Jun 03, 2022 01:02 PM

’விக்ரம்’ விமர்சனம்

4b0c6e7e2de5b4a033902e213eb846e7.jpg

Casting : Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil, Narain, Arjun Das, Harish Uthaman, Kalidas Jayaram

Directed By : Lokesh Kanagaraj

Music By : Anirudh Ravichander

Produced By : Kamal Haasan, R. Mahendran

 

1986 ஆம் ஆண்டு வெளியான கமலின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ’கைதி’ இந்த இரண்டு படங்களின் கருவை மையமாக வைத்துக்கொண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடத்தியிருக்கும் மிகப்பெரிய ஆக்‌ஷன் திருவிழா தான் ‘விக்ரம்’. 

 

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளான காளிதாஸ் ஜெயராம், ஹரிஷ் பெராடி ஆகியோருடன், காளிதாஸின் தந்தையான கமல்ஹாசனையும் முகமூடி கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்கிறது. காவல்துறை அதிகாரிகளை கொலை செய்த கும்பல் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பு, அண்டர்கவர் வேலைகளை செய்யும் பகத் பாசி குழுவிடம் காவல்துறை ஒப்படைக்கிறது. தனது அதிரடியான விசாரணை மூலம் முகமூடி கூட்டம் யார்? அதன் தலைவன் யார்? எதற்காக அவர்கள் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்கிறார்கள்? என்பதை பகத் பாசில் கண்டுபிடிக்கும் போது அவருக்கு மட்டும் அல்ல படம் பார்க்கும் நமக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் தெரிக்கவிடுவது தான் ‘விக்ரம் 2’ படத்தின் மீதிக்கதை.

 

படத்தின் ஹீரோ கமல்ஹாசன் எண்ட்ரி கொடுத்த உடனே கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். ஹீரோ படத்தின் ஆரம்பத்திலேயே இறப்பது போல் காட்சி இருந்தாலும், படம் விறுவிறுப்பாகவே நகர்கிறது. இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை யுக்தியும், காட்சி அமைப்புகளும் தான் காரணம்.

 

“பத்தல பத்தல...” என்ற பாடல் காட்சியில் செம எனர்ஜியோடு எண்ட்ரி கொடுக்கும் கமல்ஹாசன், க்ளைமாக்ஸ் காட்சியில் கூட்டத்தில் ஒருவராக நடந்து செல்லும் காட்சி வரை அதே எனர்ஜியோடு நடித்திருப்பது படம் பார்ப்பவர்களையும் எனர்ஜியாக வைத்திருக்கிறது. எந்த இடத்தில் வசனம் பேசனும், எந்த இடத்தில் நடிக்கனும், எந்த இடத்தில் அடிக்கனும் என்று அத்தனை விஷயங்களையும் மிக நேர்த்தியாக செய்திருக்கும் கமல்ஹாசன், வரும் காட்சிகள், பேசும் வசனங்கள் என அனைத்துக்கும் திரையரங்கே அதிரும் வகையில் கைதட்டல் சத்தம் கேட்கிறது. 

 

மாஸான எண்ட்ரியோடு வரும் விஜய் சேதுபதி, நடிக்காமலே பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். அவர் சும்மா வந்து நின்றாலே கைதட்டும் அளவுக்கு அவருடைய கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் மாஸ்டர் பட சாயல் தெரிந்தாலும், கொடுத்த வேலையில் எந்த குறையும் இல்லாமல் விஜய் சேதுபதி வித்தை காட்டியிருக்கிறார்.

 

முதல் பாதி முழுவதும் தன் வசப்படுத்திக் கொள்ளும் பகத் பாசில்,  ரசிகர்களுக்கு கமல் இல்லையே என்ற எண்ணம் ஏற்படாத வகையில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். கமல் மரணம் பற்றி அவர் விசாரிக்கும் முறை, அதில் வெளிப்படுத்தும் நடிப்பு மூலமாகவே நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பவர், பல காட்சிகளில் கண்கள் மூலமாகவே நடித்து நம்மை கட்டிப்போடுகிறார்.

 

க்ளைமாக்ஸில் எண்ட்ரி கொடுக்கும் சூர்யா, ஒரு காட்சியில் வந்தாலும் ஒட்டு மொத்த தியேட்டரையே வியக்க வைக்கும் விதத்தில் வெறித்தனமாக நடித்திருக்கிறார். படத்தின் ஆர்மபம் முதலே பில்டப் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் தான் சூர்யா வரப்போகிறார், என்று தெரிந்தாலும், அவருடைய தோற்றம் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்திவிடும் இயக்குநர், அதே சமயம் ஏமாற்றம் அளிக்காத வகையில் சூர்யாவின் வேடத்தை சூப்பராகவே வடிவமைத்திருக்கிறார்.

 

பழைய விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மூன்று நடிகர்களையும் சமமாக பயன்படுத்தியிருப்பதோடு, படத்தில் இடம்பெறும் சிறு சிறு கதாப்பாத்திரங்களுக்கு கூட கைதட்டல் கிடைக்கும் விதத்தில் அனைத்துக் காட்சிகளையும் மாசாக வடிவமைத்து கிளாஸான ஆக்‌ஷன் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அவர் அமைத்திருக்கும் லைட்டிங் மிரட்டலாக இருப்பதோடு,உறுத்தாமலும் இருக்கிறது. படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் அல்டிமேட்.

 

ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவுக்கு இந்த படமும் நிச்சயம் தேசிய விருது பெற்று தரும். சண்டைக்காட்சிகளை அதிரடியாக வடிவமைத்திருப்பதோடு ரசிக்கும்படியும் வடிவமைத்திருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.

 

அனிருத்தின் இசையில் பின்னணி இசை செம மாஸ். ஆக்‌ஷன் காட்சிகளின் போது அவருடைய பின்னணி இசை படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுப்பதோடு, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் இருக்கிறது.

 

மூன்று படங்களின் கதையை ஒரே படத்தில் சொல்லியிருந்தாலும், அதை ரசிகர்களுக்கு புரியும் படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். படம் முழுவதும் நட்சத்திரப் பட்டாளம் ஒரு பக்கம் இருந்தாலும், சிறு சிறு கதாப்பாத்திரங்களை கூட கவனிக்கும்படி காட்சிகளை மிக கச்சிதமாக தொகுத்திருப்பவர், மூன்று மணி நேரம் போனதே தெரியாதபடி படம் வேகமாக நகர பெரிதும் உழைத்திருக்கிறார்.

 

பகத் பாசில் மற்றும் கமல்ஹாசன் தரப்பில் இருக்கும் கதாப்பாத்திரங்களை கதையோடு பயணிக்கும்படி அமைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி தரப்பு கதாப்பாத்திரங்களை மட்டும் கமர்ஷியல் ஃபார்மட்டில் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய மிகப்பெரிய குடும்பம் மற்றும் அந்த குடும்பமே விஜய் சேதுபதியுடன் பணியாற்றுவது, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மூன்று மனைவிகள் என அத்தனை விஷயங்களும் கமர்ஷியல் விஷயங்களாக இருப்பதோடு, படத்திற்கு தேவையில்லாத விஷயமாகவும் இருக்கிறது. இந்த ஒரு விஷயம் மட்டுமே படத்தின் சிறு குறை என்று சொல்லலாம்.

 

மற்றபடி, கமல்ஹாசன் படத்தின் ஹீரோவாக அல்லாமல் ஒரு கதாப்பாத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்பதை விட, கமல்ஹாசனை கதைக்கு ஏற்ப கச்சிதமாக பயன்படுத்தி ஒரு முழுமையான ஆக்‌ஷன் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்கள் மூலம் ஆக்‌ஷன் படங்கள் இயக்குவதில் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ’விக்ரம் 2’ படம் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை நிச்சயம் பிடிப்பார்.

 

மொத்தத்தில், ‘விக்ரம்’ விஸ்வரூப ஆக்‌ஷன்

 

ரேட்டிங் 4/5