Jan 01, 2025 10:32 AM

’எக்ஸ்ட்ரீம்’ திரைப்பட விமர்சனம்

bb6e11d7ad6760649091d71f1aab9d05.jpg

Casting : Rachitha Mahalakshmi, Abi Nakshatra, Rajkumar Nagaraj, Ananth Nag, Amritha Halder, Sivam Dev, Rajeshwari Raji, Saritha

Directed By : Rajavel Krishna

Music By : RS Rajprathap

Produced By : SIEGER Pictures - Kamala Kumari and Rajkumar.N

 

கட்டுமான பணி நடக்கும் கட்டிடம் ஒன்றில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அது இளம் பெண் அபி நட்சத்திரா என்பதை கண்டுபிடிக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறைக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்க, இறுதியில் கொலைக்கான பின்னணி என்ன ?, கொலையாளி யார் ? என்பதை பரபரப்பான கிரைம் திரைல்லராக மட்டும் இன்றி பெண்களுக்கான அறிவுரையாகவும் சொல்வதே ‘எக்ஸ்ட்ரீம்’.

 

நாகரீகம் என்ற பெயரில் சில பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது, சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளியிலும், சமூக வலைதளப் பக்கங்களிலும் மேற்கொள்ளும் நாகரீகமற்ற செயல்கள், அவர்களையும் தாண்டி, சில அப்பாவி பெண்களை எப்படி ஆபத்தில் சிக்க வைக்கிறது, என்பதை கருவாக வைத்துக்கொண்டு இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்மான கிரைம் திரில்லராக மட்டும் இன்றி பெண்களை யோசிக்க வைக்கும் நல்ல படைப்பாகவும் கவனம் ஈர்க்கிறது.

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சின்னத்திரை பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி, போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார். விஜயசாந்தி போல் அதிரடியான சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும், ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் கதாபாத்திரத்தை கவனமுடன் கையாண்டு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, சில பெண்கள் செய்யும் தவறால் பாதிக்கப்படும் அப்பாவி ஏழை பெண்களை பிரதிபலிக்கும்படி நடித்திருக்கிறார்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ், பார்ப்பதற்கு சீமான் போல் இருக்கிறார். போலீஸ் வேடம் மட்டும் அல்ல அரசியல்வாதி உள்ளிட்ட அனைத்து குணச்சித்திர வேடங்களுக்கும் சரியாக பொருந்தக்கூடிய முகம். சத்தய சீலான் என்ற கதாபாத்திரத்திற்கு சத்தியமாக இவரை விட்டால் வேறு ஆள் இல்லை, என்பது போல் பொருந்துவதோடு, அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

மாடர்ன் என்ற பெயரில் மற்றவர்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் ஆடை உடுத்தும் பெண்ணாக கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் அம்ரிதா ஹல்டர், தனக்கு தெரியாமலேயே ஒரு அப்பாவி பெண்ணின் அவல நிலைக்கு தான் காரணமானதை எண்ணி வருத்தப்படும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் சிவம் தேவ், ஆனந்த் நாக், அபி நட்சத்திராவின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா, ராஜ்குமார் நாகராஜின் மனைவியாக நடித்திருக்கும் ராஜேஸ்வரி ராஜி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். 

 

ஒளிப்பதிவாளர் டிஜே பாலா, இசையமைப்பாளர் எம்.எஸ்.ராஜ்பிரதாப், படத்தொகுப்பாளர் ராம்கோபி ஆகியோரது பணி தொழில்நுட்ப ரீதியாக படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படும் முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்துவிடும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா, இறுதிக் காட்சி வரை கொலையாளி யார்?, கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும், என்பதை யூகிக்க முடியாதபடி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். 

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது மற்றும் போதை கலாச்சாரம் அதிகரிப்பது போன்ற விசயங்களை பிரச்சாரமாக அல்லாமல் கமர்ஷியலாகவும், கதைக்கு தேவையானதாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா, பாலியல் வன்கொடுமைகளின் பின்னணியாக சொல்லப்படும் பல காரணங்கள் இருந்தாலும், இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு காரணத்தை கதைக்கருவாக வைத்துக்கொண்டு மக்களுக்கு கருத்து சொல்லியிருப்பதோடு, சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘எக்ஸ்ட்ரீம்’ பார்த்தவர்களை எக்ஸலண்ட் என சொல்ல வைக்கும்.

 

ரேட்டிங் 3.5/5