’லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்பட விமர்சனம்

ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் தனக்கென்று பைக் வாங்காமல், தேவைக்கு அப்பாவின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதோடு, சம்பளம் முழுவதையும் அப்பாவிடம் கொடுத்துவிட்டு தனது செலவுக்கு கூட பணம் கேட்காத, ஒரு ஆச்சரியமான இளைஞராக வாழ்ந்து வருகிறார் நாயகன் பவிஷ். இப்படிப்பட்ட பவிஷை காதல் பெரும் கடன்காரானாக்கி, குடும்பத்தாரிடம் இருந்து பிரிப்பதோடு, அவரது வேலையையும் பரித்து விடுகிறது.

நாயகி நாக துர்காவின் ஆடம்பர செலவுகளாலும், அக்கறை இல்லாத காதல் உறவாலும் உருக்குலைந்து போகும் பவிஷ், அவரை பிரிய முடிவு செய்கிறார். ஆனால், நாக துர்கா பவிஷ் தான் தனக்கு ஏற்றவர் என்ற முடிவில், அவரை மணந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நாக துர்வாவின் விருப்பத்தை நிறைவேற்ற பவிஷ் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதன்படி, நான்கு வருடங்களாக ஒரு காதலனாக தான் செய்ததை, அவர் தனக்கு நான்கு மாதங்கள் செய்ய வேண்டும், அப்படி செய்துவிட்டால் அவரை திருமணம் செய்துகொள்வதாகவும், அவரால் அது முடியாமல் போனால், அவர் தன்னை விட்டு விலகிவிட வேண்டும், என்கிறார்.

அவரது நிபந்தனையை ஏற்று ஆண்களின் உலகத்துக்குள் பயணப்பட முடிவு செய்யும் நாக துர்கா, நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்து பவிஷை கரம் பிடித்தாரா ? முடியாமல் பிரிந்தாரா ? என்பதை நகைச்சுவையாகவும், நாகரீகமாகவும் சொல்வதே ‘லவ் ஓ லவ்’.

கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ், தன் முதல் படத்திலேயே நடனம் மற்றும் நடிப்பில் தன்னை நிரூபித்து விட்டார். இது அவருக்கு இரண்டாவது படம் என்பதால் நடிப்பில் முதிர்ச்சி தெரிவதோடு, சில இடங்களில் தனுஷின் சாயலும் தெரிகிறது. நடனம் மட்டும் அல்ல நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள், காதலி மீதான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என அனைத்திலும் அளவாக நடித்து, பாதிக்கப்பட்ட ஆண்களின் பிரதிபலிப்பாக வலம் வருகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை நாக துரகா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருந்தாலும், பார்வையாளர்களை சட்டென்று கவரக்கூடிய நாயகியாக இல்லை. நடனக் காட்சிகளிலும் அவருக்கு போதுமான வாய்ப்பு இல்லாததால், அதன் மூலமாகவும் பார்வையாளர்கள் மனதில் ஒட்ட மறுக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன், மகளிர் சங்க தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் ஆகியோரது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். ஒரே ஒரு சண்டைக்காட்சி என்றாலும், நாயகனை புழுதியோடு உருண்டு புரள வைத்து உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் அளவான ஒளி மற்றும் வண்ணங்கள் மூலம் எதார்த்தமாக படமாக்கும் பி.ஜி.முத்தையா, இந்த படத்தின் பாடல் காட்சிகளில் பயன்படுத்திய ஒளி மற்றும் வண்ணங்கள் அவரை கமர்ஷியல் படக்கம் திருப்பியிருக்கிறது.

பாக்ஸன் இசையமைப்பில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையிலும், திரும்ப திரும்ப கேட்கும் வகையிலும் இல்லை. பின்னணி இசை அளவு.

இயக்குநருக்கு வரிசைப்படி கதை சொல்ல தெரியவில்லை என்றாலும், படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் காட்சிகளை கவனமாக தொகுத்து இயக்குநர் சொல்ல வந்ததை பார்வையாளர்களிடத்தில் எளிதாக கடத்தி விடுகிறார்.

ஜெயம் ரவி – ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன், அப்படத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தன் முதல் படத்தில் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், பாதிப்பு எதுவாக இருந்தாலும் சரி, அதை பார்வையாளர்களுக்கு பிடித்த மாதிரியும், பழைய பாதிப்பின் அடையாளம் தெரியாதபடியும் கையாண்டு ஒரு கமர்ஷியல் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார்.

காதல் என்றால் என்ன ? என்ற பாடத்தை கலகலப்பாக சொல்ல ஆரம்பித்து இறுதியில் இதயத்தின் அடிநாதத்தை காட்சிகள் மூலம் தொட்டிருக்கும் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களை குறிவைத்து எழுதப்பட்ட கதை என்றாலும், திரைக்கதையில் குடும்ப உறவுகளையும் இணைத்து அனைத்து வயதினருக்கும் ஏற்ற நாகரீகமான காதல் படமாக இயக்கியிருகிறார்.

எப்படி காதலிக்க ஆரம்பித்தார்கள் என்பதை விட, இவர்கள் காதலின் பிரச்சனை என்ன ? என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது புதிய பாணியாக இருந்தாலும், காதல் உணர்வு அரும்பும் அந்த இனிமையான தருணம், அதனைத் தொடர்ந்து கதை மாந்தர்களின் மனதில் பறக்கும் பட்டாம்பூச்சியை பார்வையாளர்கள் மனதிலும் பறக்கச் செய்யும் மேஜிக் இல்லாததும், யுடியுப் பிரபலமாக இருந்தாலும், பெரிய திரையில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்காத கதாநாயகியும், காதல் உணர்வுகளை கடத்தும் வரிகள் நிறைந்த பாடல்கள் இல்லாததும் படத்தின் குறைகள்.

ஆனால், குறைகளை மறக்கடிக்கும் விதத்தில் திரைக்கதையை நேர்மையாக கையாண்டு, மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்ச்சியான காட்சிகளோடு, இதமான காதல் உணர்வுகள் மற்றும் இணக்கமான குடும்ப உறவுகள் மூலம் காதலர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களின் மனங்களையும் கவர்ந்திருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.

மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ குடும்பத்தோடு பார்க்க கூடிய நாகரீகமான காதல் கலாட்டா படம்.

ரேட்டிங் 3.5/5

love oh love movie reviewlove oh love reviewtamil movie love oh love reviewதமிழ்ப் படம் லவ் ஓ லவ் விமர்சனம்லவ் ஓ லவ் திரைப்பட விமர்சனம்லவ் ஓ லவ் விமர்சனம்
Comments (0)
Add Comment