‘இம்மார்டல்’ (Immortal) திரைப்பட விமர்சனம்

வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கும் பேச்சுலரான நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வருகிறது. தன் வீட்டில் இருக்கும் இரு அறையில் ஒன்றை வாடகைக்கு விட இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் பார்க்க வரும்படி சொல்கிறார். அதன்படி அந்த இடத்திற்கு சென்று பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் வசதியான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுடன், அந்த வீட்டின் உரிமையாளரான நாயகி கயாடு லோஹரின் அழகையும், கவர்ச்சியையும் பார்த்து சொக்கி விடுகிறார். உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த வீட்டில் குடியேறி விடுகிறார். அடுத்த சில நாட்களிலேயே கயாடு லோஹருக்கு காதல் வலை விரிக்க அவரும் எளிதில் விழுந்து விடுகிறார்.

இதற்கிடையே திடீரென்று அந்த வீட்டில் கயாடு லோஹரின் தாத்தா என்று ஒருவர் நடமாடுகிறார். அதை தொடர்ந்து அங்கு பல்வேறு மர்மங்கள் இருப்பதை ஜி.வி.பிரகாஷ் குமார் உணர்ந்து, அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் அது முடியாமல் போவதோடு, அந்த வீட்டைப் பற்றிய பல உண்மைகள் அவருக்கு தெரிய வருகிறது. அது என்ன ?, அங்கிருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் தப்பித்தாரா? இல்லையா ? என்பதை ஃபேண்டஸி சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் சொல்வது தான் ‘இம்மார்டல்’.

இம்மார்டல் என்றால் அழியாத என்று அர்த்தம். அப்படி ஒரு கதாபாத்திரமும், அதை சுற்றி நடக்கும் கதையை சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் இன்றி கயாடு லோஹரின் கவர்ச்சியோடும் இயக்குநர் மாரியப்பன் சின்னா சொல்லியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், வழக்கம் போல் ஒரே மாதிரியான எக்ஸ்பிரசன்களோடு நடித்திருக்கிறார். கயாடு லோஹரின் அழகு மற்றும் கவர்ச்சியில் மயங்குபவர், அந்த வீட்டில் இருக்கும் ஆபத்தை அறிந்து அச்சமடைவது, அங்கிருந்து தப்பிக்க முயற்சிப்பது, பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பயணிப்பது என்று நடிப்பில் வேறுபாட்டை வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், ஒரே மாதிரியாகவே நடித்து சொதப்பியிருக்கிறார்.

அழகான ராட்சசி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவராக இருக்கும் கயாடு லோஹரின் அழகு மற்றும் கவர்ச்சி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. முதல் பாதியில் தன் கவர்ச்சியால் கிரங்கடிக்கும் கயாடு லோஹர், இரண்டாம் பாதியில் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்த டி.எம்.கார்த்திக், வித்தியாசமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார். லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹாராஜ், பேமா சாம்சோ, சுனிதா ஷ்ரேஷ்டா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், தனது மொத்த வித்தையையும் இறக்கி நாயகி கயாடு லோஹரை அழகாக காட்டியிருக்கிறார். அவரது அழகும், கவர்ச்சியும் திரைக்கதைக்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் கிராபிக்ஸ் காட்சிகளையும் சரியான முறையில் கையாண்டிருக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலாவது தன் திறமையை வெளிப்படுத்துவார், என்று எதிர்பார்த்தால் அங்கேயேயும் பெருத்த ஏமாற்றமே. எதாவது விசித்திரமான மிருகம் அல்லது உருவத்திற்கான பின்னணி இசை என்றாலே ஆங்கிலப் படங்களின் வாடை அதிகம் இருக்கும். சாம்.சி.எஸும் அதே பாணியை பின்பற்றி படத்தில் வரும் விசித்திரமான உயிரினத்திற்கான பீஜியம் அமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ராஜேஷ்.எம், காட்சிகளை சுருக்கமாக வெட்டி படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் மாரியப்பன் சின்னா, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரோடு ஃபேண்டஸியையும் இணைத்து திரை மொழியில் மேஜிக் நிகழ்த்த முயற்சித்திருக்கிறார். ஆனால், காட்சிகளில் இருக்கும் லாஜிக் மீறல்களால் அவரது மேஜிக் முயற்சி தோல்வியடைந்து விட்டது.

5 ஆயிரம் ரூபாய்க்கு இப்படி ஒரு வீடா? என்ற கேள்வியும், அந்த வீட்டின் உரிமையாளரின் அழகும், நிச்சயம் இங்கு ஏதோ ஆபத்து இருக்கப் போகிறது, என்பதை உணர்த்தினாலும், அது என்னவாக இருக்கும் ? என்ற எதிர்பார்ப்பு முதல் பாதி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.ஆனால், இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் உடைந்த பிறகு சுவாரஸ்யம் இல்லாமல் பயணிக்கும் திரைக்கதை, இறுதியில் படத்தை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் சப்பென்று முடிவது படத்தை பலவீனமடைய செய்து விடுகிறது.

இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் முயற்சியும், அதை திரை மொழியில் சொன்ன விதமும் பாராட்டும்படி இருந்தாலும், முழுப்படமாக பார்க்கும் போது லாஜிக் ஓட்டைகள் மூலம் படம் மனதோடு ஒட்ட மறுக்கிறது.

மொத்தத்தில், ‘இம்மார்டல்’ புதிய முயற்சிக்காக ஒரு முறை பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5

immortal movie reviewimmortal reviewtamil movie immortal reviewஇம்மார்டல் திரைப்பட விமர்சனம்இம்மார்டல் விமர்சனம்தமிழ்ப் படம் இம்மார்டல்
Comments (0)
Add Comment