Dec 20, 2024 07:13 PM

’விடுதலை - பாகம் 2’ திரைப்பட விமர்சனம்

46b94a64c06652996b6c22bfe0f24749.jpg

Casting : Vijay sethupathi, Soori, Manju Warrier, Kishore, Anurag Kashyap, Ken Karunas, Rajeev Menon, Gautham Vasudev Menon, Bose Venkat, Bhavani Sre, Vincent Ashokan, Chetan

Directed By : Vetrimaaran

Music By : Ilaiyaraaja

Produced By : RS Infotainment - Elred Kumar

 

தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை கடைநிலை காவலர் குமரேசன் துப்பாக்கி முனையில் கைது செய்வதோடு ‘விடுதலை’ முதல் பாகம் முடிந்திருக்கும். அதன் தொடர்சியான இந்த இரண்டாம் பாகத்தில், பள்ளி வாத்தியாரான பெருமாள், தமிழர் மக்கள் படையின் தலைவரானது எப்படி?, அவரது இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடுவது ஏன்? என்பதை சமூகத்தில் நடந்த, தற்போதும் நடக்கின்ற சமூக அநீதிகளை பின்னணியாகக் கொண்டு பேசப்பட்டிருக்கும் அரசியல் தான் ‘விடுதலை - பாகம் 2’.

 

முதல் பாகத்தில் காவல்துறையின் தேடுதல் வேட்டை மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வியலோடு, காவல்துறை அரசியலை பிரமாண்டமாக மட்டும் இன்றி பொழுதுபோக்காகவும் காட்சிப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் பண்ணை அடிமைகளாக மக்கள் அனுபவித்த கொடுமைகள், முதலாளிகளின் சுரண்டல், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆகியவற்றுடன், அவற்றை எதிர்த்து குரல் கொடுத்த கம்யூனிசம் மற்றும் திராவிட கட்சிகளின் எழுச்சி பற்றி பேசி, தற்போதைய தலைமுறைக்கு மிகப்பெரிய அரசியல் பாடம் எடுத்திருக்கிறார்.

 

பெருமாள் என்ற கதாபாத்திரத்தில், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பாவி பள்ளி வாத்தியார் தொடங்கி, கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என்று பல முகங்களோடு பயணித்து கவனம் ஈர்த்திருக்கும் விஜய் சேதுபதி, காதலர் மற்றும் கணவராகவும் தனது இயல்பான நடிப்பு மூலம் அசத்தியிருக்கிறார்.

 

கம்யூனிச இயக்கவாதியாக அறிமுகமாகி, பிறகு விஜய் சேதுபதியின் காதலியாகும் மஞ்சு வாரியரின் போராட்டக் குணமும், காதல் மனதும் ரசிர்களை கவர்ந்திழுக்கிறது. பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அவரது தலை முடி வெட்டப்பட்டதற்கான காரணம், தங்களை பலவீனமாக நினைக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய பலம் கொடுக்கும் டானிக்.

 

Viduthalai - Part 2

 

முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியாரை பிடிப்பதற்காக உயிரையும் பணய வைத்து அதிரடி காட்டிய குமரேசனான சூரி, இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார்? என்பதை தெரிந்துக் கொண்ட பிறகு, தான் ஏங்கிய துப்பாக்கி கையில் கிடைத்தும் அதை பயன்படுத்தாமல், தனது செயலை பாவமாக எண்ணி வருந்தும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். 

 

கம்யூனிச தலைவராகவும், விஜய் சேதுபதியின் அரசியல் குருவாகவும் நடித்திருக்கும் கிஷோர், தனது அனுபவம் வாய்ந்த படிப்பு மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். வங்க போராளியாக சில காட்சிகளில் தலை காட்டும் இயக்குநர் அனுராக் காஷ்யப், தலைமை செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன், போஸ் வெங்கட், வின்செண்ட் அசோகன் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களை சொந்தம் கொண்டாடும் பண்ணையார்களின் வக்கிர புத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருப்பன் கதாபாத்திரமும், அதில் கென் கருணாஸ் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும் மிக சிறப்பு.

 

இளையராஜாவின் இசையில் பாடல்கள் கவர்ந்தாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு சற்று வேகத்தடையாகவே இருக்கிறது. ஆனால், அவரது பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது. காதல் காட்சிகளில் நம்மை இதமாக வருடிச் செல்லும் ராஜா, போராட்டக்களம் மற்றும் சண்டைக்காட்சிகளில் பீஜியம் மூலம் தெறிக்க விடுகிறார்.

 

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் கேமரா மக்கள் பயணிக்க முடியாத இடங்களில் பயணித்து, அடர்ந்த வனப்பகுதியின் ஆபத்தை வியக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. கென் கருனாஸின் சண்டைக்காட்சி முதல் அதிகாரிகளின் ஆலோசனைகள் வரை தனது கேமரா மூலம் மிகப்பெரிய மேஜிக் செய்திருப்பவர், போராளிகளுக்கும், காவல் படைக்கும் இடையே நடக்கும் இறுதி மோதல் காட்சியில் பனி படர்ந்த மலையை மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

இயக்குநர் வெற்றிமாறன் பதிவு செய்ய முயற்சித்திருக்கும் அனைத்து அரசியல் சம்பவங்களையும் நேர்த்தியாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ராமர், முதல் பாகத்தின் சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

 

கலை இயக்குநர் ஜாக்கி, சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்கள் பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா மற்றும் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் உத்தரா மேனன் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

 

Suri in Viduthalai 2

 

ஏகாதிப்பத்தியம், வர்க்கம், முதலாளித்துவம், சர்வாதிகாரம், அடக்குமுறை, ஓடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றை படிக்கும் தற்போதைய தலைமுறையினர், அதன் பின்னணி என்ன? என்பதை ஆத்மார்த்தமாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருக்கும் அரசியல் மற்றும் காட்சிப்படுத்தியிருக்கும் சம்பவங்கள், பல வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருந்தாலும், அவை தற்போதும் வேறு வடிவங்களில் நடந்துக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அப்படி நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம், என்பதை வலியுறுத்தியிருப்பவர், ஆயுதப் போராட்டத்தினால் கிடைக்கும் வெற்றி நிரந்தரம் அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்ற வசனத்தின் மூலம் அரசியலில் சுலபமாக நுழைந்து, விரைவில் அரியணையில் அமர நினைக்கும் ரசிகர்களை கொண்ட தலைவர்களுக்கு சம்மட்டியடி கொடுத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது ஆழமான வசனங்கள் மூலம் படம் முழுவதும் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறார்.

 

உழைப்புக்கேற்ற கூலி, வார விடுமுறை, பண்டிகை போனஸ் என்று தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத்தருவதற்காக பலர் தங்கள் உயிரை பணயம் வைத்ததை நினைவுப்படுத்தியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வளர்ச்சி என்ற பெயரில் பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அரசு எந்திரத்தையும் அசைத்துப் பார்த்திருக்கிறார்.

 

ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் என சாதாரண மனிதராக வாழும் எதார்த்த வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்திருக்கும் இயக்குநர் முதல் பாதியில் போராட்டக்களத்தை இரத்தம் தெறிக்க காட்சிப்படுத்தியிருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. அதேபோல், சில காட்சிகளில் குமரேசன் கடிதம் படித்துக் கொண்டிருக்கும் போதே, பெருமாள் வாத்தியார் பேசுவதால் வசனங்கள் புரியாமல் போகிறது. இவை படத்தின் குறைகளாக தெரிந்தாலும், இரண்டாம் பாதியில் இந்த குறைகளை பார்வையாளர்கள் மறந்துவிடும் அளவுக்கு அழுத்தமான அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மூழ்கியிருக்கும் இளைஞர்களை அரசியலில் மூழ்கடிக்க முயற்சித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘விடுதலை - பாகம் 2’ எழுச்சியின் துவக்கம்.

 

ரேட்டிங் 4/5