Aug 03, 2019 03:09 PM

தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவர் ஏ.பி.முருகானந்தம்! - ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா?

346dcf4b90a4c9dd952b17b9f7cfaac6.jpg

தமிழக அரசியலில் அவ்வபோது நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்களைப் போல, தமிழக பா.ஜ.க-விலும் அதிரடி மாற்றம் நடைபெற உள்ளது. இளைஞர்களைக் கொண்டு வீரு நடைபோடுவதற்கான நடவடிக்கைகளை முடக்கிவிட்டிருக்கும் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு புதிய இரத்தை பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.,

 

அந்த வகையில், அவர்களது முதல் வேலையாக தமிழக பா.ஜ.க-வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தான். கடந்த சில மாதங்களாகவே இதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க மூத்த தலைவர்கள், அதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் தனது ஜோசியத்தால் பிரபலமாகியிருக்கும் பாலாஜி ஹாசனின் ஜோசியம் மூலம் அந்த சீக்ரெட் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

 

கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருபவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் அடுத்தடுத்து தமிழகத்தில் நிகழவிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை கணித்து வருபவர். இதுவரை கணித்த பல்வேறு விஷயங்கள் உண்மையாகி வருகிறது. அதனை தொடர்ந்து சிறு வயதிலயே கவனிக்கபடக்கூடிய ஜோதிடர்களில் ஒருவராக மாறி வருகிறார் பாலாஜி ஹாசன். 

 

அண்மையில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் பற்றி அவர் கணித்த கணிப்புகளும் தமிழகத்தின் அரசியல் நிலவரம் மற்றும் திரை உலகம் குறித்த கணிப்புகளும் தற்போதைய தமிழக சூழலில் நிஜத்தில் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் குறித்து பாலாஜி ஹாசன் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்கள் தற்போதைய அரசியல் களத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

 

தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் அ.ம.மு.க எழுந்து வரும் நேரமிருக்கிறது என்றும் கணித்திருந்தார். அதே பேட்டியில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் பத்து ஆண்டுகளில் நல்ல எண்ணிக்கையிலான இடங்களை பிடிக்கும் என்றும் தமிழக பாரதிய ஜனதாவின் அடுத்த தலைவர் யார் எனபதையும் கணித்து குறிப்பிட்டு இருந்தார்.

 

இந்த அரசியல் கணிப்புகள் குறித்து மற்ற கட்சிகள் வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும் வேதம் ஜாதகம் போன்றவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பா.ஜ.க வில் பாலாஜி ஹாசனின் இக்கருத்து உண்மைதானா என்பதை பா.ஜ.க வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். 

 

”பாலாஜி ஹாசன் சொல்ற ஜாதக கணிப்புகளை கட்சியின் சூழலோடு வைத்து பார்த்தால் இந்த கணிப்புகள் பலிக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும். அதன் படி பாலாஜி ஹாசன் சொல்கிற தமிழக பா.ஜ.க வுக்கான தலைமை மாற்றம் என்பது உண்மை தான். தமிழிசையின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. எனவே மீண்டும் தமிழிசை தலைவராக வர வாய்ப்பில்லை. புதிய தலைமை ஒன்று தமிழக பா.ஜ.க வுக்கு நியமிக்கபடவுள்ளது. இதை தான் பாலாஜி ஹாசன் கணித்திருக்கிறார். மேலும் இந்த பதவிக்கு இரண்டு நபர்களை குறிப்பிடுகிறார். ஒருவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் கூறியிருக்கிறார். எல்லா அரசியல் கேள்விகளுக்குமே பாலாஜி ஹாசன் இரண்டு சாய்ஸ்களில் தான் எப்பவுமே பதில் சொல்லி வருகிறார். இதுவரை அவர் கணித்தவற்றில் எல்லாம் முதல் பெயர் தான் உண்மையாயிருக்கிறது. இரண்டாவதை பொறுத்த வரைக்கும் அவர் சொல்றது சாய்ஸ் தான். 

 

பாலாஜி ஹாசன் சொல்ற ஜாதக கணிப்பின்படி முதல் நபரா சொல்ற கொங்குமண்டலத்தை சேர்ந்தவர் யார்னு பார்த்தோம்னா பா.ஜ.க தலைவருக்கான ரேஸ் பட்டியல்ல முதலிடத்தில் கொங்குமண்டலத்தை சேர்ந்த புதியவர் ஏ.பி.முருகானந்தம் தான் இருக்கார். பாலாஜி ஹாசன் சொன்ன அடுத்த தலைவர் இவர்தான்னா அதுக்கான காரணம் என்னன்னு பா.ஜ.க வில் இருக்குற எல்லோருக்குமே தெரியும்’ என சஸ்பென்ஸீடன் சொல்லி முடித்தார்.

 

AP Muruganandham BJP

 

யார் இந்த ஏ.பி.முருகானந்தம்?

 

அடுத்த பா.ஜ.க தலைவர் இவர் தான் என பா.ஜ.க வினரே உறுதியாய் சொல்லும் இந்த ஏ.பி.முருகானந்தம் யார் என விசாரித்தோம். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் பொறியியல்  மற்றும் சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். 1998 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மண்டல் தலைவராக முதன் முதலாக பொறுப்புக்கு வந்தவர். தற்போது இளைஞர் அணியின் அகில இந்திய துணைத் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். 

 

கோயம்புத்தூர் இளைஞரணி மண்டல பொறுப்பில் இருந்து துவங்கி மாவட்ட பொதுச்செயலாளர், மாநில பொதுச்செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இளைஞரணி செயலாளர் என இருபது வருடங்களில் ஏ.பி.முருகானந்தத்தின் அரசியல் பயணம் என்பது கீழிருந்து மேல் நோக்கிய பயணம்.

கேரளம் மேற்குவங்கம் கர்நாடகம் மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொறுப்பாளராக பணியாற்றிய ஏ.பி.முருகானந்தம், கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வந்து இளைஞரணிக்கு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் இவரது உழைப்பு மிக முக்கியமானது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இம்மாநிலங்களில் கணிசமான இடத்தை கைப்பற்ற தலைமைக்கு இந்த அடித்தளம் உதவியாக இருந்தது. 

 

ஏ.பி.முருகானந்தம் குறித்து அவரது கட்சி நண்பர்களிடம் கேட்ட போது, பா.ஜ.க சார்பில் அகில இந்திய அளவில் நடந்த பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதன் மூலம் வெவ்வேறு பிரச்சினைகளை கையாண்ட அனுபவம் உள்ளவர். தமிழக பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகளால் தமிழகத்துக்குள் பா.ஜ.க தொண்டர்கள் செய்துள்ள பல்வேறு பணிகள், மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு தெரியாமல் இருந்து வருகிறது. ஏ.பி.முருகானந்தம் தலைவரானால் இந்த சூழ்நிலை மாற வாய்ப்புள்ளது. தொண்டர்களின் உழைப்பு மக்களுக்கு தெரிவதுடன் கட்சிக்குள் புதியவர்கள் பலர் இணைவார்கள். இதனால் தமிழகத்தில் பா.ஜ.க வின் அடையாளம் மாறுவதுடன், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதெல்லாம் நடந்தால் புதிய முகமாய் தாமரை மலரும் என்று நம்புவதாக அவரது கட்சி நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 

 

Amitsha

 

எது எப்படியோ இன்னும் பத்தாண்டுகளில் பா.ஜ.க வளர்ச்சி அடையும் என்ற பாலாஜி ஹாசனின் கணிப்பு உண்மையாக இருக்குமென்றால் அதன் தலைமை மாற்றம் தான் அதற்கான விதையாக இருக்கும்.