தொலைக்காட்சி தொடர்களில் அதிகமான மக்களை கவர்ந்த தொடர்களில் ‘ரோஜா’ முக்கிய இடத்தில் உள்ளது. சரிகமா நிறுவனம் தயாரிப்பில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ நெடுந்தொடரின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
தொலைக்காட்சி தொடர்களை கடந்து ஒடிடி மற்றும் யூடியுப் சேனல்களில் ஒளிபரப்பாகும் இணையத் தொடர்கள் மக்களிடம் பிரபலமடைந்து வருவதால், ‘ரோஜா’ தொடரின் இரண்டாம் பாகத்தையும் இணையத் தொடராக தயாரித்து வருகிறார்கள். அதன்படி, வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் சரிகமா டிவி ஷோவ் தமிழ் யூடியுப் (Saregama TVShows Tamil youtube) என்ற சரிகமாவின் யூடியுப் சேனலில் ‘ரோனா’ தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது.
முதல் பாகத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். பிரபல தொடர்களில் நடித்து வரும் ரியாஸ் இந்த தொடரில் நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் வெள்ளித்திரை கலைஞர்களான ராஜ்குமார், ஹரிப்ரியா, இஸ்மத் பானு, கம்பம் மீனா, கலக்கப்போவது யாரு சில்மிஷம் சிவா, ஸ்வேதா, குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலியா, தீபா உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றியவரும், ‘கள்ளப்படம்’ திரைப்படத்தின் இயக்குநருமான வடிவேல் இயக்கும் ‘ரோஜா 2’ தொடருக்கு பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரும், ‘கள்ளப்படம்’ படத்தின் ஒளிப்பதிவாளருமான ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ’பாணா காத்தாடி’, ‘ஆம்பள’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய ஜி.ராதாகிருஷ்ணன் இத்தொடரின் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். இதன் கிரியேட்டிவ் ஹெட்டாக பிரின்ஸ் இமானுவேல் பணியாற்றுகிறார்.
யூடியூப் சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் நாயகன் மதி, காதல் முயற்சியில் ஈடுபட்டு 17 பெண்களை காதலித்து, பின்பு காதல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அப்போது ரோஜா மகள் மலர், மதி வேலை செய்யும் சேனலில் நிர்வாக மேலாளராக பதவி ஏற்கிறார். எதிர்பாராதவிதமாக மலர், மதிக்கு காதல் ஒப்பந்தம் போட்டு தன்னை இம்ப்ரஸ் செய்தால் கல்யாணம் செய்துக் கொள்கிறேன், என்று சவால் விடுகிறாள். சவாலை ஏற்றுக்கொள்ளும் மதி, மலரை கவர்ந்து தனது காதல் வலையில் விழ வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். மதியின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை மையமாக கொண்டு பரபரப்பான திருப்பங்களுடன் ‘ரோஜா 2’ உருவாகியிருக்கிறது.