‘டாக்ஸிக்’ திரைப்பட விமர்சனம்

1947 முதல் 1970 காலக்கட்டங்களில் கதை நடக்கிறது. அப்போதையக் காலக்கட்ட கோவா மாநிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலில் கதை தொடங்குகிறது. துடிப்பான மற்றும் முரட்டுத்தனம் மிக்க இளைஞரான நாயகன் யாஷ் மற்றும் அவரது சகோதரி நயன்தாரா இருவரும் இணைந்து தங்களது எதிரிகளை வேட்டையாடுகிறார்கள். அக்கா நயன்தாராவுக்கு தனது தம்பி முழு நகரத்தையும் ஆள வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவருக்கு துணையாக பயணிப்பவர் திடீரென்று சிலரது சதியால் கொல்லப்படுகிறார். அக்காவின் கொலைக்குப் பிறகு கோவாவை விட்டு வெளியேறும் யாஷ், சீனாவில் தனது ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துகிறார்.

இதற்கிடையே யாஷ் மீண்டும் கோவா திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாஷியின் வருகையை அறிந்து அவரது மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்துக் கொள்கிறார். அவரது 10 வயது மகனை யாஷ் கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அது அவரால் முடியாமல் போக, அவரை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்.

மீண்டும் வழக்கம் போல் கோவாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் யாஷ், ருக்மணி வசந்தை திருமணம் செய்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்க, அவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவங்கள் நடக்கிறது. அவரது சாம்ராஜ்யத்திற்கும், அவரது மகனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து தனது மகனையும், சாம்ராஜ்யத்தையும் யாஷ் காப்பாற்றினாரா ? , அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்பதை பிரமாண்டமான முறையில் சொல்வது தான் ‘டாக்ஸிக்’.

‘கே.ஜி.எப்’-ன் மிகப்பெரிய வெற்றியின் மூலம் ‘டாக்ஸிக்’ மீதான மக்களின் எதிர்பார்ப்பை, பிரமாண்டம் மற்றும் வன்முறை காட்சிகளின் மூலமாக பூர்த்தி செய்து விடலாம், என்ற தவறான முடிவால் படம் பாதாளத்திற்கு சென்றிருக்கிறது.

பலமான கதை மற்றும் நம் கலாச்சாரத்தை சார்ந்து பயணிக்கும் திரைக்கதை இல்லை என்றால், எத்தகைய பிரமாண்டம் இருந்தாலும், அந்த படத்தை மக்கள் குப்பையில் வீசுவார்கள், என்பதை நிரூபிக்கும் ஒரு படமாக ‘டாக்ஸிக்’ அமைந்திருக்கிறது.

ராயா மற்றும் டிக்கெட் என்ற அப்பா-மகன் வேடங்களில் நடித்திருக்கும் யாஷ், விதவிதமான மேல்நாட்டு ஆடைகளை உடுத்திக் கொண்டு, பலவிதமான பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, விதவிதமான பாட்டில்களில் மது அருந்துவது, கண் இமைக்கும் நேரத்தில் தலை, கை, கால்களை வெட்டுவது என்று வன்முறையும், ஆபாசமும் நிறைந்த ஒரு வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். அப்பா, மகன் இருவரும் வன்முறைக்கு சலைத்தவர்கள் இல்லை என்று சொல்லும் விதத்தில் கொத்து கொத்தாக கொலை செய்கிறார்கள். படம் முழுவதும் நடப்பது, சிக்ரெட் புகைப்பது, நிர்வாணமாக நிற்பது, துப்பாக்கி சண்டை, வெட்டி வீழ்த்துவது என்று பயணிக்கும் யாஷ், கிளைமாக்ஸுக்கு முன்பு கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அங்கேயும் ஆக்‌ஷன் காட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதால் யாஷ் என்ற நடிகர் காணாமல் போய் விடுகிறார்.

யாஷின் சகோதரியாக நடித்திருக்கும் நயன்தாரா, ஆரம்பத்தில் சில அதிரடியான காட்சிகளில் அமர்க்களமாக எண்ட்ரி கொடுத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் செட் பிராபர்ட்டி போல் அமைதியாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்.

யாஷின் முதல் மனைவியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், காதலியாக நடித்திருக்கும் தாரா சுதாரியா, வில்லியாக நடித்திருக்கும் ஹுமா குரேஷி என திரை முழுவதும் நிரம்பியிருக்கும் நாயகிகளின் நடிப்பை விட அவர்களின் ஆடைகள் தான் கவனம் ஈர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, கிராபிக்ஸ் காட்சிகளை சரியான முறையில் காட்சிகளுடன் இணைத்து படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார். 1947 – 1970 காலக்கட்டங்களுக்கான உடை மற்றும் கதைக்களத்தை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்திய வண்ணங்கள் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும், பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கிறது. படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருப்பதால், அவற்றுக்கு ஏற்ப பயணித்திருக்கும் பின்னணி இசை ஆங்காங்கே அதீத சத்தத்துடன் நம் காதை பதம் பார்த்து விடுகிறது.

பல கிளைக்கதைகள், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி, பெரும் குழப்பமடைந்திருப்பது கதையை விவரிக்கும் விதத்திலேலேயே தெரிந்து விடுகிறது. அவரது குழப்பம் பார்வையாளர்களிடத்திலும் ஒட்டிக்கொள்ள, கதை சொல்வது தந்தையா ? மகனா ? என்று புரியாமல் புலம்புவதோடு, முதல் பாதி படம் முடிந்ததும், என்ன கதை ? என்று மற்றவர்களிடம் கேட்கிறார்கள். ஒரு வழியாக இரண்டாம் பாதியில் இது தான் கதை, என்று உஜ்வல் குல்கர்னி புரிய வைத்தாலும், இதற்காகவா இந்த அக்கப்போரு…!, என்று நினைக்க தோன்றுகிறது.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் ஆகியோரது கதையில் பல கிளைக்கதைகள் இருந்தாலும், அவற்றை தெளிவாக விவரிக்காதது, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரமாண்டத்திற்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

இயக்குநர் கீது மோகன்தாஸ், கதை என்னவாக இருந்தாலும், ஹாலிவுட் பாணியில் அதை காட்சிப்படுத்த வேண்டும் என்ற முடிவில், தேவை இல்லாத காட்சிகளை திணித்து பார்வையாளர்களை பதம் பார்த்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை வன்முறை காட்சிகளும், பெண்கள் உடனான ஆபாசக் காட்சிகளும் அதிகம் நிறைந்திருப்பதோடு, எந்த ஒரு விசயத்தையும் சுவாரஸ்யமாக சொல்லாமல் பார்வையாளர்களை கடுப்பேற்றும் வகையில் சொல்லி படத்தை குப்பையாக்கியிருக்கிறார்.

முரட்டுத்தனம் மிக்க யாஷ், கோபப்பட்டு வெட்டுவது, சுட்டு வீழ்த்துவது என்று பயணிக்கும் போது ஒரு கட்டத்தில் படம் பார்ப்பவர்களுக்கே எங்கே நம் மீது கத்தி திரும்பி விடுமோ, என்ற பயம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு திரை முழுவதும் ஆயுதங்களும், பிணங்களும் நிறைந்து இரத்த ஆறு ஒடுகிறது.

ஸ்டைலிஷ் மற்றும் கம்பீரமான கதாநாயகன், பிரமாண்டமான காட்சியமைப்புகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை பாராட்டப்பட வேண்டியவை என்றாலும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை மற்றும் கவனம் ஈர்க்காத கதாபாத்திர வடிவமைப்பு படத்தை, துண்டு துண்டாக வெட்டி கொன்று விட்டது.

மொத்தத்தில், ‘டாக்ஸிக்’ மக்களை பாதிக்கும் நச்சுத்தன்மை.

ரேட்டிங் 2.5/5

pan india movie toxic reivetoxic movie reviewtoxic reviewToxic: A Fairy Tale for Grown-Ups Movie Revieww yash in toxic reviewடாக்ஸிக் திரைப்பட விமர்சனம்டாக்ஸிக் விமர்சனம்யாஷின் டாக்ஸின் விமர்சனம்
Comments (0)
Add Comment