Jan 11, 2019 08:00 AM

’விஸ்வாசம்’ விமர்சனம்

2cb1b15aa3d7775d2382447f88e7c270.jpg

Casting : Ajithkumar, Nayanthara, Vivek, Robo Shankar, Thambi Ramaiah, Yogi Babu, Jagapathi Babu

Directed By : Siva

Music By : D.Imman

Produced By : Sathya Jyothi Films

 

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் தொடர்ந்து வெளியான மூன்று படங்களும் ரசிகர்களை பெரிதாக திருப்திப்படுத்தவில்லை என்றாலும், அதே கூட்டணியின் நான்காவது படமாக வெளியாகியிருக்கும் இந்த ‘விஸ்வாசம்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் அரிசி மில் வைத்திருப்பதோடு, எதிரிகளே எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் அளவுக்கு ஊரில் பெரிய மனிதராக வலம் வருபவர், தனது மனைவி நயந்தாராவையும், மகள் அனிகாவையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் திருவிழாவில் அனைவரும் தங்களது குடும்பத்தோடு கலந்துக்கொள்ள அஜித் மட்டும் தனி ஆளாக ஒதுங்கி நிற்கிறார். இதனை பார்க்கும் அவரது சொந்த பந்தங்கள், மீண்டும் அஜித் மனைவியுடன் சேர வேண்டும் என்று நினைக்க, அவர்களது பேச்சைக்கேட்டு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அஜித் மும்பை செல்கிறார்.

 

மும்பையில் பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கும் நயந்தாரா அஜித்தை பார்க்க விரும்பாத நிலையில், அவரது மகள் அனிகாவை கொலை செய்ய ஒரு கூட்டம் துரத்துகிறது. அதில் இருந்து அனிகாவை காப்பாற்றும் அஜித், தனது மகளை கொலை செய்ய முயற்சிக்கும் எதிரி யார், அவர் எதற்காக கொலை செய்ய நினைக்கிறார், என்பதை கண்டுபிடிப்பதோடு, அந்த எதிரியிடம் இருந்து தனது மகளை காப்பாற்றுபவர், மீண்டும் தனது மனைவியுடன் ஒன்று சேர்ந்தாரா இல்லையா, என்பது தான் ‘விஸ்வாசம்’ படத்தின் கதை.

 

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணி படம் என்றாலே இப்படி தான் இருக்கும் என்ற ஒரு வரைமுறைக்கு உட்பட்டே இந்த படமும் இருக்கிறது. சொல்லப் போனால் வீரம் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம். அதாவது வீரம் படத்தில் காதலியின் குடும்பத்தை பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் ஹீரோ, இதில் தனது மகளை பிரச்சினையில் இருந்து மீட்கிறார். மற்றபடி அதில் இருந்த பில்டப், அல்டாப் எல்லாமே அப்படியே தான் இருக்கிறது.

 

தன்னை அடிக்கடி “வில்லன்...” என்று கூறிக்கொள்ளும் அஜித், இந்த படத்திலும் ஒரு இடத்தில் “நான் வில்லன்டா..,” என்று அழுத்தமாக கூறுகிறார். காரணம், ஹீரோவுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் தன்னிடம் குறைந்து வருவதை அவர் உணர்ந்திருப்பார் போல. தொந்தி, ஊதிப்போன கண்ணம், டை அடிக்காத தலை முடி, என்று தனது நடிப்பை போலவே சாதாரணமாக தோன்றும் அஜித், தன்னை சுற்றி இருப்பவர்கள் புகழ்பாடுவதில் மட்டும் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

 

நயந்தாராவை காதலித்து திருமணம் செய்யும் போது கருப்பு முடியுடன் இருக்கும் அஜித், அவரை பிரிந்து 8 வருடங்களுக்கு பிறகு முழுவதும் நரைத்த முடியுடன் காட்சியளிக்கிறார். இது தான் அவரது இரண்டு கெட்டப்புகளுக்கான காரணம். 8 வருடத்தில் ஒரு வாலிபன் இப்படி வயதானவராக மாறுவது என்றால் அது அஜித் படத்தில் மட்டும் தான் முடியும். ஒரு நடிகர் என்றால் அனைத்து விஷயத்திலும் மெனக்கெடல் வேண்டும், ஆனால் இந்த தல, தலையில் இருக்குற வெள்ளை முடிக்கு டை அடிக்கவே மெனக்கெடாத போது, நடிப்பில் மட்டும் என்னத்த மெனக்கெடப்போகிறார், ஒன்னுமில்ல, எல்லாம் பார்த்து பழகி போனது தான்.

 

நயந்தாரா, அஜித்தின் காதலியாக வரும் போதும் சரி, அனிகாவுக்கு அம்மாவாக வரும்போதும் சரி அழகாக இருக்கிறார். வயது ஆக ஆக நயந்தாராவின் அழகு கூடிக்கொண்டே போகிறது, என்று சொல்றாங்க, அது உண்மை தான் என்பது இந்த படம் நிருபிச்சிருச்சு.

 

தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, இவங்களுக்கெல்லாம் சீனியரான விவேக், கொசுறுக்கு கோவை சரளா என்று ஏராளமான காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி என்பது சிறிதளவு மட்டுமே இருக்கிறது. கூட அஜித்தும் அவ்வபோது காமெடி செய்ய முயற்சிக்கிறாரு, ஆனால் அதை யாருமே கண்டுக்க மாட்ராங்க.

 

உள்ளூர் வில்லன்களான மைம் கோபி, ஒ.ஏ.கே.சுந்தர் ஆகியோரது வேடம் ஒன்னுமில்லாதது என்றாலும், மும்பை வில்லனான ஜகபதிபாபு தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அதிலும் தனது மகளிடம் அவர் காட்டும் அந்த கோபம், ஜீரணிக்க முடியாதவையாக இருக்கிறது.

 

அஜித்தின் மகளாக நடித்திருக்கும் அனிகாவும், வில்லன் ஜகபதிபாவின் மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமியும் சில காட்சிகள் என்றாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

 

வெற்றியின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் எப்போதும் போல தான் இருக்கிறது. படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கும் இந்த இரண்டு தொழில்நுட்ப கலைஞர்களின் பணி தனித்துவம் இல்லாமல் இருந்தாலும் தரமாக இருக்கிறது.

 

படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள், ஆனால் கதைக்கும் அந்த தலைப்புக்கும் அவ்வளவாக பொருந்தவில்லை. யார் யாரிடம் விஸ்வாசம் காட்டுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. அஜித் தனது மகளுக்காக உயிரை கொடுத்து போராடுகிறார். ஒரு அப்பா மகளுக்காக போராடுவது, அவரது கடமை என்ற போதில், இதில் விஸ்வாசம் எதற்காக என்று தான் புரியவில்லை. ஒரு வேலை சிவாவுக்கு தொடர்ச்சியாக அஜித் படம் கொடுப்பதற்கு, தான் எப்போதும் விஸ்வாசமாக இருப்பேன், என்பதை தெரிவிக்கவே இந்த தலைப்பை வைத்தாரோ என்னவோ.

 

படத்தின் ஆரம்பத்திலேயே “தூக்கு துரை....தூக்கு துரை....” என்று அஜித் புகழ்பாட ஆரம்பித்துவிடும் இயக்குநர் சிவா, ஒரு காட்சியில் அஜித்துக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசுபவர்கள் சிலர், அஜித் வந்தவுடன் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் வைப்பதோடு, அவரைப் பார்த்து விக்குவது, பேச்சு திக்குவது போன்ற காட்சியை வைத்து அஜித்தை நக்கோ நக்கு என்று நக்கியிருக்கிறார்.

 

படத்தின் முதல் பாதி முழுவதுமே, ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம், என்று பலரை புலம்ப வைப்பதோடு, சில அஜித் ரசிகர்களையும் கதற வைத்துவிடுகிறது. ஒன்னு அஜித் யாராயாவது அடிக்கிறார், இல்லனா அவரை காக்கா புடிப்பது போல, யாராவது அவரை புகழ்கிறார்கள். இப்படியே முதல் பாகத்தை நகர்த்தி ரசிகர்களை கடுப்பாக்கும் இயக்குநர் சிவா, இரண்டாம் பாதியில் கதையை மும்பைக்கு நகர்த்துபவர், அங்கே விவேக், நயந்தாரா, அஜித் ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு குட்டி சீரியலை நமக்கு காட்டிவிடுகிறார்.

 

இவங்களது நான்காவது படமும் இப்படி நாசமா போச்சே! என்று ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் தலையில் கை வைக்க, படத்தின் கடைசி 20 நிமிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசஜ், அவர்களை ஆறுதல் படுத்துவதோடு, பெற்றோர்களையும் கவனிக்க வைக்கிறது.

 

பெற்றோர்களால் தான் பிள்ளைகள் இந்த உலகத்திற்கு வந்தாலும், அவர்களது வாழ்க்கையை அவர்களாக வாழவேண்டும், அதைவிட்டுட்டு பெற்றோர்களது லட்சியத்தையும், ஆசையையும் பிள்ளைகள் மீது திணிக்க கூடாது, என்ற மெசஜை சொல்லியிருக்கும் இயக்குநர் சிவாவையும், அதில் நடித்திருக்கும் அஜித்தையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், இந்த மெசஜை 10 சதவீதம் சொல்லிவிட்டு, மீதமுள்ள 90 சதவீதம், தனது ரெகுலர் போரிங் மசலாவை தூவியிருப்பதற்காக இந்த “வி” கூட்டணியை தலயில் கொட்டினாலும் தவறில்லை.

 

படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியின் சில நிமிட வேதனைகளை பொருத்துக்கொண்டு பார்த்தால், விஸ்வாசம் பேமிலி எண்டர்டெய்னர் தான்.

 

மொத்தத்தில், இந்த ‘விஸ்வாசம்’ மூலம் தந்தைகள் பாசத்தை புரிய வைத்திருக்கும் அஜித், ரசிகர்களின் விருப்பத்தை மட்டும் புரிந்துக்கொள்ளவில்லை என்பது புரிகிறது.

 

ரேட்டிங் 3/5