சென்னையில் நடைபெற்ற முதல் மாநில அளவிலான தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி!

முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ’லெட்ஸ் பவுல்’ டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதிப் போட்டி நேற்று (பிப்ரவரி 26) ஆம் தேதி நடைபெற்றது.
சிறந்த மூன்று விளையாட்டுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷபீர் தன்கோட் - விஷ்ணு.எம் மோதினார்கள். இதில், முதல் இரண்டு விளையாட்டுகளில் தலா ஒரு வெற்றியுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். (162-173 & 212-201) மூன்றாவது விளையாட்டில், ஷபீர் தன்கோட், தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணுவை 5 பின்கள் என்ற குறுகிய வித்தியாசத்தில் (180-175) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றார்.
முன்னதாக முதல் அரையிறுதியில் சிறந்த மூன்று விளையாட்டுகளின் அடிப்படையில் விளையாடிய விஷ்ணு, தன்னை எதிர்த்து விளையாடிய ஆனந்த் பாபுவை 2-0 (173-171 & 192-143) என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதியில் ஷபீர் மற்றும் தீபக் மோதினார்கள். இதில், முதல் இரண்டு விளையாட்டுகளுக்குப் பிறகு (184-164 & 208-215) தலா ஒரு வெற்றியுடன் இருவரும் சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது விளையாட்டில் ஷபீர், (152-126) என்ற கணக்கில் தீபக்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மஹிபால் சிங் 2 வது சுற்றுக்குப் பிறகு 2393 பின்பாலுடன் 199.42 சராசரி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார், அவரைத் தொடர்ந்து ஷபீர் தன்கோட் 2386 பின்பால் 198.83 சராசரியை பெற்றார்.
6 விளையாட்டுகளின் பிளாக்கில் அதிகபட்ச சராசரி (201.1) பெற்ற மஹிபால் சிங் மற்றும் 225-க்கு மேல் என்ற அதிகபட்ச ஸ்கோர்கள் (2) பெற்ற ஷபீர் தன்கோட் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.