இசைஞானி இளையராஜாவின் இசைக்காலம் மீண்டும் துவங்கியிருக்கிறது. ராஜாவின் இசையமைப்பில் உருவாகும் புதிய படங்களின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதோடு, அப்படங்களுக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் புதிய படம் ‘இராவணன் சோலையில் சிவன் மலை’.
ஆர்.எஸ் குளோபல் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.கே.ஸ்ரீதர் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி பாணர் இயக்குகிறார். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்ய, காசி விஸ்வநாத் படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பத்திரிகையாளர்கள் தொடர்பாளராக டைமண்ட் பாபு பணியாற்றுகிறார்.
இளையராஜாவின் இசையில் உருவாகும் ‘இராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் துவக்க விழா, இளையராஜா ஸ்டுடியோவில் பூஜையுடன் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி படத்தை துவக்கி வைத்தார். மேலும், கங்கை அமரன், இயக்குநர் ஞான ராஜசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர்.
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் தொடங்குகிறது. அதை தொடர்ந்து தென்னகத்தின் பல மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.