Nov 12, 2022 07:26 AM

’யசோதா’ திரைப்பட விமர்சனம்

b993f4adb642ce62190d169cad84e443.jpg

Casting : Samantha, Varalaxmi Sarathkumar, Unni Mukundan, Rao Ramesh, Murali Sharma, Sampath Raj, Shatru

Directed By : Hari and Harish

Music By : Manisharma

Produced By : Sivalenka Krishna Prasad

 

பணத்திற்காக வாடகைத்தாயாகும் சமந்தாவை, ரகசியமாக அழைத்து சென்று ரகசிய இடத்தில் தங்கவைத்து பராமரிக்கிறார்கள். சொகுசு வசதிகள் நிறைந்திருக்கும் அந்த இடத்தில் சமந்தாவை போல் பல பெண்கள் பணத்திற்காக வாடகைத்தாயாக இருக்கிறார்கள். அந்த இடத்தின் உரிமையாளரான வரலட்சுமி சரத்குமார், கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, அவர்களை அன்பாகவும் நடத்துகிறார்.

 

இதற்கிடையே, அந்த இடத்தில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி வந்த பிறகு அவர்கள் மாயமாகி விடுகிறார்கள். அவர்கள் குறித்து எந்தவித தகவலும் மற்றவர்களுக்கு தெரியாமல் போகிறது. இதனால், மாயமான பெண்களின் நிலை குறித்து அறிந்துக்கொள்ளும் முயற்சியில் சமந்தா இறங்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களையும், அதனை தொடர்ந்து தெரிய வரும் உண்மைகளையும் யூகிக்க முடியாதபடியும், அதிர்ச்சியளிக்கும்படியும் சொல்வது தான் ‘யசோதா’.

 

சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வாடகைத்தாய் முறையை கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர்கள் அந்த கருவை வைத்து அமைத்திருக்கும் திரைக்கதையும், அதை படமாக்கிய விதமும் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.

 

விறுவிறுப்பான கதைக்களத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கும் கதையின் நாயகி சமந்தா, ஒரே கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாடகைத்தாயாக பரிதாபமான முகத்தோடு வலம் வருபவர், ரகசியங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கும் காட்சிகளில் வேகமான நடிப்பு மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்.  க்ளைமாக்ஸ் காட்சியின் போது சமந்தா யார்? என்பது தெரிய வரும் போது ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு நிகராக உருவெடுத்து கைதட்டல் பெறுகிறார்.

 

வரலட்சுமியின் தோற்றமும், நடிப்பும் கம்பீரமாக இருப்பதோடு, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

 

மருத்துவராக நடித்திருக்கும் உன்னி முகுந்தன், அமைச்சராக நடித்திருக்கும் ராவ் ரமேஷ், போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கும் சம்பத் ராம், சத்ரு, முரளி சர்மா என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு ஒரே இடத்தில் நடக்கும் பெரும்பாலான காட்சிகளை பலவித கோணங்களில் காட்டி ரசிக்க வைக்கிறது. ஒரே கதையாக இருந்தாலும் இரு களங்களாக பயணிக்கும் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

 

பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை கதையோடு பயணித்திருப்பதோடு, பல இடங்களில் திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பு சேர்த்து கவனம் பெறுகிறது.

 

படத்தொகுப்பாளர் மர்தாண்ட் கே.வெங்கடேஷ், சமந்தாவின் கதை மற்றும் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குழுவின் கதை என இரண்டு கதைகளையும் சரியான முறையில் பயணிக்க வைத்து படத்தை வேகமாக நகர்த்தி செல்கிறார். 

 

கதை எழுதி இயக்கியிருக்கும் ஹரி - ஹரிஷ், வாடகைத்தாய் முறையை வைத்துக்கொண்டு சிறப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார்கள். 

 

முதல் காட்சியிலேயே ரசிகர்களை படத்துடன் ஒன்றிவிட செய்யும் இயக்குநர்கள் அதன் பிறகு வரும் காட்சிகளை அதிவேகமாக நகர்த்துவதோடு, புத்திசாலித்தனமாக காட்சிகளை கையாண்டு படத்தில் இருக்கும் சஸ்பென்ஸை க்ளைமாக்ஸ் வரை யூகிக்க முடியாதபடி படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.

 

பெண்களின் அழகுக்கு பின்னால் இருக்கும் வியாபாரத்தையும், அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் இயக்குநர்கள் ஹரி - ஹரிஷ்-ன் மிரட்டலான மேக்கிங்கோடும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடும் முழு படத்தையும் பார்க்க ரசிக்க வைக்கிறார்கள்.

 

மொத்தத்தில், ‘யசோதா’ எதிர்பார்க்காத சஸ்பென்ஸ், வியக்க வைக்கும் மேக்கிங்.

 

ரேட்டிங் 4/5