‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்!

ராமாயணம் என்பது இதிகாச நூல் மட்டுமல்ல! நமது திருவிழாக்கள், வாழ்க்கை நெறிகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளின் அங்கமாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் இந்தியர்களின் அன்றாட வாழ்விலும் அது பிரதிபலிக்கிறது. இப்போது, அந்தப் பயணம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் டிரெய்லர் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரத்யேக முதல் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. ‘ராமாயணம் – பாரதத்திலிருந்து உலகம் வரை’ என்பதை உணர்த்தும் வகையில், இந்த நிகழ்வு ‘பிரதம் சங்கல்ப்’ எனும் பெயரில் நடைபெற்றது. இந்திய பாரம்பரியத்தில் ‘சங்கல்ப்’ என்பது மகத்தான முயற்சியைத் தொடங்குவதற்கு முன் மனப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் உறுதிமொழியாகும். அதேபோல், இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார செல்வங்களில் ஒன்றான ராமாயணத்தை அதன் உண்மைத்தன்மை, கலைநயம் மற்றும் மரியாதையுடன் உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற படக்குழுவின் உறுதியை இந்த நிகழ்வு பிரதிபலித்தது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை, ராமாயணத்தின் மதிப்புகள் ஒன்றிணைத்திருப்பதற்கான அடையாளமாக, நிகழ்வு நடைபெறும் இடமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, ஜூலை 24-ஆம் தேதி உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் முதல் முறையாக பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

இந்தப் பயணம் டெல்லியில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் தொடங்கியது. ‘ராமாயணம் ஸ்கூல்ஸ் புரோகிராம்’ மூலம் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் ராமாயணத்தின் உயர்ந்த வாழ்க்கை மதிப்புகளை நிகழ்ச்சிகள் மூலம் அறிந்துகொண்டனர். அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், இந்தியாவின் 20 நகரங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், படைப்பாளிகள் மற்றும் ரசிகர்கள், உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக டிரெய்லரை பிரத்யேகமாக காணும் வாய்ப்பைப் பெற்றனர்

‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வில், ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் முதன்முறையாக பொதுவெளியில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்திய சினிமாவின் பல தலைமுறைகளை ஒரே மேடையில் இணைத்த இந்த நிகழ்வு, இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தப்பட்ட மரியாதையாக அமைந்தது.

‘தங்கல்’ திரைப்படம் மூலம் சீனா போன்ற நாடுகளின் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகளைப் படைத்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைத் தன் கதைசொல்லல் பாணியால் ஈர்த்த புகழ்பெற்ற இயக்குநர் நிதேஷ் திவாரி, இந்தியத் திரையுலகின் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மிகச்சிறந்த கலைஞர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் அருண் கோவில் (மன்னர் தசரதர்), ஷோபனா (கைகேயி), அஜிங்க்யா தேவ் (விஸ்வாமித்திரர்), குனால் கபூர் (இந்திர தேவன்), ரகுல் ப்ரீத் சிங் (சூர்ப்பணகை), ரவி துபே (லட்சுமணன்) ஆகியோரும் மேடையில் கலந்து கொண்டனர்.

இந்தியா மற்றும் பிற நாடுகளில் தலைமுறை தலைமுறையாக மிகவும் நேசிக்கப்பட்டு, வணங்கப்பட்டு, போற்றப்படும் மரியாதைக்குரிய புருஷோத்தமரான ராமராக சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர், வரலாற்றில் மிகவும் போற்றப்படும் பெண்களில் ஒருவரான அன்னை சீதையாக சாய் பல்லவி மற்றும் தனது மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மூலம் ராமாயணத்தை இணைந்து தயாரிக்கும் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான ராக்கிங் ஸ்டார் யாஷ் வலிமைமிக்க மற்றும் அழிக்க முடியாத ராவணனாக நடித்துள்ளார். நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கும் வகையில், அனுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சன்னி தியோலும் திடீர் வருகை தந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்தியாவின் மிகச்சிறந்த கலைத் திறமையாளர்கள், உலகப்புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைக்கும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் தொலைநோக்குப் பார்வையை இந்த நிகழ்வு பிரதிபலித்தது. மனிதகுலத்தின் மிகப்பழமையான மற்றும் காலத்தால் அழியாத கதைகளில் ஒன்றை, முன்னெப்போதும் இல்லாத அளவிலான பிரம்மாண்டம், நம்பகத்தன்மையுடன் இந்த படக்குழு உருவாக்கியுள்ளது.

‘ராமாயணம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படைப்பாக்க வடிவமைப்பாள நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணம் நமது மிகச்சிறந்த இதிகாசம் மட்டுமல்ல! அது நம் வாழ்வின் ஒரு பகுதி. இருளை ஒளி வெல்வது, தீமையை தர்மம் வெல்வது என்ற விஷயத்தை ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்தும் கதைகள் மிகவும் அரிது. ராமாயணம் அத்தகைய மகத்தான காவியம். உலக திரைப்படத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய கதைகள் உலகின் மிகப்பெரிய மேடையில் சொல்லப்பட வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் எப்போதும் எனக்கிருந்தது. இன்று அதற்குத் தேவையான கலைஞர்கள், தொழில்நுட்பம், திறமை மற்றும் உறுதி அனைத்தும் நம்மிடம் உள்ளது. இது ஒரு திரைப்படத்தின் தொடக்கம் மட்டுமல்ல! இந்தியாவின் கலாச்சாரப் பெருமையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் புதிய பயணத்தின் தொடக்கம்” என்றார்.

இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணம் உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. அதன் பெருமை அது சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளில் உள்ளது. அதை உலகளாவிய கதையாக மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில், ஏற்கனவே அது உலக மக்களிடம் புகழ்பெற்ற காவியம். எனது பொறுப்பு அதை நேர்மையுடனும், உண்மைத்தன்மையுடனும், மரியாதையுடனும் திரையில் கொண்டு வருவதுதான். திரைக்கதை, நடிப்பு, இசை, கலை இயக்கம், விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொன்றும் இந்த மகத்தான காவியத்திற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இது உருவாக்கப்பட்டது.உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதைசொல்லிகளுடன் இணைந்து பணியாற்றியது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம். ராமாயணத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்லாமல், அதன் உணர்வுகள், மனிதாபிமானம் மற்றும் காலத்தால் அழியாத ஆன்மா ஆகியவற்றையும் இந்தத் திரைப்படம் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது பெற்ற DNEG, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ’ராமாயணம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.

‘ராமாயணம்’ பாரதத்திலிருந்து உலகை நோக்கிய பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக ‘பிரதம் சங்கல்ப்’ நிகழ்வு நடைபெற்றது. வரும் ஜூலை 24, 2026 அன்று அதிகாரப்பூர்வ டிரெய்லர் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘ராமாயணம் : பகுதி 1’ திரைப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

pan india movie ramayanamramayanamபான் இந்தியா படம் ராமாயணம்ராமாயணம்
Comments (0)
Add Comment