Aug 13, 2022 04:33 AM

’விருமன்’ திரைப்பட விமர்சனம்

bf7bb760db05dc0521b8ee8a2e45e02e.jpg

Casting : Karthi, Adhithi Sankar, Prakash Raj, Rajkiran, Karunas, Suri, Singam Puli, RK Suresh, Saranya Ponvannan, GM Sundar, Vadivukarasi

Directed By : M. Muthaiah

Music By : Yuvan Shankar Raja

Produced By : Suriya Jyothika

 

பிரகாஷ் ராஜ்  - சரண்யா பொன்வன்னன் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். மூன்று பிள்ளைகள் அப்பா பேச்சை கேட்க, கடைசி பிள்ளையான கார்த்தி அம்மா மீது அளவுக்கதிகமான பாசத்தோடு இருக்கிறார். தாசில்தாரான பிரகாஷ்ராஜ் தனது மனைவி ஏழை என்பதால் அவரை தரக்குறைவாக நடத்துகிறார். ஒரு கட்டத்தில் பிரகாஷ் ராஜ் செய்த தவறால் சரண்யா பொன்வன்னன் தற்கொலை செய்துக்கொள்கிறார். தனது அம்மாவின் மரணத்திற்கு காரணமான தனது தந்தை பிரகாஷ் ராஜ் மீது கொலைவெறியில் இருக்கும் கார்த்தியை அவரது தாய்மாமன் ராஜ்கிரண் வளர்க்கிறார். அம்மாவின் மரணத்தால் தனது அப்பாவை கார்த்தி எதிரியாக பார்க்க, பிரகாஷ் ராஜும் கார்த்தியை எதிரியாக பார்க்கிறார்.

 

கார்த்தி வளர்ந்ததும் மீண்டும் தனது ஊருக்கு வருகிறார். தனது அம்மா ஆசைப்படி தனது அண்ணன்களை அம்மாவின் நினைவிடத்திற்கு அழைத்து வருவதற்காகவும், தனது அப்பாவை நல்வழிப் படுத்துவதற்காகவும் முயற்சியில் இறங்கும் கார்த்தி அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை அடிதடி, ஆட்டம் பாட்டம் என்று வழக்கமான பாணியில் சொல்வது தான் ‘விருமன்’.

 

வழக்கமான களமாக இருந்தாலும் கார்த்தி, தனது நடிப்பு மூலம் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். தாடியுடன், மடித்துக்கட்டிய வேட்டியில் கார்த்தி அதிரடி காட்டுவதை நாம் பல முறை பார்த்திருந்தாலும், அதிலும் சிறு சிறு வித்தியாசத்தை காட்ட அவர் மெனக்கெட்டிருப்பது பல இடங்களில் தெரிகிறது. வழக்கம் போல் செண்டிமெண்ட், காதல் காட்சி, ஆக்‌ஷன் காட்சி என அனைத்திலும் தனது வேலையை நிறைவாக செய்து கார்த்தி படத்திற்கு பலமாக இருக்கிறார்.

 

அறிமுக நாயகி அதிதி ஷங்கர், முதல் படத்திலேயே அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அலப்பறை செய்திருக்கிறார். கார்த்தியை மிரட்டும் காட்சியில் நடிப்பில் அதிரடி காட்டுபவர், காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அட்டகாசம் செய்திருக்கிறார்.

 

கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் தன் கதாப்பாத்திரத்தில் இருக்கும் திமிரை நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கார்த்தியின் மாமாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண், எப்போதும் போல் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

 

சூரியின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், சிங்கம் புலி வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.

 

கருணாஸ், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.சுந்தர், இளவரசு, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், சரண்யா பொன்வன்னன், வசுமித்ரா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மண்ணின் மனிதர்களாக நடித்து மனதில் நிற்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பதோடு, கிராமத்தின் அழகை ரசிகர்கள் ரசிக்கும்படியும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கிறது. அளவான பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஒரே மாதிரியான கிராமத்து கதை, மாறாத திரைக்கதை பாணி, வழக்கமான காட்சிகள் என தனது வழக்கமான பாணியில் இயக்குநர் முத்தையா பயணித்திருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

 

கிராமத்தில் சொல்ல வேண்டிய கதைகள் நிறைய இருப்பது உண்மை தான். ஆனால், அதை ஒரே மாதிரியாக சொன்னால் கிராமத்து படத்தையே மக்கள் வெறுத்துவிடுவார்கள், என்பதை இயக்குநர் முத்தையா எப்போது தான் புரிந்துக்கொள்வார் என்று தெரியவில்லை. 

 

ஒரே வட்டத்திற்குள் பயணிக்கும் இயக்குநர் முத்தையாவை காப்பாற்றியிருப்பது கார்த்தி தான். இரண்டரை மணி நேரம் படத்தை சலிப்படையாமல் பார்க்க வைப்பது கார்த்தியின் நடிப்பும், ஸ்கிரீன் பிரஷன்ஸும் தான். கார்த்தி மட்டும் இல்லை என்றால் விருமன் வெறுமனாகியிருக்கும்.

 

மொத்தத்தில், ‘விருமன்’ கார்த்தியால் வெற்றி பெறுவான்.

 

ரேட்டிங் 3.5/5