‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ (Enemy Of The Smuggler) திரைப்பட விமர்சனம்

துறைமுக சுங்கத்துறை சார்ந்த சில சிறு சிறு வேலைகளை செய்து வரும் இளைஞர் சரண், தனது அப்பா கட்டிய வீட்டை உறவினர்களிடம் இருந்து மீட்பதற்காக குறுகிய காலக்கட்டத்தில் அதிகம் பணம் சம்பாதிப்பதற்காக, தவறான வழியில் பயணிக்க முடிவு செய்கிறார். அதன்படி, ஜெ.டி.சக்கரவர்த்தியிடம் பணியில் சேர்ந்து, அவர் செய்யும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்.

இதற்கிடையே, துபாயில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் மாஃபியா 3 ஆயிரம் கிலோ போதைப்பொருளை கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்த முயற்சி மேற்கொள்கிறது. குஜராத் துறைமுகத்திற்கு வரும் அந்த போதைப்பொருள் கண்டய்னரை வெற்றிகரமாக மீட்பதற்கான பணியை ஜெ.டி.சக்கரவர்த்தி, சரணிடம் ஒப்படைக்கிறார். அவரும், அவரது நண்பர் பாலசரவணனும் இணைந்து அந்த பணியை செய்து முடித்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதே சமயம், போதைப்பொருள் கடத்தப்படும் தகவலை அறிந்து, அதை பறிமுதல் செய்வதோடு, கடத்தல் பின்னணியில் இருக்கும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் பிடிப்பதற்கன முயற்சியில் இந்திய வருவாய் சேவை அதிகாரி சமயம் முரளி ஈடுபடுகிறார். இதில் யார் வெற்றி பெற்றது, என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வது தான் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிமுறைகளின்படி சுங்கவரி மற்றும் பிற வரிகளை நிர்ணயித்து வசூலிப்பதோடு, தங்கம், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கடத்துவதைத் தடுத்து நிறுத்தும் பணியை சுங்கத்துறை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சுங்கத்துறையால் கடல் வழியாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ பொதைப்பொருளை பறிமுதல் செய்து அழித்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சமயம் முரளி.

இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சினிமாவுக்கான சில கற்பனைகளை சேர்த்து எழுதி இயக்கி, நடித்திருக்கும் சமயம் முரளி, சினிமாவில் இதுவரை சொல்லப்படாத துறைமுக சுங்கத்துறையின் செயல்பாடுகளையும், கடல் வழி கடத்தல்களையும் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

ஆக்‌ஷன் கலந்த புத்திசாலித்தனம் மிக்க கடத்தல்காரர் என்ற பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை தாங்கிப்பிடிக்க முடியாமல் சரண் சக்தி தடுமாறியிருக்கிறார். காதல், ஆக்‌ஷன், அம்மா செண்டிமெண்ட் உள்ளிட்ட பல உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதாபாத்திரம் என்றாலும், அதில் சரண் சக்தி நடித்ததால் அந்த கதாபாத்திரம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, பாலசரவணன் அவரது நண்பர் என்பதை கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேகாவுக்கும் சரண் சக்தியின் நிலை தான். இருந்தாலும், சரண் சக்திக்கு பொருத்தமான ஜோடியாக பயணிப்பவர், கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.

வில்லன் என்றாலும் மாஸாக எண்ட்ரியாகி அதிரடியாக பயணிக்கும் ஜெ.டி.சக்கரவர்த்தி, தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். மேத்யூ பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லாலின் அளவான நடிப்பும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

இந்திய வருவாய் சேவை அதிகாரியாக நடித்திருக்கும் சமயம் முரளி, தனது கம்பீரமான நடிப்பு மற்றும் விசாரணை பாணி மூலம் உண்மை சம்பவத்தை நம் கண்முன் நிறுத்துகிறார். முதல் படம் போல் அல்லாமல் மிக தைரியமாகவும், நம்பிக்கையுடனும் நடித்திருக்கும் சமயம் முரளியின் திரை இருப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, நாயகியின் அண்ணனாக நடித்திருக்கும் காளி வெங்கட், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், மைம் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.வின் பாஸ்கர், கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். புதியவர்கள் பலர் நடித்திருந்தாலும், அவர்களை வைத்து காட்சிகளை சரியான முறையில் படமாக்கி, அவர்களின் குறையை பல இடங்களில் மறைத்து படத்தை ரசிக்க வைக்கிறார்.

சாம் டேனியலின் இசையில் பாடல்கள் துள்ளல், மெலொடி என அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருக்கிறது. சமயம் முரளியின் பிண்ணனி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் ஸ்ரீவத்சன்.

கடல் வழி கடத்தல் மற்றும் துறைமுகங்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை மிக தெளிவாக விவரித்திருக்கும் இயக்குநர் சமயம் முரளி, கடத்தல்காரர்கள் மட்டும் இன்றி சில வியாபாரிகள் எப்படி வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள், அதன் பின்னணியில் நடக்கும் மோசடிகள் என பல தகவல்களை சினிமா பாணியில் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு மற்றும் கதை சொல்லல், காட்சிகளை கையாண்ட விதம் என அனைத்தையும் மிக சிறப்பாக செய்து படத்தை சிறு தொய்வின்றி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சமயம் முரளி, நாயகன் தேர்வையும் சரியாக செய்திருந்தால் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ (Enemy Of The Smuggler) தரமான சம்பவம்.

ரேட்டிங் 3.5/5

enemy fo the smuggler movie reviewEnemy Of The Smuggler Reviewtamil movie enemy fo the smuggler reveiwஎனிமி ஆஃப் தி ஸ்மக்லர் திரைப்பட விமர்சனம்எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் விமர்சனம்தமிழ்ப் படம் எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் விமர்சனம்
Comments (0)
Add Comment