’முதற்கனல்’ திரைப்பட விமர்சனம்

தற்போதைய காலக்கட்டத்தில் உருவெடுத்துள்ள போதை வலையில் சிக்கி இளைஞர்கள் எப்படி சின்னாபின்னமாகிறார்கள் என்பதையும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான அவர்களது போராட்டம், அதனால் பாதிக்கப்படும் அவர்களது குடும்பம் மற்றும் அதன் மூலம் உருவெடுக்கும் குற்ற செயல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘முதற்கனல்’ படத்தை இளைஞர்களுக்கான விழிப்புணர்வு படைப்பாகவும், மக்களை யோசிக்க வைக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன்.

சாதிக்க துடிக்கும் பள்ளி மாணவனான கதையின் நாயகன் அஸ்வின் விஸ்வநாத், தவறான நட்பால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பிக்கும் அவரது போதைப் பழக்கம் நாளடைவில் அவரையே ஆட்கொண்டு அடிமையாக்கி விடுவதோடு, குடும்பத்தினரிடம் இருந்தே அவரை தனிமைப்படுத்தி விடுகிறது. இத்தகைய போதை வலையில் இருந்து மீள நினைக்கும் அஸ்வின் விஸ்வநாத்தால் அது முடிந்ததா, அதற்காக அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்ன, என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ‘முதற்கனல்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் விஸ்வநாத், மகிழ்ச்சி, விரக்தி, வெறுப்பு, கோபம், குற்ற உணர்ச்சி என அனைத்துவிதமான உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். போதை பழக்கத்தால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மன போராட்டங்களை தனது உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பவர், இயக்குநர் பார்வையாளர்களிடம் கடத்த நினைத்த கருத்துகளையும், கவனிக்க வைக்க நினைத்த இளைஞர்களின் எதிர்கால சவால்களையும், அஸ்வின் விஸ்வநாத் உணர்ந்து நடித்திருக்கிறார்.

ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, ஹரிஹரன், யோகேஷ், ஆர்.வெங்கடரமணன், டி.ராஜேந்திரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பணியை சரியாக செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கந்தசாமி கோபால், விழிப்புணர்வு படம் என்றாலும், தனது கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் காட்சிகளை பரபரப்பான சூழல் மிக்கதாக படமாகி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார். கதாபாத்திரங்களின் மன போரட்டங்கள் மற்றும் உணர்வுகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தி அதை பார்வையாளர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மீரா லாலின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஆர்பாட்டமான சத்தங்களை பயனபடுத்தாமல், அளவான பின்னணி இசை மூலம் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

கதையின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கும் டிஸ்யன் சாரதி, திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி சென்றிருக்கிறார்.

போதை வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழக்கும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு படைப்பாகவும், தங்கள் பிள்ளைகளை எளிதில் ஆட்கொள்ளும் போதை உலகத்தின் விபரீதம் தெரியாமல் இருக்கும் பெற்றோர்களுக்கான எச்சரிக்கை படமாக இருந்தாலும், அதை சினிமா ரசிகர்களுக்கான சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன்.

நாட்டில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருப்பதையும், அதற்கு அடிமையாகும் எளிய மக்களை பற்றியும் பேசிக் கொண்டிருப்பவர்கள், சத்தம் இல்லாமல் பள்ளி மாணவர்களை அடிமையாக்கும் பல்வேறு விதமான போதைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை காட்சி மொழி மூலம் மிக சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன், அந்த போதைப் பொருட்கள் பள்ளி மாணவர்களிடம் எளிதாக கிடைப்பதையும், அதை அவர்கள் மிக சாதாரணமாக பயன்படுத்துவதையும் உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சமூக விழிப்புணர்வு மற்றும் போதையில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள், அவர்களது குடும்பத்தாரின் மன போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக கையாண்டிருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் சுவாரஸ்யம் மிக்க படமாக இயக்கி பாராட்டு பெறுகிறார் இயக்குநர் ஆர்.வெங்கடரமணன்.

மொத்தத்தில், ‘முதற்கனல்’ அனைத்து தரப்பு மக்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 4/5

mudharkanal movie reviewmudharkanal reviewmutharkanal movie reviewmutharkanal reviewtamil movie mutharkanal reviewதமிழ்ப் படம் முதற்கனல் விமர்சனம்முதற்கனல் சினிமா விமர்சனம்முதற்கனல் விமர்சனம்
Comments (0)
Add Comment