Nov 19, 2017 11:01 AM

செல்வி சைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - பாரதீய வித்யா பவன் வழங்கியது!

b882a27ebd203ea899ebc6eb4af24630.jpg

குச்சுபுடி நாட்டிய கலைஞர் கலைமாமணி செல்வி  சைலஜா அவர்களுக்கு, குச்சுபுடி நாட்டியத்துறையில் அவரது நாற்பது ஆண்டு கால அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை பாராட்டி, பாரதீய வித்யா பவன் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’  அளித்து கௌரவித்திருக்கிறது. சென்னை பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற விழாவில் இந்த விருதினை செல்வி  ஷைலஜாஅவர்களுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.

 

பாரம்பரிய கலை வடிவங்களை பேணி காத்து, அதனை வளர்த்தெடுப்பதையே தன்னுடைய தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் பாரதீய வித்யா பவன், இயல், இசை மற்றும் நாடககலையில் சிறந்த முறையில் சேவையாற்றி வரும் திறமையான கலைஞர்களை அவர்களின் அனுபவம், தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களுக்கான அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் விருதுகளால் அலங்கரித்து, அடுத்த தலைமுறையினரும் ஆர்வம் கொள்ளும் வகையில் கௌரவித்து வருகிறது. இந்த வரிசையில் குச்சுபுடி என்ற இந்திய பாரம்பரிய நாட்டியத் துறையில் தனித்துவத்துடனும், கலையார்வத்துடனும் குச்சுபுடி மீதான தீராப் பற்றுடனும் கடந்த நாற்பது ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் செல்வி  ஷைலஜாவிற்கு, அவர் தம் கலைப்பணியைப் பாராட்டி, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியிருக்கிறது.

 

பாரதீய வித்யா பவன் வழங்கும் இந்த விருதைப் பெறும் முதல் குச்சுபுடி கலைஞர் இவர் என்பதால் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவரிடம் இந்த விருது குறித்து பேசும் போது, “இது வரை குச்சுபுடி மற்றும் பரதநாட்டியத்திற்காக நான் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருந்தாலும், வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதினைப் பெறும் போது, நான் போற்றும் இந்தகுச்சுபுடி கலை என்னை மிக உயரத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாகவே நினைக்கிறேன். பாரதீய வித்யா பவன், கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்துறையில் தனித்தன்மையுடன் இயங்கி வருவதை அனைவரும் நன்கு அறிவார்கள். அவர்கள் வழங்கும் விருது, ஒவ்வொரு கலைஞர்களையும் மேலும் உற்சாகப்படுத்தும். குச்சுபுடி என்ற நாட்டிய வடிவத்தை அதன் பாரம்பரியத்தன்மையைக் கெடாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கும் கற்பிக்கவேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது.

 

இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார அடையாளங்களாகப் போற்றப்படும் பரதநாட்டியம், கதக், ஒடிஸி, மோஹினியாட்டம் என எட்டிற்கும் மேற்பட்ட நடன வடிவங்களில், நாட்டிய நாடகப் பாணியில் ஒப்பற்றுத் திகழும் குச்சுபுடிக்கும் ஓரிடம் அளித்து, மறைந்துக் கொண்டு வரும் இந்த கலையை எம்முடைய குரு வேம்பட்டி பாணியிலேயே இந்த இளந்தலைமுறையினருக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கற்பிக்கும் எண்ணத்தை இந்த விருதால் பெற்றிருக்கிறேன்.” என்றார்.

 

பாரதீய வித்யா பவன் அளித்திருக்கும் இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் ’என்ற விருது, குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவிற்கு மட்டும் கிடைத்ததல்ல, அவர் உருவாக்கியிருக்கும் அறுபதிற்கும் மேற்பட்ட குச்சுபுடி கலைஞர்களுக்கும், இந்த கலையை ஆர்வமுடன் கற்று வரும் அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.