‘பாரிஸ் கஃபே’ திரைப்பட விமர்சனம்

அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் போன்ற சிறந்த தம்பதியை பார்க்க முடியாது, என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, மருத்துவ கருத்தரங்கம் ஒன்றுக்காக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸுக்கு செல்லும் குரு சோமசுந்தரம், அங்கிருக்கும் காஃபே ஒன்றில், மகிழ்ச்சியாக இருக்கும் சென்னையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்த புகைப்படம் குறித்து விசாரிப்பவர், அவர்கள் பற்றி அறிந்துக் கொண்டு பதட்டப்படுகிறார். அதே பதட்டத்துடன் சென்னை திரும்புகிறவர், தன் மனைவியிடம் அந்த காதல் ஜோடி பற்றிய உண்மைகளை சொல்வதோடு, அவர்கள் உயிருடன் இல்லை, என்பதையும் சொல்கிறார்.

குரு சோமசுந்தரம் சொல்வதை கேட்ட பிறகு, பத்திரிகை செய்தி மூலமாக அந்த காதல் ஜோடி பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ளும் அனுமோல், குரு சோமசுந்தரத்தின் மீது கோபமடைந்து, அவரை விட்டு பிரிந்து சென்று விடுகிறார். பெற்றோர் பிரிவு குறித்து அறிந்த மகள் அர்ச்சனா, தனது காதலர் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார். தனது பெற்றோரை மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ?, இளம் காதல் ஜோடி யார் ?, அவர்களது இறப்புக்கும் குரு சோமசுந்தரத்திற்கும் என்ன தொடர்பு ?, ஆகிய கேள்விகளுக்கான பதில்களை சமூக அக்கறையோடு சொல்வது தான் ‘பாரிஸ் கஃபே’.

சினிமாவை வெறும் பொழுதுபோக்கிற்கான சாதனமாக பார்க்காமல், சமூகப் பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வலிமையான ஊடகம் என்பதை உணர்ந்து தங்களது முதல் படத்திலேயே சமூகப் பிரச்சனைப் பற்றி பேசிய இயக்குநர்கள் பட்டியலில் இப்படத்தின் இயக்குநர் சரஜ் சீலனும் இடம் பிடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரங்களில், கணவன் – மனைவியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இருவரும் இயல்பான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஆணவப் படுகொலையை மறைப்பதற்கு தனது கணவரும் உடந்தையாக இருந்ததை அறிந்து கோபமடையும் அனுமோல், அதனால் பாதிக்கப்படும் குடும்பங்களின் குரலாகவும், அவர்களின் கோபமாகவும் தனது கதாபாத்திரத்தை உணர்வுப்பூர்வமாக கையாண்டிருக்கிறார்.

குற்றம் என்றாலும் குடும்பத்திற்காக செய்து விட்டு, அதே குடும்பத்திற்காக குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்கவும் தயாராக இருக்கும் குரு சோமசுந்தரம், தன் அளவான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்வதோடு, அவ்வபோது நகைச்சுவை உணர்வு மிக்க வசன உச்சரிப்பு மூலம் சிரிக்க வைக்கிறார்.

இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா, துள்ளல் நடிப்பு மூலம் காட்சிகளுக்கு புத்துணர்ச்சியளித்திருக்கிறார்கள். மற்றொரு ஜோடியான சாய் விக்கி மற்றும் நயனா சாய் இதயத்தை கனக்க செய்யும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி, அமெரிக்கா மற்றும் பாரிஸ் போன்ற வெளிநாடுகளை கிராபிக்ஸ் மூலம் கச்சிதமாக காட்சிகளுடன் இணைத்திருப்பதோடு, தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

கே இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்கள். பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

ஆணவப் படுகொலையும், அதன் பின்னணி பற்றியும் பேசும் கதையாக இருந்தாலும், அதை வித்தியாசமான பாணியில் கையாண்டிருக்கும் இயக்குநருக்கு படத்தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோசப் பணி பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் சரஜ் சீலன், அதை ஒரு பிரச்சாரம் அல்லது போதனையாக அல்லாமல், இளம் காதல் ஜோடி மற்றும் இன்ப துன்பங்களை ஒன்றாகக் கடந்து வாழும் தம்பதி மூலம் அழகான காதல் கதையாகவும், சுவாரஸ்யம் மிக்க விறுவிறுப்பான திரைக்கதையோடும் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘பாரிஸ் காஃபே’ இதயத்தை தொடும்.

ரேட்டிங் 3.2/5

paris cafe movie reviewparis cafe reviewtamil movie paris cafe reviewபாரிஸ் கஃபே திரைப்பட விமர்சனம்பாரிஸ் கஃபே விமர்சனம்பாரிஸ் காஃபே விமர்சனம்
Comments (0)
Add Comment