Feb 18, 2022 03:09 AM

’விலங்கு’ இணைய தொடர் விமர்சனம்

7b151d5ffd088ff721bdee4fbed0fe5e.jpg

Casting : Vimal, RNR Maohar, Bala Saravanan, Munishkanth, Nic Arts Chakravarthy, Iniya

Directed By : Prasanth Pandiyarajan

Music By : Ajesh

Produced By : Escape Artist - Madan

 

பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் மதன் தயாரிப்பில், விமல், இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரது நடிப்பில், ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘விலங்கு’. 7 பகுதிகளை கொண்ட இந்த இணைய தொடர் எப்படி இருக்கிறது, என்பதை பார்ப்போம்.

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நாயகன் விமல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். அவருடைய நிறைமாத கர்ப்பிணியை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு பணி சுமையில் விமல் சிக்கி தவிக்கிறார். இதற்கிடையே காணாமல் போன எம்.எல்.ஏ-வின் மைத்துனரை கண்டுபிடிக்கும் பணியில் விமல் உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட, சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடைக்கிறது. ஆனால், அந்த சடலம் எம்.எல்.ஏ-வின் மைத்துனர் இல்லை என்பது உறுதியாகிவிட, திடீரென்று அந்த சடலத்தில் இருந்த தலை காணாமல் போகிறது. இதனால், விமலுக்கு பிரச்சனை ஏற்பட, மறுபக்கம் அவருடை நிறைமாத கர்ப்பிணி மனைவி கீழே விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

 

ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் வழக்கில் ஏற்பட்ட சிக்கலால் பணிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து, என்ற சிக்கலான நிலையில், காணாமல் போன சடலத்தின் தலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் விமல் ஈடுபட, காணாமல் போன எம்.எல்.ஏ-வின் மைத்துனர் கோவில் வளாகத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. காணாமல் போன தலையுடன், கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வின் வழக்கையும் விசாரிக்கும் விமல், கொலையாளியையும், காணாமல் போன தலையையும் கண்டுபிடித்தாரா இல்லையா, என்பது தான் ‘விலங்கு’ இணைய தொடரின் முழுக்கதை.

 

ஒடிடி தளங்களில் வெளியாகும் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லை ஜானர் இணைய தொடர்கள் பெரும்பாலும் ஆபாசமான காட்சிகளும், வசனங்களும் நிறைந்தவையாக இருக்கும். ஆனால், ‘விலங்கு’ தொடர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, என அனைத்து தரப்பினரும் ஒன்றாக பார்க்க கூடிய சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடராக இருப்பதோடு, அதன் கதைக்களம் மிக இயல்பாக இருப்பது அதன் கூடுதல் சிறப்பு.

 

7 பகுதிகளை கொண்ட இந்த தொடரை மொத்தமாக பார்த்தால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால், அந்த 4 மணி நேரம் எப்படி போகிறது, என்று தெரியாதவாறு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாக இருக்கிறது.

 

கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்திருப்பார்கள்?, கொலையாளி யாராக இருப்பார்? ஆகிய கேள்விகள் நம் மனதுக்குள் எழுந்தாலும், எந்த இடத்திலும் நாம் யூகிக்க முடியாதபடி காட்சிகளும், திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்ப்பார்ப்போடு அனைத்து பகுதிகளையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன்.

 

பரிதி என்ற கதாப்பாத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விமல், கதாநாயகனாக அல்லாமல் ஒரு கதாப்பாத்திரமாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பில் குறையாக இருக்கும் சில விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாதபடி இந்த தொடரில் நடித்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணி மனைவியின் நிலையை எண்ணி வருந்தும் இடத்திலும் சரி, தனது பணிக்கு வர இருக்கும் ஆபத்தை எண்ணி தடுமாறும் இடத்திலும் சரி கச்சிதமான நடிப்பின் மூலம் விமல் கவர்கிறார்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆர்.என்.ஆர்.மனோகர், எப்போதும் போல் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார்.

 

காவல்துறை உயர் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, வேடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் அசத்துகிறார். உண்மையான காவல்துறை அதிகாரி தானோ, என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பாவனைகள், வசன உச்சரிப்பு என அனைத்தும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

 

மற்றொரு சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முனிஷ்காந்த், காவலராக நடித்திருக்கும் பால சரவணன் ஆகியோர் காமெடி நடிகர்களாக அல்லாமல் குணச்சித்திர நடிகர்களாக கவனம் பெறுகிறார்கள். குறிப்பாக பால சரவணனின் வேடமும்,  அவருடைய நடிப்பும் நிச்சயம் கைதட்டல் பெறும்.

 

அதிரடியான சண்டைக்காட்சிகளில் ஈடுபடவில்லை, ஆக்ரோஷமான வசனம் பேசவில்லை, கொடூரமான உருவமும் இல்லை. ஆனால், வில்லன் கதாப்பாத்திரம் மீது நமக்கே சற்று பயம் ஏற்படும் வகையில் அவருடைய கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவரா! என்று ஆச்சரியப்படும் வகையில் வில்லன் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பு தன்மையும், அதில் அந்த நடிகர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பதோடு, வில்லன் யார்? என்று தெரிந்த பிறகும், முழு பாகத்தையும் பார்த்துவிட வேண்டும், என்ற தூண்டுதலை ஏற்படுத்துகிறது.

 

ஒளிப்பதிவாளர் தினேஷ் குமார் காட்சிகளில் உள்ள எதார்த்தத்தை சிதைக்காமல் பயணித்திருப்பதோடு, கதைக்களத்தை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதைகள் என்றாலே ஒளிப்பதிவாளர்கள் கையாளும் வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு, கதைக்களத்தையும், கதாப்பாத்திரங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் அஜீஷின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, பல இடங்களில் அமைதியை மட்டுமே பின்னணி இசையாக கொடுத்திருப்பது காட்சிகளில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது.

 

கதையில் இருக்கும் ட்விஸ்ட் தெரிந்த பிறகும் மீதி பகுதிகளை பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ். 7 பகுதிகள் கொண்ட தொடராக இருந்தாலும், எந்த ஒரு காட்சியும் திரும்ப திரும்ப வருவது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு கொடுக்க கூடாது, என்பதில் மிக கவனமாக செலுத்தியிருக்கும் படத்தொகுப்பாளர், கதை காவல்நிலையத்தை சுற்றி சுற்றி வந்தாலும், காட்சிகளி இருக்கும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

 

இணைய தொடரை எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜன், காவலர்கள் மற்றும் காவல்நிலையங்கள் எப்படி செயல்படுகிறது, என்பதை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதையை மண்மனம் மாறாமல் சொல்லியிருப்பவர், கதாப்பாத்திரங்களையும் இயல்பாக வடிவமைத்திருப்பது, ரசிகர்களையும் கதையுடன் பயணிக்க வைத்திருக்கிறது.

 

7 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் ஒவ்வொரு பகுதி முடிந்த பிறகும், அடுத்த பகுதியில் புதிய ட்விஸ்ட்டோடு, அதற்கு அடுத்த பகுதியின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்படும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் இணைய தொடர் என்றாலே இப்படித்தான் இருக்கும், என்ற வழக்கமான பாதையில் பயணிக்காமல், கதையையும், காட்சிகளையும் இயல்பாக நகர்த்தியிருப்பது புதிதாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

 

திரைப்படங்களே இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக இருந்தால் சற்று சலிப்பு ஏற்படும். அதேபோல், ஒடிடி தொடர்கள் என்னதான் விறுவிறுப்பாக இருந்தாலும் நாம் அதை ஓட்டி..ஓட்டி...பார்க்கும் அளவுக்கு தான் இருக்கும். ஆனால், இவை இரண்டையுமே நாம் மறந்துபோகும் விதத்தில், இந்த தொடர் நம்மை கட்டிப்போட்டு விடுகிறது.

 

மொத்தத்தில், ‘விலங்கு’ வியக்கவும் வைக்கும், ரசிக்கவும் வைக்கும்.

 

ரேட்டிங் 4.5/5