்பட விமர்சனம்
Casting : Niranjana Neithiyar, Shruthi Periyasamy, Arshath
Directed By : Jeyaraj Pazhani
Music By : Darshan Kumar
Produced By : Neelima Isai
ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’. இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கும் இப்படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார். ஓரினச்சேர்க்கை காதலை குற்ற செயல் அல்ல, அதுவும் மனித உணர்வு தான் என்பதை வலியுறுத்தும் இப்படம் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா? அல்ல எதிர்க்கும் வகையில் இருக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த கிரமாத்து பெண்ணான நிரஞ்சனா நெய்தியாரும், நகரத்தில் வாழும் ஆவணப்பட பெண் இயக்குநரான ஸ்ருதி பெரியசாமியும் சில நாட்கள் ஒரே வீட்டில் தங்கும் போது, இவர்களிடையே காதல் உருவாகிறது. இதை தெரிந்துக் கொண்ட நிரஞ்சனா நெய்தியாரின் தந்தை அவருக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சர்ச்சையாக சொல்லாமல் மனித உணர்ச்சிகளை மக்களிடம் கொண்டு செல்லும் விதத்தில் சொல்வது தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சதீஷ் கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, கடற்கரை மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது.
ஒரு ஆணுக்கும், பெண்ணும் இடையே ஏற்படும் காதல் எப்போது வரும் என்று தெரியாது, அது இயற்கையானது என்பது போல், தன் பாலினத்தவர்கள் மீது ஏற்படும் காதலும் இயற்கையானது தான், எனவே அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக பதிவு செய்ய தவறியிருக்கிறார்.
இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை என்றாலும், இதுபோன்ற உறவுகளை சமூகம் ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அப்படி ஒரு விசயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக சொல்லாமல் அவசர அவசரமாக சொல்லியிருப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில், ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ ஓரினச்சேர்க்கையாளர்களின் மனதை மக்களுக்கு முழுமையாக புரியவைக்கவில்லை என்றாலும், பாராட்டக்கூடிய புதிய முயற்சி.
ரேட்டிங் 2.5/5