May 06, 2022 04:15 AM

’விசித்திரன்’ விமர்சனம்

e720342e6067280eb7d6bc80c3074cb1.jpg

Casting : RK Suresh, Poorna, Madhu Shalini, Ilavarasu, Marimuthu, Bhagavathi

Directed By : Padmakumar

Music By : GV Prakash Kumar

Produced By : Bala

 

மனைவி விவாகரத்து மற்றும் மகள் இறப்பால் மனம் உடைந்து போகும் ஆர்.கே.சுரேஷ், போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார். வேலையை விட்டாலும் அவருடைய புத்திசாலித்தனத்தை காவல்துறை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. எந்த  கொலை குற்றம் நடந்தாலும் ஆர்.கே.சுரேஷ், தனது துப்பறியும் திறனால் கொலையாளியை எளிதில் கண்டுபிடித்து விடுவார்.  இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷின் முன்னாள் மனைவி பூர்ணா விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைகிறார். அவரது மகளும் இதேபோன்று விபத்து ஒன்றில் சிக்கி மூளச்சாவு அடைந்தததால் ஆர்.கே.சுரேஷுக்கு பூர்ணாவின் மரணத்தில் சந்தேகம் வருகிறது. உடனே தனது போலீஸ் பாணியில் விசாரிக்கும் போது பூர்ணாவை யாரோ திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தியிருப்பதை ஆர்.கே.சுரேஷ் கண்டுபிடிக்கிறார். அந்த விபத்தை ஏற்படுத்தியது யார்?  எதற்காக செய்தார்கள், ஆர்.கே.சுரேஷின் மனைவி மற்றும் மகளின் மரணங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பு என்ன? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் ஆர்.கே.சுரேஷ், அவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சஸ்பென்ஸும், பரபரப்பும் நிறைந்த திரைக்கதையோடு சொல்வது தான் ‘விசித்திரன்’.

 

ஹீரோவாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். மூன்று கெட்டப்புகளுக்காக அவர் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. ஒவ்வொரு கெட்டப்புக்கும் உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் காட்டியிருக்கும் ஆர்.கே.சுரேஷின் உழைப்பு வியக்க வைக்கிறது. நடிப்பிலும் எந்தவித குறையில்லாமல் அளவாக நடித்து கவரும் ஆர்.கே.சுரேஷ், மிக இயல்பாகவும் நடித்திருக்கிறார். அதிலும், வயதான கெட்டப்பில் அவர் வெளிப்படுத்திய உடல் மொழி அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகப்பெரிய  பலம் சேர்த்திருப்பதோடு, ஆர்.கே.சுரேஷால், இப்படிப்பட்ட அழுத்தமான வேடங்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் பூர்ணா, கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அதிகம் வசனம் பேசவில்லை என்றாலும் பல இடங்களில் கண்களின் மூலமாகவே கதாப்பாத்திரத்தின் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மது ஷாலினி சிறு வேலையாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.

 

மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் பகவதி பக்ஸ், இளவரசு, மாரிமுத்து என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. “கண்ணே கண்ணே பாடல்...” திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை மையமாக வைத்து இயக்குநர் பத்மகுமார் எழுதியிருக்கும் கதையும், அதை அவர் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகர்த்தி செல்லும் முறையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

 

எதற்காக கொலை நடந்தது மற்றும் கொலையாளி யார்? என்பதை ஆர்.கே.சுரேஷ் கண்டுபிடிக்க களத்தில் இறங்கியவுடன் நம்மை சீட் நுணிக்கு அழைத்து செல்லும் படம், படத்தின் இறுதிக்காட்சி வரை நம்மை அங்கேயே கட்டுப்போட்டு விடுகிறது.

 

இதற்காக தான் கொலைகள் நடந்தது, இவர்கள் தான் கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களை தகுந்த ஆதாரங்களுக்குடன் சட்டத்திற்கு முன்பு நிறுத்துவதற்காக ஆர்.கே.சுரேஷ் எடுக்கும் நடவடிக்கைகள் படத்தின் க்ளைமாக்ஸ் வரை நம்மை அடுத்தது  என்ன நடக்கும், என்று யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

 

மொத்தத்தில், ‘விசித்திரன்’ சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர்

 

ரேட்டிங் 3.5/5