‘வீரமே வாகை சூடும்’ விமர்சனம்
Casting : Vishal, Dimple Hayathi, Raveena, Yogi Babu, Baburaj, G. Marimuthu, Thulasi
Directed By : Thu Pa Saravanan
Music By : Yuvan Shankar Raja
Produced By : Vishal
அப்பா, அம்மா, தங்கை என்று அளவான குடும்பத்தோடு சாதாரண மனிதராக வலம் வரும் விஷால், போலீஸ் வேலையில் சேருவதற்கான முயற்சியில் இருக்கிறார். இதற்கிடையே அவரது தங்கையை கொலை செய்யப்பட, கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் விஷால், அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதே ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் கதை.
வழக்கம் போல் சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்பும் விஷால், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை நடிப்பில் கச்சிதமாக காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் அடக்கி வாசித்தாலும், மக்களுக்கு பாடம் எடுக்கிறேன் என்ற பெயரில் மேடை பேச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் டிம்பிள் ஹயாதியிடம் நாயகிக்கான தோற்றம் சற்று குறைவாக இருந்தாலும், நடிப்பில் அதை ஈடுகட்டி விடுகிறார். குறிப்பாக வங்கி மேலாளரிடம் காட்டும் கோபமும், பேசும் வசனமும் சிறப்பு.
விஷாலின் தந்தையாக நடித்திருக்கும் மாரிமுத்து இயல்பாக நடித்திருக்கிறார். திறமை வெளிக்காட்டும் இடங்களை மிக சரியாகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளார். விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் துளசி அளவான நடிப்பில் கவர்கிறார். தங்கையாக நடித்திருக்கும் ரவீனா பொருத்தமான தேர்வாக இருக்கிறார். வில்லன்கள் கொலை செய்ய வரும் போது, கண்களிலும், பேச்சிலும் வெளிப்படுத்தும் தைரியத்தின் மூலம் மனதில் நிற்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தாலும், முக்கிய வில்லனாக நடித்திருக்கும் பாபுராஜ் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது, பல வெறுப்பேற்றுகிறது. சில காட்சிகளில் வரும் தீப்தி, காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் கவிதாபாரதி, குமரவேல் என அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இயல்பாக காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கவின்ராஜின் பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
சாதாரண ஆக்ஷன் கதையை திரைக்கதை மூலம் வித்தியாசப்படுத்தி காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் து.ப.சரவணன். அதற்காக சில கிளைக்கதைகளை ஒன்று சேர்த்து எதிர்ப்பார்ப்புடன் கதையை நகர்த்தி செல்பவர், காட்சி அமைப்புகளில் சற்று கவனம் செலுத்தி, படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் ஆக்ஷன் பட ரசிகர்களை படம் திருப்திப்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில், படத்தில் நீளத்தால் ‘வீரமே வாகை சூடும்’ வாகை சூட தவறிவிட்டது.
ரேட்டிங் 3/5