Jan 24, 2019 11:13 AM

அரசியல் கட்சியில் சேர்ந்தார் பிக் பாஸ் புகழ் நித்யா தேஜு!

00e257edc77e4c93bb08876205d431b9.jpg

பிக் பாஸ் போட்டியாளரும், பெண்கள் எண்டோவர் (Women Endeavor) அமைப்பின் நிறுவனருமான நித்யா தேஜு அரசியல் கட்சியில் இணைந்தார்.

 

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதை உணர்ந்த மருத்துவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்வேதா ஷெட்டி, 36, ‘தேசிய பெண்கள் கட்சி (NWP)’ யைத் துவங்கி இனி வரும் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்.

 

முழுவதும் பெண்களை மையப் படுத்தி, பெண்களுக்காகவே துவங்கப்பட்ட நாட்டின் முதல் தேசியக் கட்சியான ‘தேசிய பெண்கள் கட்சி’ கடந்த டிசம்பர் 18, 2018 – இல் புதுடெல்லியில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று இருக்கும் நிறுவனர், மருத்துவர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் பெண்ணியவாதி ஸ்வேதா ஷெட்டி, இந்தக் கட்சி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னெடுப்பு. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு சமஉரிமை பெற்றுத் தருவதே எங்கள் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

 

தேசிய பெண்கள் கட்சியின் நோக்கம் மற்றும் அதன் கொள்ளை போன்றவற்றை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஸ்வேதா ஷெட்டி, பெண்கள் இந்தியன் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் பத்மா வெங்கட்ராமன், ஸ்வீடீத் ஃபரி (Sweetooth Faury) உரிமையாளர் ஸ்ருதி நகுல், கில்டு தலைவர் டாக்டர்.எஸ்.பி.ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். மேலும், இந்த நிகழ்விலேயே தேசிய பெண்கள் கட்சியில் தான் இணைவதுகான அறிவிப்பை நித்யா தேஜு வெளியிட்டார்.

 

பெண்கள் தேசிய கட்சி தொடங்கப்பட்டதற்கான நோக்கம், கட்சியின் கொள்கை ஆகியவை குறித்து விவரித்த, ஸ்வேதா ஷெட்டி, “ஊடகங்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியின் மூலம் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு, அவர்கள் அரசியல் தளத்தில் தீவிரமாக செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்க பெண்கள் தேசிய கட்சி கடமைப்பட்டுள்ளது. பெண்கள் தேசிய கட்சியின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை ஒவ்வொருவருக்கும் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதற்கும், வாழ்த்துகளைப் பெறுவதற்குமே இந்த சந்திப்பு இப்பொழுது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

 

Women National Party

 

பெண்களுக்காக, முக்கியமாக உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக, தங்கள் நல வாழ்விற்கு ஏதேனும் உதவி கிடைக்காதா என எதிர்பார்த்து ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கியும் உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக, பணியாற்றுவதே கட்சியின் முக்கியமான மற்றும் முதன்மையான நோக்கம் ஆகும்.

 

மகளிர் அவர்கள் சார்ந்திருக்கும் குழுக்களின், சமூகத்தின்  அல்லது பணியிடத்தின் நிர்வாகங்களில் சம உரிமை பெறுவதற்கான  பாலின பாகுபாடற்ற சூழலை உருவாக்குவதற்காக பெண்கள் தேசியக் கட்சி பணியாற்றும்.

 

தேசிய பெண்கள்  கட்சி துவங்குவதற்கான பணிகள் 2012 – ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டன. மக்களவையில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டும் என்பதே அதற்கான உந்துதலாக இருந்தது. இந்த 2018 – லும் கூட பெண்களின் உரிமைகள் சுலபமாக புறக்கணிக்கப்படுகின்றன. பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.ஆனால் குறிப்பிடத்தக்க எந்த சீர்திருத்தமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் தான் பெண்கள் தேசிய கட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பெண்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு பொருளாதார நிலைத்தன்மை இருக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாகக் கூடாது. பெண்களுக்கெதிரான இத்தகைய சவால்களை துணிந்து எதிர்கொள்ள, அவர்கள் பிரச்சனைகளை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள பெண்கள் களத்தில் இருப்பது அவசியமாகிறது என்கிறார் கட்சியின் தலைவர் டாக்டர் ஸ்வேதா.

 

தெலுங்கானாவில் அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான், அரசியல் தளத்தை மாற்றுவதற்கு நாம் அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என்று உணர்ந்திருக்கிறார் டாக்டர் ஸ்வேதா. அதனால் தேசிய இயக்கத்தைத் துவங்க விரும்பினார். உண்மையான நோக்கத்துடன் சேவை செய்வதற்கு அவருக்கு ஆளும் குழுவிலிருந்து அதிக உறுதிப்பாடு தேவைப்படுகிறது. பெண்களுக்குத் தேவையான சீர்திருத்த திட்டங்களை, சட்டங்களைக் கொண்டு வர பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவு தேவைப் படுகிறது. தற்போது NWP ‘தெலுங்கானா மகிளா சமிதி’ அமைப்பின் 1.45 லட்சம் மகளிரின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆதரவாளர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

 

ஏன் நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்யலாமே? என்ற கேள்வி வைக்கப்பட்டால், அதற்கு, ‘ நாங்கள் எங்கள் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை. பெண்களால் படிக்க முடியும், பெண்களால் தலைமைப் பொறுப்பேற்க முடியும், பெண்களால் சுதந்திரமாக செயல் பட முடியும் என நிரூபிக்க விரும்புகிறோம்.’ என்கிறார் டாக்டர் ஸ்வேதா.

 

இப்போது இருக்கும் கட்சிகள் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான இடம்  கொடுக்காமல் அவர்களைப் புறக்கணிக்கின்றன. இதன் விளைவாகத் தான் பாராளுமன்றத்தின் 545 உறுப்பினர்களில் 11 விழுக்காடு தான் பெண்கள் இருக்கின்றனர். நாட்டின் ஏனைய கட்சிகளுக்கு பெண்களைத் தங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை NWP கொடுக்கும். அதன் மூலம் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் மக்களவையில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் ஸ்வேதா கருதுகிறார்.

 

Womens National Party

 

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடுக்காக, கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்து, நீதிமன்றம் வரை சென்று போராடி, முடிந்த அளவு அழுத்தங்களைக் கொடுத்து என  அனைத்து கதவுகளைத் தட்டிப் பார்த்தும் திறக்காததால் தான்  இன்று தேசியப் பெண்கள் கட்சி உருவாகி உள்ளது என்று டாக்டர் ஸ்வேதா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

மேலும், ‘ பாராளுமன்றத்தில் பெண்களை சரிக்கு சமமான அளவு பார்க்கும் வரையில் நாங்கள் பின் வாங்கப் போவதில்லை.’ என்று தீர்க்கமாகத் தெரிவிக்கிறார் டாக்டர் ஸ்வேதா.

 

சாதாரண பணியிடத்தில் இருந்து இந்திய ராணுவம் வரையிலும் பெண்களுக்கான சம உரிமையைப் பெற்றுத் தர NWP பணியாற்றும்.நாட்டின் ஒவ்வொரு பெண்ணின் ஆதரவையும் தேசிய பெண்கள் கட்சி வரவேற்கிறது. அனைத்து பெண்களும் ஜாதி, மதம் என்று எந்த பேதமும் இன்றி ஓர் குடையின் கீழ் திரள்வோம். மேலும், எங்கள் கருத்தியலைப் புரிந்து கொண்ட ஆண்களின் அரசியல் ஆதரவையும் தேசியப் பெண்கள் கட்சி வரவேற்கிறது.” என்று தெரிவித்தார்.