Jun 02, 2023 03:27 PM

’வீரன்’ திரைப்பட விமர்சனம்

797432418259b7df1f92ed8d256177b3.jpg

Casting : Hiphop Tamizha Aadhi, Vinay Rai, Athira Raj, Munishkanth, Kaali Venkat

Directed By : ARK Saravan

Music By : Hiphop Tamizha

Produced By : Sathya Jyothi Films

 

வீரனூர் என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆதி சிறு வயதில் மின்னல் தாக்கி சுயநினைவை இழக்கிறார். மேல் சிகிச்சைக்காக அவரை அவரது அக்கா சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரது உடல் நிலை குணமடைவதோடு, அவரது உடலில் மின்னல் சக்தி உருவாகிறது. அந்த சக்தியை வைத்து மற்றவர்களின் மூளையை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் ஆதி அறிந்துக்கொள்கிறார். 

 

இதற்கிடையே, ஆதி தனது வீரனூர் கிராமத்துக்கு ஆபத்து ஏற்படுவது போல் கனவு காண்கிறார். உடனடியாக சிங்கப்பூரில் இருந்து வீரனூர் கிராமத்துக்கு வரும் ஆதிக்கு, லண்டனை சேர்ந்த விஞ்ஞானி வினய், வீரனூர் கிராமத்தில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கரமான திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் விஷயம் தெரிய வருகிறது. வர இருக்கும் ஆபத்து பற்றி சொன்னாலும் புரிந்துக்கொள்ளாத மக்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் ஆதி, அதை எப்படி செய்கிறார்? என்பது தான் ‘வீரன்’ படத்தின் மீதிக்கதை.

 

உலக அளவில் சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு என்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இந்த வீரன், உலக சூப்பர் ஹீரோக்கள் போல் இல்லாமல், கிராமத்து சூப்பர் ஹீரோவாகவும், எளிமையானவராகவும் வலம் வருகிறார்.

 

ஹீரோவாக சில படங்களில் வெற்றி பெற்ற ஆதி, சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்தாலும், லாஜிக் மீறாமல் அதை செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார். அவரது குழந்தைத்தனமான முகமும், நடிப்பும் குமரன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்தாலும், வீரன் என்ற சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்த பிறகும் அவர் வெறும் ஹீரோவை போல் வழக்கமான சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பது கதாபாத்திரத்தை சற்று பலவீனப்படுத்துகிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஆதிரா ராஜ், குடும்ப பாங்கான முகமாக இருந்தாலும் கதாநாயகிக்கான முகமாக இல்லை. அவரும் கதாநாயகியாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாகவே வலம் வருகிறார். 

 

வில்லனாக நடித்திருக்கும் வினய், ஆதியின் நண்பராக நடித்திருக்கும் யூடியூபர் சசி, முனிஷ்காந்த், காளி வெங்கட் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருப்பதோடு, சூப்பர் ஹீரோ வீரன் வரும் காட்சிகளை இயல்பாகவும், நம்பகத்தன்மையோடும் படமாக்கியிக்கிறது.

 

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, காட்சிகளின் அளவையும், படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

 

‘மரகத நாணயம்’ படம் மூலம் நகைச்சுவை உணர்வுள்ள இயக்குநர் என்று பெயர் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண், இந்த படத்தில் அதே நகைச்சுவையை கொஞ்சம் ஆக்‌ஷன் கலந்து கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவரது இந்த முயற்சி தான் முதலுக்கே மோசமாகிவிட்டது.

 

சூப்பர் ஹீரோ ஜானர் படம் என்றாலும் எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக வீரன் கதாபாத்திரத்தை எளிமையாக வடிவமைத்திருக்கும் இயக்குநர், அதற்கான கதை மற்றும் காட்சிகளையும் மிக எளிமையாகவே வடிவமைத்தாலும், காட்சிகளின் நீளம் மற்றும் மெதுவான திரைக்கதை சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

 

ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர், இரண்டையும் ரசிகர்கள் திருப்தியடையும் வகையில் சொல்லாமல் அறைகுறையாக சொல்லியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனம். இருந்தாலும், சூப்பர் ஹீரோ படத்தை வழக்கமான பாணியில் சொல்லாமல், சாதாரண முறையில் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் சொல்லியிருப்பது படத்தை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘வீரன்’ வெறும் ஹீரோ தான்.

 

ரேட்டிங் 3/5