காதல் தோல்வியால் ஊரை விட்டு துபாய் செல்லும் நாயகன் ரிஷிகாந்த், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர, அவருக்கே தெரியாமல் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அவருக்கும், நாயகி அனிஷ்மா அனில்குமாருக்கும் திருமணம் நடக்கிறது.
மொத ராத்திரி அன்று தனது மனைவியிடம் ரிஷிகாந்த், மனம் திறந்து பேச முயற்சிக்கிறார். ஆனால், அனிஷ்மா அங்கிருந்து வெளியேறி தன் காதலருடன் ஓட முயற்சிக்கிறார். விசயம் தெரிந்த பிறகு ரிஷிகாந்த், என்ன முடிவு எடுத்தார்?, அவரது கல்யாண வாழ்க்கை வெற்றி பெற்றதா? அல்லது அனிஷ்மாவின் காதல் வெற்றி பெற்றதா ? என்பதை கிராமத்து மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியலாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதே ‘மொத ராத்திரி’.
திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களை இயல்பாகவும், உறவுகளின் மகிழ்ச்சி, சோகம், எதிர்பார்ப்பு, மோதல் ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாகவும் காட்சிப்படுத்தி கதை சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, பல இடங்களில் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், நாயகன் பற்றாக்குறையை தீர்ப்பார் என்ற நம்பிக்கையை கொடுக்கும் விதமாக நடித்திருக்கிறார். மருது கதாபாத்திரத்தில் அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பவர், பல இடங்களில் அமைதியாக இருந்தே தனது உணர்வை சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக கையாண்டு பாராட்டு பெறுகிறார். முதல் பாதி படத்தில் குறைவாக பேசியிருப்பவர், இரண்டாம் பாதி படம் முழுவதும் பேசாமலேயே நடித்தாலும், இறுதிக் காட்சியில் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தி அழும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிகர்களாக அல்லாமல் கிராமத்து மனிதர்களாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்த விதம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி கதாபாத்திரங்களைப் போல் கதைக்களம் மற்றும் காட்சிகளையும் இயல்பாக படமாக்கியிருக்கிறார். ஒரு திருமண நிகழ்வு மற்றும் திருமண வீட்டில் பயணித்த உணர்வை கொடுப்பவர், இரவு நேர காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் சில பாடல்களின் இசை ஒட்டிக்கொண்டிருந்தாலும், காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.
ஒரு நாளில் நடக்கும் கதையாக இருந்தாலும், நேர்த்தியான முறையில் காட்சிகளை தொகுத்து கதையின் இயல்பு தன்மை மாறாமல் படத்தை ந்கர்த்திச் சென்றிருக்கும் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைவர் மீதும் பார்வையாளர்களின் கவனத்தை கடத்தும் வித்தையை சிறப்பாக செய்திருக்கிறார்.
திருமண நிகழ்வில் தொடங்கும் கதை, மொத ராத்திரியோடு முடிவடைந்தாலும், அந்த இடைப்பட்ட நேரத்தில் மனித மனங்களை அலசியிருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, காதல் உள்ளிட்ட பல விசயங்களை மேலோட்டமாகவும், நகைச்சுவையாகவும் பேசியிருந்தாலும் பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதியும்படி பேசியிருக்கிறார்.
கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம், ஒரு திருமண வீட்டில் நடக்கும் நிகழ்வை உண்மைக்கு நெருக்கமான முறையில் காட்சிப்படுத்திய முறை ஆகியவை வழக்கமான கமர்ஷியல் சினிமாவை கடந்த ஒரு படைப்பாக பாராட்டு பெறுகிறது.
மொத்தத்தில், ’மொத ராத்திரி’ தலைப்பு தான் ஒரு மாதிரி, படம் அனைத்து மாதிரியான மக்களுக்கானது.
ரேட்டிங் 3.5/5