Oct 05, 2024 12:48 PM

‘வேட்டைக்காரி’ திரைப்பட விமர்சனம்

5d5a1e5999c05fe42ef05028a9b1f218.jpg

Casting : Sanjana Singh, Rahul, Veluchami, Kanja Karuppu, Vincent Asokan

Directed By : Kalimuthu Kadhamuthu

Music By : AK Ramji

Produced By : Sri Karuppar Films - Vishnu Priya Veluchami

 

பணக்கார வீட்டு பெண்ணான நாயகி சஞ்சனா சிங், ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் ராகுலை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு சஞ்சனாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால், ராஜபாளையாம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றும் ராகுலின் சித்தப்பாவிடம் சென்று பாதுகாப்பாக இருக்கலாம் என்று சஞ்சனா யோசனை சொல்ல, அதன்படி காதலர்கள் அந்த மலை கிராமத்திற்கு செல்கிறார்கள்.

 

சஞ்சனாவுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் ராகுலின் காதலை பார்த்து, இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை அவரது சித்தப்பா வேலுச்சாமி மேற்கொள்கிறார். சாமர்த்தியமாக திருமணத்தை தவிர்க்கும் சஞ்சனா, வனப்பகுதியில் இருக்கும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தையும், அவர்களுக்கு உதவி செய்யும் வேலுச்சாமியின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பதோடு, இரவு நேரங்களில் வனப்பகுதியில் யாரையே தேடி செல்கிறார். அவரது தேடுதல் வேட்டையின் பின்னணி என்ன?, உண்மையில் அவர் யார்?, அவரை உயிருக்கு உயிராக காதலிக்கும் ராகுலின் காதல் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கான விடைகளை கமர்ஷியல் அம்சங்கள் பின்னணியில் அதிரடியாக சொல்வது தான் ‘வேட்டைக்காரி’.

 

கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த சஞ்சனா சிங், கதையின் நாயகியாக அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், அவருக்கான அடையாளமான கவர்ச்சியையும் அளவாக வெளிக்காட்டி அவ்வபோது ரசிகர்களை குஷிப்படுத்துபவர், சில இடங்களில் நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ராகுல், சஞ்சனா சிங்கை உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். முதல் படம் என்பதால் நடிப்பில் சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும், அதை சாமர்த்தியமாக சமாளித்திருக்கிறார்.

 

நாயகனின் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேலுச்சாமி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வனத்தின் அருமை பெருமையை பாடல் மூலம் விவரித்து வெள்ளந்தி மனிதராக வலம் வருபவர், திடீரென்று மர்ம மனிதர்களுக்கு உதவி செய்யும் போது, நல்லவரா? கெட்டவரா? என்று யோசிக்க வைக்கிறார்.

 

காமெடி ஏரியாவில் தனி ஒருவராக கலக்க முயற்சித்திருக்கும் கஞ்சா கருப்பு போலிச்சாமியார் கதாபாத்திரத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை கொஞ்சைப்படுத்தும் விதமாக நடித்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் சாமியாராக அவர் செய்யும் கலாட்டாக்கள் சில சிரிக்க வைத்தாலும், பல வெறுப்படைய செய்கிறது.

 

வின்செண்ட் அசோகன் ஒரு காட்சியில் முகம் காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

 

ஏ.கே.ராம்ஜி இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. குறிப்பாக வனம் குறித்த பாடல் சிந்திக்க வைக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் கே.ஆறுமுகம் அடர்ந்த வனப்பகுதியின் அழகையும், அந்த அழகான பகுதிகளில் வாழும் மக்களின் அவஸ்தைகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் நடிகைகளை காட்டியிருக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் காளிமுத்து காத்தமுத்து சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் ஜானர் கதையாக இருந்தாலும், காதல், காமெடி, கவர்ச்சி என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் சேர்த்து முழுமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்.

 

கதாநாயகியை முதன்மைப்படுத்தி இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து, அமைத்திருக்கும் திரைக்கதை திருப்பங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், சஞ்சனா சிங் யார்?, அவர் அந்த மலைப்பகுதிக்கு வந்தது ஏன்?, என்ற மர்மத்தை படத்தின் முதல் பாதியில் உடைத்திருப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்துவிடுகிறது. அதே போல், கஞ்சா கருப்பின் ஆட்டத்தை அதிகமாக காட்டியிருப்பது பார்வையாளர்களை சோர்வடையவும் செய்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைபாடுகள் படத்தில் இருந்தாலும், மர்ம மனிதர்களின் நடமாட்டம், அவர்களை சஞ்சனா சிங் எப்படி வேட்டையாடப் போகிறார், போன்றவை படத்தின் வேகத்தை அதிகரித்து, படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘வேட்டைக்காரி’ வேற மாறி.

 

ரேட்டிங் 2.5/5