Jun 10, 2023 04:06 PM

’விமானம்’ திரைப்பட விமர்சனம்

b2e4b004a61979db2a393e3fdee7f98d.jpg

Casting : Samuthirakani, Master Dhruvan, Meera Jasmine, Anasuya Bharadwaj, Dhanraj, Rahul Ramakrishna, Naan Kadavul Rajendran

Directed By : Siva Prasad Yanala

Music By : Charan Arjun

Produced By : Kiran Korrapati & Zee Studios

 

வறுமையோடு வாழ்க்கை நடத்தும் மாற்றுத்திறனாளியான சமுத்திரக்கனியின் மகன் துருவனுக்கு விமானத்தின் மீது பேரார்வம் ஏற்படுவதோடு, விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படுகிறது. மகனின் ஆசையை நிறைவேற்ற போராடும் சமுத்திரக்கனியின் முயற்சி வெற்றி பெற்றதா?, இல்லையா? என்பது தான் ‘விமானம்’ படத்தின் கதை.

 

மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, வறுமையான வாழ்க்கையோடு போராடும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார். தன் மகனின் எதிர்காலம் தான் தன்னுடைய வாழ்க்கை என்ற நிலையில், அவருடைய மகனுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அவர் தடுமாறும் காட்சிகளில் வீரய்யா என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

சமுத்திரக்கனியின் மகன் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவன் துருவன் விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படும் போது அறியாத வயதில் அனைவருக்கும் வரும் ஆசை என்று நினைத்தாலும், இரண்டாம் பாதியில் அவர் விமானத்தில் எப்படியாவது பயணிக்க வேண்டும், என்று படம் பார்ப்பவர்களையும் பிராத்திக்க வைக்கிறார்.

 

சிறப்பு தோற்றத்தில் தோன்றினாலும் மீரா ஜாஸ்மின் கவனம் ஈர்க்கிறார்.

 

அனுசுயா பரத்வாஜ், தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரின் வேலை குறைவாக இருந்தாலும் அதில் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்கள்.

 

விவேக் கலேப்புவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சரண் அர்ஜுனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மார்தாண்ட் கே.வெங்கடேஷின் படத்தொகுப்பு நேர்த்தி.

 

ஜேகே மூர்த்தியின் கலை இயக்கத்தில் சமுத்திரக்கனி வாழும் பகுதி மற்றும் விமானம் செய்றகை என்பது தெரிந்தாலும், படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

தமிழில் வசனம் எழுதியிருக்கும் பிரபாகர், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துகிறது. 

 

அப்பா, மகன் பாசப் போராட்டத்தை மையப்படுத்திய கதைகள் பல வந்திருந்தாலும், வறுமையோடு போராடும் ஒரு தந்தையின் உணர்வுகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி இயக்கியிருக்கும் இயக்குநர் சிவ பிரசாத் யனாலா, எளிமையான கதையை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

படம் முழுவதும் சோகம் நிரம்பியிருந்தாலும், சிறுவனின் ஆசை நிறைவேறுமா? என்ற கேள்வி நம்மை எதிர்பார்ப்போடு படம் பார்க்க வைக்கிறது. இறுதியில், அவருடைய ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையை கொடுத்த இயக்குநர் க்ளைமாக்ஸில் வைத்த காட்சி நம்மை கலங்க செய்துவிடுகிறது.

 

மொத்தத்தில், சோகமான பழைய பாணி படம் தான் என்றாலும், இந்த ‘விமானம்’ நமக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

 

ரேட்டிங் 3/5