Jun 17, 2022 06:51 PM

’வீட்ல விசேஷம்’ விமர்சனம்

9284715d4f069374dfa816ce7213e01f.jpg

Casting : RJ Balaji, Sathyaraj, Urvashi, Aparna Balamurali, Yogi Babu, Pugazh

Directed By : RJ Balaji and NJ Saravanan

Music By : Girishh Gopalakrishnan

Produced By : Boney Kapoor and Raahul

 

ரயில்வே ஊழியரான சத்யராஜ் - ஊர்வசி தம்பதியின் மூத்த மகன் ஆர்ஜே பாலாஜி, பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் பள்ளியில் படித்து வருகிறார். காதலர்களான ஆர்ஜே பாலாஜியும், அபர்ணா பாலமுரளியும் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவுக்கு வரும் போது, ஆர்ஜே பாலாஜியின் அம்மா ஊர்வசி கர்ப்பமடைந்து விடுகிறார். பாலாஜிக்கு அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவத்தால் அவரது காதல் திருமணமே நின்று போக, அக்கம் பக்கத்தினரின் கேலிக்கும் கிண்டலுக்கும் சத்யராஜின் குடும்பம் ஆளாகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சிரிப்பாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கும்படியும் சொல்வது தான் படத்தின் கதை.

 

சர்ச்சையான கதைக்களமாக இருந்தாலும் அதை மிக சரியாக கையாண்டு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு படமாகவும், மூத்தவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற மெசஜை மிக அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி அளவான நடிப்பும் மூலம் அமர்க்களப்படுத்துகிறார். தனது வழக்கமான நகைச்சுவை வசனங்கள் மூலமாக நம்மை அவ்வபோது சிரிக்க வைக்கிறார். கதையின் நாயகனாகவும் பல இடங்களில் முத்திரை பதிப்பவர், காமெடி, செண்டிமெண்ட், காதல் என அனைத்து ஏரியாவிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

 

பாலாஜிக்கு ஜோடியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி, கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். 

 

சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஜோடி படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் இருவரும் அசத்தலாக நடித்திருக்கிறார்கள். தாத்தா ஆக வேண்டிய வயதில் அப்பாவாகும் சூழலை சமாளிக்கும் காட்சிகளில் சத்யராஜின் நடிப்பு கைதட்ட வைக்கிறது.

 

படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் பாராட்டும்படி இருந்தாலும் ஊர்வசி அத்தனை பேரையும் தனது நடிப்பு மூலம் ஊரம் கட்டிவிடுகிறார். கடினமான காட்சிகளில் கூட மிக சாதாரணமாக நடித்திருக்கும் அவரை நடிப்பு ராட்சசி என்று சொன்னால் மிகை ஆகாது.

 

கார்த்திக் முத்துகுமாரின் ஒளிப்பதிவும், கிரிஷ் கோபாகிருஷ்ணனின் இசையும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. கதையோடு பயணிக்கும் ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேத்திருக்கிறது. பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ரகம்.

 

வேற்று மொழி படத்தின் ரீமேக் என்பது தெரியாத வகையில் தமிழுக்கு ஏற்றபடி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன், 50 வயதை கடந்தவர்களின் பாசம், காதல் போன்ற உணர்வுகளை ரசிகர்களிடம் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்கள்.

 

சர்ச்சையான கதைக்கருவாக இருந்தாலும், படம் பார்ப்பவர்கள் முகம் சுளிக்காமல் சிரித்து ரசிக்கும் வகையில் காட்சிகளை கலகலப்பாகவும், கருத்து சொல்லும் வகையிலும் வடிவமைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

மொத்தத்தில், ‘வீட்ல விசேஷம்’ குடும்பங்கள் கொண்டாடும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம்.

 

ரேட்டிங் 3.5/5