Mar 13, 2020 08:03 AM

’வால்டர்’ விமர்சனம்

bd066d797a7c3268e38780b9c3c203d2.jpg

Casting : Sibiraj, Samuthirakani, Natty, Shirin Kanchwala, Bava Chelladurai

Directed By : U.Anbu

Music By : Dharmaprakash

Produced By : Mrs.Shruthi Thilak

 

கும்பகோணத்தில் மருத்துவர் ஒருவரது தவறான சிகிச்சையால் சிறுவன் இறக்க, அதனால் அவனது குடும்பமே தற்கொலை செய்துக் கொள்கிறது. இதனால், அந்த மருத்துவருக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால், அந்த மருத்துவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறை இறங்க, அரசியல்வாதி சமுத்திரக்கனி அவர்களை தடுக்கிறார். இதற்கிடையே, பிறந்த குழந்தைகள் காணமல் போக, பிறகு கிடைக்கும் அந்த குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கையில், அதனை விசாரிக்க போலீஸ் அதிகாரி சிபிராஜ் களத்தில் இறங்கும் போது, பல ரகசியங்கள் தெரிய வருகிறது. அது என்ன, அதற்கும் சமுத்திரக்கனி மற்றும் அவர் காப்பாற்றிய மருத்துவருக்கும் இருக்கும் தொடர்பு என்ன, என்பதை பல சஸ்பென்ஸுகளோடு விறுவிறுப்பாக சொல்லியிருப்பது தான் ‘வால்டர்’ கதை.

 

போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கும் சிபிராஜ், நடிப்பில் கம்பீரத்தை காட்டியிருப்பதோடு, அனுபவத்தையும் காட்டியிருக்கிறார். காதலியிடம் ரொமான்ஸை காட்ட முடியாமல் தவிப்பதும், காதலை விட கடமை தான் முக்கியம் என்று இருப்பது, என வால்டராக வாழ்ந்திருக்கும் சிபிராஜ், இதுவரை பார்த்ததைவிட சற்று புதிதாக இருக்கிறார்.

 

திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பலம் சேர்த்திருக்கும் நட்டி, தனது அளவான நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். தனது வேகமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம், காட்சிகளின் வேகத்தை நட்டி அதிகரிக்கச் செய்கிறார்.

 

சமுத்திரக்கனிக்கு சிறு வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். சக்தி வாய்ந்த வேடத்திற்கான அதிரடியான நடிப்பை அசால்டாக கொடுத்திருக்கிறார்.

 

அரசியல்வாதியாக நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லத்துரை, கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். “என் சாவ நான் தான் முடிவு பண்ணுவேனு, என் ஜாதகத்துலயே இருக்குடா” என்று அவர் வசனம் பேசும்போதும் சரி, பேரனுக்காக அனைத்தையும் இழக்க ரெடி, என்று அலறும்போதும் சரி, நடிகராக தேர்ச்சி பெற்றுவிடுகிறார். அதே சமயம், சில இடங்களில் அவரது நடிப்பு முழுமை பெறாமலும் இருக்கத்தான் செய்கிறது.

 

கதாநாயகி ஷிரின் காஞ்ச்வாலா பாடல்களுக்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறார். மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

 

அபிஷேக், ரித்விகா, சனம் ஷெட்டி, யாமினி சந்தர் என்று படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

 

தர்மபிரகாஷ் இசையில், அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி ஆகியோரது பாடல் வரிகள் கேட்கும்படி இருப்பதோடு, புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ராசாமதி திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பெரிதும் உதவியிருக்கிறார். கும்பகோணம் முழுவதையும் தனது பறந்து கோணத்தில் காட்டியிருப்பவர், மேம்பாலத்தில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை ரியலாக எடுத்திருப்பதோடு, ஏராளமான லைவ் லொக்கேஷன்களில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

 

இயக்குநர் யு.அன்பு, மும்பை குரூப் இரத்தம் என்ற புதிய கருவைக் கொண்டு, மருத்துவத்துறையில் நடக்கும் குற்றத்தை அலசியிருக்கிறார். மருத்துவத்துறையில் நடக்கும் பல குற்றங்கள் பற்றி, பல படங்கள் பேசியிருந்தாலும், அன்பு பேயிருக்கும் இந்த வகை குற்றம், இதுவரை எந்த படத்திலும் சொல்லாதது.

 

படத்தில் வரும் சிறிய கதாப்பாத்திரங்களை கூட ரசிகர்கள் கவனிக்கும்படி திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் யு.அன்பு, சில இடங்களில் திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்க தவறியிருக்கிறார். அதே சமயம், தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்களை காட்சிகளாக வைத்து கைதட்டல் பெற்றுவிடுகிறார்.

 

அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கும், காவல்துறையின் கடமைக்கும் இடையே வரும் போட்டியில், காவல்துறை எப்படி தனது புத்திசாலித்தனத்தால், அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் யு.அன்பு, சமூகத்திற்கான ஒரு விஷயத்தை கமர்ஷியலாக சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

ரேட்டிங் 4/5