‘சிங்காரம்’ திரைப்பட விமர்சனம்

குறவர் சமூகத்தைச் சேர்ந்த யோகி பாபு, தனது அம்மா, அப்பா, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இந்த சமூகம் தங்களை சக மனிதர்கள் என்று பார்க்காமல் பாகுபாடு காட்டுவதை எண்ணி வருந்தும் யோகி பாபு மற்றும் அவரது சமூகத்தினர் தங்களுக்கு என்று அடையாளம் இன்றி பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், லாட்டரி சீட் மூலம் யோகி பாபு கோடீஸ்வரராகி விடுகிறார். பணம் வந்ததும் அவரது வாழ்க்கை மாறினாலும், அவரது சமுகத்தினரிடத்தில் காட்டப்படும் பாகுபாடு மட்டும் மாறாமல் இருக்கிறது. பணத்தால் தனக்கு கிடைத்த அடையாளமும், மரியாதையும் தனது சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் யோகி பாபு, மூலமாகவே அது நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பு அமைகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி யோகி பாபு மாற்றத்தை உருவாக்கினாரா? இல்லையா ? என்பதை சமூகப்பொறுப்புடன் சொல்வது தான் ‘சிங்காரம்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான உருவ கேலி வார்த்தைகளை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அவ்வபோது தனது பாணியில் டைமிங் வசனங்களால் சிரிக்க வைப்பவர், செண்டிமெண்ட் காட்சிகளில் அளவாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்செண்ட், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, செண்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம்.கணேஷ்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரின் கேமரா காட்சிகளை பிரமாண்டமாக படமாக்குவதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

லாரன்ஷ் கிஷோரின் படத்தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி சென்றிருக்கிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் கே.வி. கதிர்வேலு, இன பாகுபாட்டினால் பாதிக்கப்படும் மக்களின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

கதை 1990-ல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போதைய காலக்கட்டத்தில் குறவர் சமூகத்தினர் எதிர்கொண்ட புறக்கணிப்பு மற்றும் பாதிப்புகளை விவரித்திருக்கும் இயக்குநர் கே.வி. கதிர்வேலு, கடந்த திமுக ஆட்சியின் மூலம் அந்த சமூகத்தினருக்கு கிடைத்த அடையாளத்தையும், அந்த மக்களின் தற்போதைய தலைமுறைகளின் முன்னேற்றங்கள் குறித்தும் பதிவு செய்திருக்கிறார்.

புறக்கணிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் மனபோராட்டத்தை காட்சி மொழியின் மூலம் மிக சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் கே.வி. கதிர்வேலு, கல்வி மற்றும் அரசு பணி ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல், அரசியல் அதிகாரம் என்பதும் மிக முக்கியமானது என்பதை உரக்க சொல்லி, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலித்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘சிங்காரம்’ சிறப்பு.

ரேட்டிங் 4/5

singaram movie reviewsingaram reviewtamil movie singaram reviewசிங்காரம் திரைப்பட விமர்சனம்சிங்காரம் விமர்சனம்தமிழ்ப் படம் சிங்காரம் விமர்சனம்
Comments (0)
Add Comment