Mar 26, 2025 06:24 PM

’வெட்டு’ திரைப்பட விமர்சனம்

3e8b3d1652ffd54ebbbb04987a1f568f.jpg

Casting : Raagin Raj, Ankitha Naskar, Rohit, Ester Noronha, Mukku Avinash, Salem Vengai Ayyanar, Premnath, Satyam Rajesh, Ajay, Viji Chandrasekhar, Rajeev Kanakala, Indraja, Sravan, Santosham Suresh, Radha Rajasekhar,

Directed By : Amma Rajashekar

Music By : SS Thaman

Produced By : Sri Poovayi Amman Movies - Salem Vengai Ayyanar

 

அம்மாவின் அரவணைப்பில் வளரும் நாயகன் ராகின் ராஜ், அம்மா மீது அதீத பாசம் கொண்டவராகவும், அவருக்காக எதையும் செய்ய துணிந்தவராகவும் இருக்கிறார். திடீரென்று உடல்நிலை பாதிக்கப்படும் அவரது அம்மா, அவரது அப்பா யார்? என்பதையும், அவரை விட்டு தான் பிரிந்ததற்கான காரணத்தையும் சொல்வதோடு, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் கூறுகிறார். அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது அப்பாவை தேடி உத்தரப் பிரதேசத்திற்கு செல்லும் ராகின் ராஜ், தனது அப்பா வேறு திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக வாழ்வதை தெரிந்துக் கொள்கிறார். இருந்தாலும், தனது அம்மாவுக்காக அவரை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும், என்பதற்காக தன்னை அனாதை என்று சொல்லி அவரிடமே வேலைக்கு சேர்ந்து, அவரது குடும்பத்துடன் பழகுகிறார்.

 

இதற்கிடையே, அவரது அப்பாவின் குடும்பம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து அவர்களை மீட்க போராடும் ராகின் ராஜ்,  அவர்களை காப்பாற்றினாரா?, அவரது அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா ? என்பதை இரத்தம் தெறிக்க சொல்வதே ‘வெட்டு’.

 

அறிமுக நாயகன் ராகின் ராஜ், அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அனாதையாக கஷ்ட்டப்படும் காட்சிகளில் தனது சாந்தமான முகம் மற்றும் அப்பாவித்தனம் மூலம் பார்வையாளர்களின் மனங்களில் சட்டென்று இடம் பிடித்து விடுகிறார். அதே சமயம், அப்பாவின் பிரச்சனைக்காக கையில் கத்தி எடுக்கும் போது, இந்த சாக்லெட் பாய்க்குள் இப்படி ஒரு ஃபயரா!,  என்று பார்வையாளர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

கதாநாயகியாக நடித்திருக்கும் அங்கிதா, பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக இருந்தாலும், தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகில் பார்வையாளர்களை எளிதில் கவர்ந்துவிடுகிறார். திரைக்கதையில் அவருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரது இளம்பருவ காதலை விபரீதமான காதலாக மாறுவது, பார்வையாளர்கள் எதிர்பார்க்காத  ஒன்றாக இருப்பதோடு, அந்த காதல் என்னவாகும், அதை இயக்குநர் எப்படி கையாளப் போகிறார், என்பது திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிகரிக்கச் செய்திருக்கிறது. 

 

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ரோகித் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் எஸ்தர் தம்பதி, தங்களது சிக்கன் கடை காமெடி மூலம் அவ்வபோது கிச்சு..கிச்சு..மூட்டி சிரிக்க வைத்தாலும், மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டு, உயிருக்கு போராடும் காட்சிகளில் பார்வையாளர்களையும் பதற்றமடைய செய்துவிடுகிறது. 

 

காமெடி வேடம் மூலம் சிரிக்க வைத்து கவனம் ஈர்க்கும் முக்கு அவினாஷ், மகனின்  மரணத்திற்கு பழி தீர்க்க துடிக்கும் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதா, உடல் முழுவதும் கருப்பு நிறத்தை பூசிக்கொண்டு வித்தியாசமான வேடத்தில் வில்லனாக மிரட்டியிருக்கும் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், இந்திரஜா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

ஸ்டண்ட் சில்வா மற்றும் ஸ்டண்ட் கெவின் ஆகியோரது சண்டைக்காட்சிகளில் அளவுக்கு அதிகமான இரத்தம் தெறிக்கிறது. 

 

எழுதி இயக்கியிருக்கும் அம்மா ராஜசேகர், காதல், ஆக்‌ஷன், அம்மா செண்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக சேர்த்து விறுவிறுப்பான மற்றும் வேகமான திரைக்கதையுடன் முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்து ரசிக்க வைத்தாலும், அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் மூலம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துவிடுகிறார். 

 

உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் மத அரசியலை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் அம்மா ராஜசேகர், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சி அல்லது குறிப்பிட்ட அமைப்பு பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், காவி என்ற குறியீட்டின் மூலம் தற்போதைய மத அரசியலை துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார்.

 

காதல் மற்றும் ஆக்‌ஷனை மையப்படுத்திய கதை என்றாலும், அதை சமூகப் பிரச்சனை பின்னணியோடு கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இயக்குநர் அம்மா ராஜசேகர், காட்சிகளில் இருக்கும் வன்முறை மற்றும் இரத்தத்தை குறைத்தால் கோலிவுட்டிலும் இயக்குநராக கோலோச்சலாம்.

 

மொத்தத்தில், ‘வெட்டு’ இரத்த திருவிழா!

 

ரேட்டிங் 3/5