ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களை கெளரவித்த வேலம்மாள் பள்ளி

அண்மையில் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்த்தாவில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மேசைப் பந்தாட்டத்தில் (டேபிள் டென்னிஸ்) பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (16. 09. 2018) அன்று நடைபெற்றது.
மேசைப் பந்தாட்டத்தில் ஆடவருக்கான குழு பிரிவில் அச்சந்த சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், அந்தோணி அமல்ராஜ் அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றது. மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் அச்சந்த சரத் கமல் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர்களுக்கான பாராட்டு விழா சென்னை, ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சாதனை புரிந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.6 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டியது. அப்போது, பள்ளி மாணவர்கள் வரைந்த வீரர்களின் ஓவியங்கள், அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், பதக்கம் வென்ற வீரர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மிகுதிப்படுத்தும் வகையிலும் எழுச்சியுரை வழங்கினார். மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட இம்முயற்சி மாணவர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்திருந்தது.
அச்சந்த சரத் கமல் பேசும் போது, “நான் வெற்றிப் பெற்றதற்கு காரணம் என் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் தான். எனக்கு தேவையானதை அளித்து வெற்றிப் பெறுவதற்கு ஊக்குவித்தனர். அதேபோல் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறது.” என்றார்.
சத்யன் ஞானசேகரன் பேசுகையில், “நான் விளையாட்டு துறைக்கு வருவதற்கு பல பேர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனது பள்ளி நாட்கள் முதல் எனது விடாமுயற்சியைத் தாண்டி, எனக்கு ஊக்கம் அளித்தது என் பள்ளியும் ஆசிரியர்களும் தான். ஆகையால், விடாமுயற்சியை நாம் எப்போதும் கைவிடக்கூடாது. அதேபோல் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கிறது. மாணவர்கள் வெற்றிப் பெரும் வகையில் இப்பள்ளி சிறப்பாக செயல்படுகிறது.” என்றார்.
அந்தோணி அமல்ராஜ் பேசுகையில், “நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் பள்ளி தான் முக்கிய காரணம். வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் அதன் ஆசிரியர்களும் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தேவையான வசதிகளை அளிக்கிறது. மற்ற பள்ளிகளை விட வேலம்மாள் வித்யாலயா பல்வேறு விளையாட்டுகளையும் அதற்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. அதை மாணவர்கள் பயன்படுத்தி பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.” என்றார்.