வாகன தயாரிப்பில் சாதனை புரிந்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவர்கள்!
தனியார் அமைப்பு நடத்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்த ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசை கல்லூரி நிர்வாகம் வழங்கி கெளரவித்துள்ளது.
உலகத் தரம் வாய்ந்த கல்வியை கற்பிப்பதுடன், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரி பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்து வரும் ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, SAE இந்தியா என்ற நிறுவனம் மாணவர்களின் அறிவுதிறன் மற்றும் திறமைகளை வெளிகொண்டு வரும் விதமாக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் BAJA, E-BAJA, SUPRA, EFFI-CYCLE போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், அரசு பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணார்கள் கலந்துக்கொள்ளும் இந்த போட்டிகளில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் கலந்துக்கொள்கிறார்கள்.
அதன்படி, மாணவர்களின் வாகன வடிவமைப்பு மற்றும் உருவாக்கும் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட SAE BAJA ஆகிய போட்டிகளில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் மாணவர்கள் கலந்துக்கொண்டு ROCKETEER RACING என்ற போட்டியின் கீழ், தங்கல் சொந்த முயற்சியுடன் தங்களது துறையின் ஆய்வுகூட மற்றும் பட்டரை உதவியுடன் வாகனம் ஒன்றை உருவாக்கினார்கள்.
பஞ்சாபில் உள்ள இந்திய தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் 250 குழுக்கள் கலந்துகொண்ட போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவர்களின் வாகனம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் விருதும், பசுமை விருதும் வென்றுள்ளது.
அதிக திறன், குறைந்த எடை, சிறப்புமிக்க சஸ்பென்ஷன் சிஸ்டம், மெம்படுத்தப்பட்ட பவர் டிரான்ஸ்மிஷன், குறைந்த மாசு வெளியீடு ஆகிய சிறப்பு அம்சங்களுடன் மாணவர்கள் உருவாக்கிய இந்த வாகனத்திற்கு கிடைத்த இரண்டு விருதுகளை கொண்டாடும் விதமாகவும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், ரூ.15 லட்சத்தை ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, மாணவர்களுக்கு வழங்கினார்.
நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற விழாவில், ரூ.15 லட்சத்திற்கான காசோலையை சாய் பிரகாஷ், மாணவர்களிடம் வழங்கி பேசுகையில், “மாணவர்கள் புதுவிதமான சமுதாயத்திற்கு தேவையான படைப்புகளை உருவாக்குவதற்கு எல்ல வித உதவிகளையும் ஸ்ரீ சாய்ராம் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த ஆண்டு மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பரிசு வெல்லும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் ஊக்கத்தொகை வழங்கும்.” என்று தெரிவித்தார்.
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சி.வி.ஜெயக்குமார், ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் முனைவர் கே.பழனிக்குமார், கல்லூரி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை டீன் முனைவர் ஏ.ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மாணவர்களை பாராட்டி பேசினார்கள்.