’வீரபாண்டியபுரம்’ விமர்சனம்
Casting : Jai, Meenakshi, Ahaansha Singh, Sarath Logidass, Muthukumar, Arjay, Sathru, Jayaprakash, Harish Udaman, Bala Saravanan
Directed By : Suseenthiran
Music By : Jai
Produced By : S.Aishwarya
ஜெய்யும், மீனாக்ஷியும் காதலிக்கிறார்கள். மீனாக்ஷியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்ள மீனாக்ஷி முடிவு செய்கிறார். ஆனால், அதற்கு சம்மதிக்காத ஜெய், பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் நடக்க வேண்டும், என்று கூறி மீனாக்ஷியின் தந்தையிடம் அவரை அழைத்து சென்று, நடந்தவற்றை கூறுகிறார். அவரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி, ஜெய்க்கு மீனாக்ஷியை திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்வதோடு, திருமணத்திற்கு முன்பு ஜெய்யை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், ஜெய் அவரை கொலை செய்துவிடுவதோடு, அவருடைய தம்பிகளையும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஜெய் யார்? எதற்காக மீனாக்ஷியின் குடும்ப ஆண்களை அவர் கொலை செய்கிறார்? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் மீதிக்கதை.
ஏற்கனவே வந்த கதையாக இருந்தாலும், அதை பலவித ட்விஸ்ட்டுகளோடும், கமர்ஷியல் சமாச்சாரங்களோடும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
நாயகனாக நடித்திருக்கும் ஜெய், நடிக்க ரொம்ப முயற்சிக்கிறார். அவரது முயற்சி அவருக்கு கைகொடுக்காமல் போனாலும், முடிந்தவரை சமாளித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மீனாக்ஷி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஹான்ஷா சிங் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நிறைவாக நடித்து மனதில் நிற்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் சரத் லோகிதாஸ், முத்துக்குமார், அர்ஜய், சத்ரு ஆகியோர் வழக்கம் போல் பேச்சாலும், கண்களாலும் மிரட்டுகிறார்கள். ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். பால சரவணன் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.
வேல்ராஜின் ஒளிப்பதிவு அளவு. இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜெய், வியாபார நோக்கத்துடன் பாடல் போட்டுள்ளார். அஜீஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
வெவ்வேறு கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்த இயக்குநர் சுசீந்திரன், பாண்டியநாடு படத்திற்குப் பிறகு ஒரே மாதிரியான கதையோடு பயணிப்பது சற்று வருத்தம் அளித்தாலும், அதை ரசிகர்களுக்கு பிடித்தது போல் கமர்ஷியலாக சொல்வது ஆறுதல் அளிக்கிறது.
இந்த படத்தின் கதையும் நாம் ஏற்கனவே பார்த்தது போன்று இருந்தாலும், சுசீந்திரனின் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் திருப்புமுனையோடு கூடிய காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
ஜெய்யின் அறிமுகம் மற்றும் அவர் வில்லன் குடும்பத்திற்குள் நுழைந்து அவர்களை அழிக்க நினைப்பது, ஆகியவை படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தி செல்கிறது. பிறகு ஜெய் யார்? என்பது தெரிந்த பிறகு, என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு, படத்தை இறுதி வரை விறுவிறுப்பாகவும், வேகமாக நகர்த்தி செல்கிறது.
மொத்தத்தில், ‘வீரபாண்டியபுரம்’ விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத கமர்ஷியல் படம்.
ரேட்டிங் 3/5