தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி யாகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 09.01.2018 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்வர்ண கால பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் மஹாபைரவருக்கு யாகமும், அபிஷேகமும், செவ்வரளி பூக்களால் அர்ச்சனையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
பைரவர் வழிபாடு ஏன்?
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் ஹோமம் கூறப்படுகிறது.
பைரவர் ஹோமத்தில் பங்கேற்பதால் சனி பெயர்ச்சியால் வரும் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் அத் தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். அஷ்டமி அன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால், அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக பைரவர் ஹோமத்தில் கலந்துகொண்டு ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பைரவர், மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்க பைரவர் ஹோமம் மிகவும் உதவும் என்பதாலும் பைரவர் ஹோமத்தில் கலந்து கொள்வதால் கடுமையான தோஷங்களும் நீங்கும் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும் இன்பங்கள் எல்லாம் தேடி வரும் என்ற காரணங்களால் இன்று தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மிளகு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுபுற நகர கிராம மக்களும், ஓம் சக்தி மாலை அணிந்த பக்தர்களும் கலந்து கொண்டு அஷ்ட பைரவர், சொர்ண பைரவர், மஹா பைரவருடன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியின் அருள்பெற்று சென்றனர்.