Latest News :

’இனியா’ மெகா தொடர் மூலம் சன் டிவியில் களம் இறங்கும் ஆலியா மானஸா!

04b4f79c2db15cc20f034ee3ec05c882.jpg

மெகா தொடர் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் ஆலியா மானஸா முக்கியமானவர். அவர் நடித்த பல தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய மெகாத் தொடரில் ஆலியா மானஸா நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் ஆலியா மானஸா முதல் முறையாக நடிக்கிறார்.

 

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சரிகம தயாரிக்கும் இந்த தொடருக்கு ‘இனியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ‘இனியா’ ஒளிபரப்பாக உள்ளது.

 

கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அவளுக்கு ஒரு அப்பா, அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள்.  ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா.

 

ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தப்பையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பவன். தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன். எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும், யார் யாரை வெல்லப் போகிறார்கள், என்பதை சுவாரஸ்யமாகவும், திடீர் திருப்பங்களோடும் சொல்ல வருகிறாள் இனியா.

 

இனியா கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக ஆலியா மானஸா நடிக்க, அவருக்கு ஜோடியாக தொடரின் நாயகனாக ரிஷி நடிக்கிறார். விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரிஷி, பல திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார். அவர் நடிக்குக் முதல் மெகாத்தொடர் இது தான். இவர்களுடன் சந்தான பாரதி, பிரவினா, எல்.ராஜா, மான்ஸி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

 

Iniya

 

சரிகம நிறுவனம் சார்பில் பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கும் இத்தொடரின் கதையை சரிகம கதை இலாகா எழுதியுள்ளது. கலைமாமணி சேக்கிழார் திரைக்கதை எழுத, மாரிமுத்து வசனம் எழுதுகிறார். நாராயணமூர்த்தி இயக்குகிறார். ப்ரின்ஸ் இமானுவேல் கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றுகிறார்.

 

சரிகம நிறுவனத்தின் பி.ஆர்.விஜயலட்சுமி, முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குநர் எல்.ராஜா, வசனம் எழுதும் ‘தொடரட்டி’ பட இயக்குநர் மாரிமுத்து, தொடரை இயக்கும் நாராயணமூர்த்தி என ‘இனியா’ தொடரில் ஐந்து இயக்குநர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Gallery